Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மாற்றான்- திரைவிமர்சனம்!

மாற்றான்-பறக்கும் திரைக்கதை!
மாற்றான் படம் பார்க்க தேவி திரையரங்கிற்கு சென்றிருந்தேன். முதல் காட்சி பார்த்துவிட்டு, அப்போதுதான் உதயநிதி ஸ்டாலின் வெளியே வந்து கொண்டிருந்தார். வழக்கம் போலவே, சூர்யா படங்களுக்கு கூடும் கூட்டம் தான். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலே, படத்திற்கு சென்றிருந்தாலும் விறு விறு ஆரம்ப திரைக்கதை நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக சூர்யா நடித்திருக்கிறார். வெறுமனே கிராபிக்ஸ் வேலைகள் மட்டும் பயன்படுத்தப்படாமல், சூர்யாவின் வெவ்வேறு முக பாவனைகள் அருமை.

ஒரு சூர்யா, பகத்சிங் மற்றும் மார்க்சை படித்து புரட்சியாளராக உணர்வுள்ளவராக வருகிறார். இன்னொரு சூர்யா, தந்தை காசை செலவழித்து ஊர் சுற்றும் சராசரி குணமுள்ளவராக கலக்குகிறார். ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் இருவருக்கும் சேர்த்து ஒரே இதயம். இருவரும் ஒட்டிப் பிறந்திருந்தாலும், இருவேறு குணங்கள் கொண்ட கதாபாத்திரங்கள் இரசிக்க வைக்கின்றது. 

உலகம் முழுவதிலும் உணவுப் பொருட்களுக்கு பின்னால் உள்ள அரசியலை வெளிச்சம் போட்டு காட்டுகிறது படம். குழந்தைகள் உண்ணும் பால் பவுடரில் சூரியாவின் தந்தை கலப்படம் செய்ய, அது புரட்சி மனப்பான்மை சூர்யாவுக்கு தெரிய வருகிறது. இந்த விஷயத்தில் தனது தந்தையை அவர் கடுமையாக எதிர்க்க, மேல் நடக்கும் நிகழ்வுகளில் புரட்சி சூர்யா இறந்துவிடுகிறார். அவரின் இதயம், இன்னொரு சூர்யாவுக்கு பொருத்தப் பட, புரட்சி மனப்பான்மை அவருக்கும் வந்து அப்பாவின் நிறுவனம் செய்த அதிர வைக்கும் குளறுபடிகளை கண்டு பிடிக்கிறார்.

ஒளிப்பதிவாளராக கே.வி ஆனந்த் இருந்திருப்பதால், கிராபிக்ஸ் வேலைகள் நுணுக்கமாகவும், இரட்டையர் காட்சிகளில் வித்தியாசம் தெரியாமலும் செய்துள்ளார்கள். பாடல்கள் பரவாயில்லை ரகம் தான் என்றாலும், படக் காட்சியில் நன்றாக வந்துள்ளது. தீயே.. தீயே பாடல் ஆட வைக்கும்  ரகம். சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பாடல் காட்சிகளில், காஜலுக்கு வேலை இல்லை. 

புரட்சி சூர்யாவை முதல் பாதியில் காதலிக்கும் காஜல், அவர் இறந்தவுடன், இரண்டாம் பாதியில் இன்னொரு சூர்யாவைக் காதலிப்பது ஒன்றும் புரியவில்லை. பாடல்களுக்கு ஒரு நாடு, இரண்டாம் பாதி கதைக்கு ஒரு ரஷ்ய நாடு என, உலகம் முழுவதும் சுற்றி எடுத்திருக்கிறார்கள். மொத்தத்தில் மிக நீ....ள கமர்ஷியல் கலவை தான் மாற்றான். ஆனால், புதிய மாற்றங்களுடன்....!

படத்தின் ஆரம்பத்தில் வரும் விழிப்புணர்வு வாசகங்களை சூர்யா சரியாகவே படிக்கிறார். ஆனால். அதில் எழுத்துப்பிழை. 'புகைப்பிடித்தல் உடல்நலத்திற்க்கு தீங்கானது' என்று எழுதியுள்ளார்கள். கவனித்திருக்கலாமே கே.வி ஆனந்த்...!


-ராஜ்தியாகி 


[vuukle-powerbar-top]

Recent Post