Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பீட்சா: திரைவிமர்சனம்!

பீட்சா: திகட்டாமல் சாப்பிடலாம்!
பீட்சா படத்தின் போஸ்டரை பார்க்கும்போதே உங்களுக்கு கதை என்னவாக இருக்கும் என்று புரிந்திருக்கும். எதிரிகளை பீட்சாவை வெட்டுவது போல், ஒவ்வொன்றாக காலி செய்யும் ஹீரோயிஸம் என்று நினைத்தால் அது தவறு.  

பீட்சா டெலிவரி செய்யும் மைக்கேல் (விஜய் சேதுபதி) தன் காதலி அனு வுடன் (ரம்யா நம்பீசன்) திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வருகிறார் (Living Together). பேய், பூதம் மற்றும் அமானுஷ்யங்களில் நம்பிக்கையுள்ள அனு, மைக்கேலிடம் ஒரு நாள் அவற்றை நேரில் சந்திக்கும் தருணம் உனக்கும் வரும் என்கிறார். அனு சொன்னது போல அந்த ஒரு நாளும் வருகிறது. அதன் பிறகு என்ன ஆனது என்பதை சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்கள்.

விஜய் சேதுபதிக்கு இந்த படம் ஒரு மைல்கல். மனிதர் பங்களாவிற்குள் தனியாளாக இருந்து கொண்டு பயப்படும் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார் . காதல் காட்சிகளிலும் இவரது நடிப்பு யதார்த்தமாக இருக்கிறது . குள்ளநரி கூட்டத்திற்கு பிறகு காணாமல் போய் விட்டாரே என்று நான் வருத்தப்பட்ட ரம்யா நம்பீசன் சிறிய இடைவெளிக்கு பிறகு பீட்சாவில் நடித்திருக்கிறார் . 

இரண்டு லீட் கேரக்டர்களை தவிர படத்தில் வரும் பிட்சா கடை முதலாளி சண்முகமாக வரும் நரேன், இரண்டு பிட்சா கடை ஊழியர்கள், பேய் பங்களாவில் வரும் கணவன் - மனைவி என்று சின்ன சின்ன ரோல்களில் வருபவர்கள் கூட நம்மை கவர்கிறார்கள். 

படத்தின் ஒளிப்பதிவு உலகத்தரம். இடங்களை மாற்றாமல் நம்மை படத்தோடு ஒன்றச் செய்வதற்கு, நடிப்பும் திரைக்கதையும் போதாது, ஒளிப்பதிவும் மிக மிக அவசியம் என்பதை உணர்ந்து செய்திருக்கிறார் கோபி அமர்நாத். காதல் பாடல்களில் இசை , ஒளிப்பதிவு , படம் பிடித்த விதம் எல்லாமே அருமை. திகில் படம் என்பதற்காக வெறும் இரைச்சலை இசையாக கொடுக்காமல் தரமாக பின்னணி இசையை தந்திருக்கிறார் சந்தோஷ் நாராயணுக்கு வாழ்த்துக்கள்.

அனுஜா ஐயர் நடித்த 'சிவி' (கதாநாயகனின் கழுத்தில், பேய் உட்கார்ந்திருப்பதால், உடல் எடை கூடியிருப்பதாக காட்டி திகிலூட்டியிருப்பார்களே, அந்த படம் தான் சிவி!) திரைப்படத்திற்குப் பிறகு நான் இரசித்த திகில் திரைப்படம் 'பீட்சா'. வெறும் பேய் மசாலாவோ, காதல் மசாலாவோ என கமெர்ஷியல் மசாலா மட்டும்  தூவாமல், ஒளிப்பதிவு, திரைக்கதை, எடிட்டிங் என்று சகலத்திலும் ஈடுபாட்டுடன் உழைத்து செய்திருக்கிறார்கள் 'பீட்சா'வை. நீங்களும் தாராளமாய் உண்ணலாம்.

-ராஜ்தியாகி
[vuukle-powerbar-top]

Recent Post