Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வீரபாண்டி ஆறுமுகம் மறைவு: இன்று மாலை இறுதிச்சடங்கு!

தி.மு.க தலைவருடன் வீரபாண்டி ஆறுமுகம்
சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று காலை மரணம் அடைந்தார். 75 வயதான அவர் சிறைக்கு சென்று வந்தது முதல் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவருக்கு மூச்சுத்திணறலும், நுரையீரலில் கோளாறும் இருந்தது. 

அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு நேற்று காலை 11 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. அவர் மறைந்த செய்தி அறிந்ததும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.     
வீரபாண்டி உடலைப் பார்த்துவிட்டு வந்த கருணாநிதி கதறி அழுதார்.

வீரபாண்டி ஆறுமுகத்தின் உடலுக்கு நேற்று மாலை 7 மணி முதல், பலர் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.தமிழ்நாடு முழுவதும் இருந்து கார், பஸ், வேன்களில் தொண்டர்கள் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். 

வீரபாண்டி ஆறுமுகத்தின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடக்கிறது. பூலாவாரியில் உள்ளஅவரது தோட்டத்தில் உடல் அடக்கம் நடக்கிறது. அவரது மகன் செழியன் என்ற நெடுஞ்செழியன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. அவர் மறைவையொட்டி நேற்று முதல் தி.மு.க. கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு உள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post