Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழர் உரிமையை மீட்கும் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய இலங்கை திட்டம்: ராமதாஸ் கண்டனம்

தமிழர் உரிமையை மீட்கும் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய இலங்கை திட்டம்: ராமதாஸ் கண்டனம்

இலங்கைத் தமிழர்களின் உரிமையை மீட்பதற்காக கொண்டுவரப்பட்ட 13-வது அரசியல் சட்டத் திருத்தம் ரத்து செய்யப்படுவதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கைத் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் உள்ளிட்ட உரிமைகளை வழங்குவதற்காக இலங்கை அரசியல் சட்டத்தில் 13-வது திருத்தம் 1987-ல் செய்யப்பட்டது. இது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியும், இலங்கை அதிபர் ஜெயவர்தனேவும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி செய்யப்பட்டதாகும்.

ஆனால் இப்போது 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தையே அடியோடு ரத்து செய்ய இலங்கை அரசு திட்டமிட்டிருக்கிறது. இதற்காக குரல் எழுப்பும்படி கூட்டணி கட்சித் தலைவர்களை இலங்கை அதிபர் ராஜபட்ச தூண்டிவிட்டிருக்கிறார். இது தொடர்பாக தேசிய அளவில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அவரது சகோதரர் கோத்தபய ராஜபட்ச வெளிப்படையாகவே கோரியிருக்கிறார். இந்தத் திருத்தம் மட்டுமல்லாது இலங்கையில் உள்ள 9 மாநிலங்களின் எல்லைகளையும் மாற்றியமைத்து 5 மாநிலங்களாகக் குறைக்க ராஜபட்ச திட்டமிட்டிருக்கிறார். மாநில எல்லை மறுவரையறை என்ற பெயரில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கு மாநிலங்களை துண்டு துண்டாக கூறுபோட்டு மற்ற மாநிலங்களுடன் இணைத்து, எந்த மாநிலத்திலும் தமிழர் பெரும்பான்மையினராக இல்லை என்ற நிலையை ஏற்படுத்துவதுதான் இலங்கை அரசின் திட்டமாகும்.

13-வது சட்டத் திருத்தம் தொடர்பாக இந்திய அரசிடம் இலங்கை அரசு தெளிவற்ற நிலையில் தெரிவித்திருப்பதாகவும், அது தொடர்பாக தமிழக அரசின் கருத்தைத் தெரிவிக்கும்படி முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியிருப்பதாகவும் இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இலங்கை அரசின் இந்தச் சதி திட்டம் நிறைவேறிவிட்டால் தமிழர்கள் கொத்தடிமைகளாக மாற்றப்பட்டு விடுவர். எனவே, இலங்கை 13-வது அரசியல் சட்டத் திருத்தம் ரத்து செய்யப்படுவதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post