Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

6.20 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் ~ காவிரி கண்காணிப்புக் குழு

தமிழகத்திற்கு, வரும் 15ம் தேதிக்குள், 6.20 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என காவிரி கண்காணிப்புக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவிரி நதிநீர் கண்காணிப்புக் குழு கூட்டம், மத்திய நீர் வளத்துறை செயலாளர் துருவ் விஜய் சிங் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழக தலைமைச் செயலாளர் சாரங்கி, கர்நாடக தலைமைச் செயலாளர் ரங்கநாத், உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

கேரளா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், கர்நாடக அரசு காவிரி நதிநீர் கண்காணிப்புக் குழுவின் உத்தரவை நிறைவேற்றவில்லை என தமிழகம் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதுகுறித்து குழுவின் தலைவர் துருவ் விஜய் சிங் கர்நாடக தலைமைச் செயலாளர் ரங்கநாத்திடம் விளக்கம் கோரியதுடன், குழுவின் உத்தரவை பின்பற்றும்படி கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த கர்நாடக தலைமைச் செயலாளர் ரங்கநாத், காவிரி நதிநீர் கண்காணிப்புக் குழு குறிப்பிட்ட அளவை விட அதிக தண்ணீர் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு விட்டதாகவும், கூடுதல் தண்ணீர் வழங்கும் அளவுக்கு தங்களிடம் இருப்பு இல்லை என்றும் தெரிவித்தார்.

இரு தரப்பு கருத்துக்களையும் கேட்ட துருவ் விஜய் சிங், நவம்பர் 15ம் தேதி வரை தமிழகத்தின் நீர்பாசனத் தேவைக்காக 4.05 டி.எம்.சி. தண்ணீர் தேவை என்று கூறினார்.

இத்துடன் ஏற்கனவே வழங்கப்பட வேண்டிய 2.15 டி.எம்.சி. தண்ணீரையும் சேர்த்து, மொத்தம் 6.20 டி.எம்.சி. நீரை கர்நாடக வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து காவிரி நதிநீர் கண்காணிப்புக் குழு, வரும் நவம்பர் 15ம் தேதி மீண்டும் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post