Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பாடசாலைகளை இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்திய 24 நாடுகளின் பட்டியலில் இலங்கையும்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது, இலங்கை இராணுவம் மற்றும் காவல்துறையினரின் தேவைகளுக்கு பாடசாலைகள் பயன்படுத்தப்பட்டதாக புதிய அனைத்துலக மதிப்பீட்டு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. 

2005 ஜனவரிக்கும், 2012 ஒக்ரோபருக்கும் இடைப்பட்ட காலத்தை மைப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கை ஒன்றிலேயே, 24 நாடுகளில் ஆயுதப்படைகளும், ஆயுதக்குழுக்களும் பாடசாலைகளைத் தமது தேவைக்காகப் பயன்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. 

இதுதொடர்பாக நேற்று வெளியிடப்பட்ட, போரின் பாடங்கள் – மோதல்களில் பாடசாலைகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களின் இராணுவப் பாவனை என்ற 77 பக்க அறிக்கையில், பாடசாலைகளை ஆயுதப்படையினர் மோதல்களுக்குப் பயன்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ள 24 நாடுகளில்  இலங்கையும் உள்ளடங்கியுள்ளது. 

மோதல்களின் போது, அரசபடைகள் அல்லது அரச ஆதரவுப் ஆயுதப்படைகள் அல்லது எதிர்த்தரப்பு படைகள் இந்த நாடுகளில் ,பாடசாலைகள் கல்வி நிறுவனங்களை ஆயுதங்கள், விநியோகப் பொருட்களை சேமிக்கும் இடங்களாகவும், நடவடிக்கைத் தலைமையகங்களாகவும், வெடிபொருள் கிடங்குகளாகவும், தடுப்பு முகாம்கள், சித்திரவதை முகாம்களாகவும், தாக்குதல் மற்றும் கண்காணிப்பு நிலையங்களாகவும், ஆட்சேர்ப்புக் களமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதியில், பாடசாலைகள் கல்வி நிறுவனங்களை இராணுவத் தேவைகளுக்காக பயன்படுத்திய நாடுகளாக, ஆப்கானிஸ்தான், மியான்மார், மத்திய ஆபிரிக்க குடியரசு, சாட், கொலம்பியா, கோஸ்டாரிக்கா, கொங்கோ, ஜோர்ஜியா, இந்தியா, ஈராக், இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பாலஸ்தீனப்பகுதி, லிபியா, மாலி, நேபாளம். பாகிஸ்தான். பிலிப்பைன்ஸ், சோமாலியா, தென்சூடான், சிரியா, உகண்டா, தாய்லாந்து, யேமன் மற்றும்  இலங்கை ஆகியன பட்டியலிடப்பட்டுள்ளன. 

உலகம் முழுவதிலும், மோதல்களின்போது பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள், ஆயுதப்படைகளாலும் குழுக்களாலும், இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதால் மாணவர்கள் ஆபத்தை எதிர்கொள்வதாகவும், அவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் தாக்குதல்களில் இருந்து கல்வியை பாதுகாப்பதற்கான பூகோள கூட்டமைப்பு என்ற அமைப்பின் ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தாக்குதல்களில் இருந்து கல்வியை பாதுகாப்பதற்கான பூகோள கூட்டமைப்பு ஐ.நா முகவர் அமைப்புகளின் ஒரு கூட்டமைப்பாகும்.
[vuukle-powerbar-top]

Recent Post