Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நாடார் சமுதாயத்தை கொச்சைப்படுத்தும் பாடப்பகுதியை உடனே நீக்க வேண்டும் நாடார் மகாஜன சங்கம் கோரிக்கை

மத்திய இடைநிலைக்கல்வி 9-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் நாடார் சமுதாயத்தை கொச்சைப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள பகுதிகளை உடனே நீக்க வேண்டும் என்று நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல் ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:-

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய இடைநிலைக்கல்வி 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் சாதிச்சண்டை மற்றும் உடைமாற்றம் என்ற தலைப்பில் நாடார் சமுதாயத்தையும், சமுதாய மக்களையும் மிகவும் கேவலமான முறையில் கூறப்பட்டுள்ளதை நாடார் மகாஜன சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

சத்திரியர்களாக இருந்து இந்த நாட்டை ஆண்ட நாடார் இனம், போரினால் நாட்டை இழந்து தேரிக்காடுகளில் தஞ்சம் புகுந்த போதிலும், தங்களது அயராத உழைப்பினாலும், பத்திரகாளியின் அருளாளும் மீண்டெழுந்த இனம் என்பது வரலாற்றுச்சுவடுகளில் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

தென்பகுதி சிவன்கோவில்கள் அனைத்தும் எங்களது முன்னோர்களான அரச குலத்தவர்களால் நிறுவப்பட்டது என்பதை கல்வெட்டு சான்றுகள் மூலம் அறிய முடியும். நாடார் சமுதாயம் என்பது தமிழக கலாசாரத்தின் ஓர் அங்கம். இந்த சமுதாயத்தில் இருந்து மிகப்பெரிய தலைவர்களும், வியாபார பிரமுகர்களும் தோன்றி நாட்டை வழிநடத்திச்செல்லும் அளவிற்கு சீரும் சிறப்புடன் இருந்து வருகின்றனர். இந்திய நாட்டின் பொருளாதாரத்தில் நாடார் சமுதாய மக்களின் பங்கு மிக குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

எங்களது இனம் மீண்டும் ஆட்சிக்கட்டிலுக்கு வரக்கூடாது என்பதற்காக ஆதிக்க சக்தியினரால் திட்டமிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டபோதிலும் ரத்தநாளங்களில் ஓடும் சத்திரிய குணத்தால் மீண்டெழுந்து வணிகம் செய்து பொருளீட்டி கல்விச்சாலைகளையும், ஆலயங்களையும் நிறுவி நாட்டிற்கு நல்ல குடிமக்களை உருவாக்கி வருகின்ற இனம்.

ஒழுக்கத்திலும், பண்பாட்டிலும், கல்வியிலும் உயர்ந்த எங்கள் இனத்தை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் திருவிதாங்கூர் மன்னர் சமஸ்தானத்தில் ஆதிக்க வர்க்கமாக இருந்து செயல்பட்டவர்கள், இன்று மத்திய அரசில் ஆதிக்க வர்க்கமாக அமர்ந்துகொண்டு எங்கள் இனத்தை இழிவுபடுத்தும் பணியை தொடங்கியுள்ளனர்.

இன்று இந்தியாவில் கிறிஸ்தவ மத கல்வி நிறுவனங்களுக்குப்பின், நாடார் சமுதாய மக்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் தான், தலைசிறந்து விளங்குகின்றன. கல்விப்பணியில் சென்ற நூற்றாண்டு முதலே, நாடார் சமுதாய மக்களின் பங்கு மறுக்க முடியாத ஒன்றாகும்.

தமிழகத்தில் தலைச்சிறந்து விளங்கும் மிகச்சிறந்த கல்வியாளர்கள், ஆட்சியாளர்கள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள், போலீஸ் அதிகாரிகள் போன்ற பலர் நாடார் சமுதாயத்தினரால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் கல்வியுடன் ஒழுக்கத்தையும் பயின்று இன்று நாட்டிற்கு சேவை செய்து வருகின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில் மேற்படி 9-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நாடார் சமுதாயம் மட்டுமின்றி, மற்ற சாதியினரையும் இழிவுபடுத்தும் ஈனச்செயல்களை கண்டித்து அய்யா வைகுண்டர் அவர்கள் பல அறவழி போராட்டங்களை நடத்தியுள்ளது இந்த புத்தகத்தில் வேண்டுமென்றே மறைக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டர் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்தபோதிலும், பிற சாதியினருக்காகவும் உரிமை கேட்டு போராடியவர். மேலும் இந்த புத்தகத்தில் கிறிஸ்தவ நாடார், இந்து நாடார் என்று தேவையில்லாமல் பிரிவினையும் கூறப்பட்டுள்ளது.

சாதி இரண்டொழிய வேறில்லை என்று கூறும் அரசாங்கம் நாடார் சமுதாயத்தினரை மட்டும் குறிப்பிட்டு பள்ளி மாணவர்களிடையே விஷ வித்துக்களை ஏன் விதைக்க வேண்டும்? ஒவ்வொரு சாதியினருக்கும் வரலாறு உண்டு. அவற்றை இந்த அரசாங்கம் பாடப்புத்தகத்தில் கொண்டு வர முடியுமா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

கல்வியையும், ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டிய பாடப்புத்தகங்களில், நாடார் இனத்தை பற்றி அவதூறாக கூறியிருப்பதை வன்மையாக கண்டிப்பதுடன் மத்திய பாடத்திட்டத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மத்திய மந்திரிகள் கபில்சிபல், புரந்தேஸ்வரி ஆகியோருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். எங்களது கோரிக்கையை நிறைவேற்ற தவறினால், நாடார் சமுதாயத்தினரின் அனைத்து அமைப்பினரையும் சென்னையில் ஒன்றுதிரட்டி அடுத்த கட்ட போராட்டங்களை அறிவிக்க இருக்கிறோம்.

நாடார் சமுதாயத்திற்காக குரல் கொடுத்துள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும், நாடார் மகாஜன சங்கம் தனது நன்றியை தெரிவிக்கிறது.

இவ்வாறு கரிக்கோல் ராஜ் கூறியுள்ளார்
[vuukle-powerbar-top]

Recent Post