Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தொடரும் பேஸ்புக் கைதுகள்: கேள்விக்குறியாகும் அடிப்படை உரிமையான 'கருத்துரிமை'!

 பேஸ்புக் கைது குறித்து இணையதளம் ஒன்று வெளியிட்டிருக்கும் கருத்துப்படம்.                                                                                                                                        
கடந்த நவம்பர் 19-ம் தேதி சிவசேனா கட்சித்தலைவர் பால் தக்கரே குறித்து சமூக வலைப்பதிவில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நடவடிக்கைக்கு முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டு, அவர்களை கைது செய்த காவல்துறையினர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். 

பேஸ்புக்கில் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சித்தலைவர் ராஜ் தாக்கரே குறித்து கருத்து பதிவு செய்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியினர் கொடுத்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கையை எடுத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். எனினும் குறித்த நபரின் பேஸ்புக் கணக்கு திருடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையிலேயே இப்புதிய கைது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இவ்விவகாரங்களை அடுத்து 66(A) எனும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தை திருத்தி அமைப்பதற்கு மத்திய அரசு யோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இனிமேல் இவ்வாறு சமூகவலைத்தளங்களில் கருத்து பகிர்பவர்கள் மீது எவரும் புகார் அளித்தால், DCP தரத்தில் உள்ள அதிகாரி அல்லது IG தரத்தில் உள்ள அதிகாரி கவனத்திற்கு அதை கொண்டுவந்த பின்னர் அவருடைய அனுமதியின் பெயரிலேயே புகாரை பதிவு செய்ய வேண்டுமென கிராமப்புற மற்றும் மெட்ரோ காவல்துறை நிலையங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

குறித்த அதிகாரிகளிடமிருந்து அனுமதி கிடைக்காவிடின், எந்தவொரு புகாரையும் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டாமென இதன் மூலம் காவல்நிலையங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இனிவரும் காலத்தில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் பதியப்படும் எந்தவொரு புகார் தொடர்பிலும் உடனடியாக கூடுதல் கவனம் செலுத்த முடியுமென மத்திய அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. 

IT Act 66A எனப்படும் தகவல் தொழில்நுட்ப சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஷிரேயன்ஸ் சிங்கால் என்பவர் பொதுநலன் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கின் கீழ் IC Act 66(A) அரசியல் சாசனத்துக்கு உட்பட்டதா என்பதை இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கின் விசாரணையின் போது, 'இப்படியான சட்டப்பிரிவை எதிர்த்து ஏன் எவருமே பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யவில்லை' என தலைமை நீதிபதி விமர்சித்திருந்தார். 

இந்நிலையில் இத்தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டுமென மனித உரிமை ஆர்வலர்கள், சமூக வலைத்தள பாவணையாளர்கள் தொடர்ந்து அழுத்தம் பிரயோகித்து வருகின்றனர். 

நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை விமர்சித்து எழுதிய நபர் கைது செய்யப்பட்டமை, பாடகி சின்மயி மீது அவதூறு பரப்பியதாக இருவர் கைது செய்யப்பட்டமை, கார்டூனிஸ்ட் திரிவேதி, பேராசிரியர் அம்பிகேஷ் மகாபாத்ரா ஆகியோர் கேலிச்சித்திரம் வரைந்தமைக்காக கைது செய்யப்பட்டமை, தற்போது பால் தாக்கரே, ராஜ் தக்கரே ஆகியோரை பேஸ்புக்கில் விமர்சித்ததால் இடம்பெற்ற கைதுகள் என இவை அனைத்துமே குறித்த 66(A) IT Act சட்டப்பிரிவின் கீழ் தான் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இணைய தளங்கள் மற்றும் தகவல் நுட்ப புகார்களின் மீது அரசு தொடர்ந்து இதுபோன்ற மோசமான நடவடிக்கை எடுத்து வருவதை பார்க்கும்போது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தெரிவித்திருக்கும் அடிப்படை உரிமையான பேச்சுரிமை, கருத்துரிமை கேள்விக்குள்ளாகிறது என்பதே நம் கருத்து.

படம் நன்றி:santabanta
\
[vuukle-powerbar-top]

Recent Post