Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்திற்கு தயார் : மத்திய அரசு அறிவிப்பு

சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தத் தயார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டு விவகாரம் தொடர்பாக வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தக்கோரி நாடாளுமன்றத்தின் குளிர் கால கூட்டத் தொடரை நடத்த விடாமல் எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன.

எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், நேற்று நாடாளுமன்ற இரு அவைகளும் வியாழக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டன.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகளும், கூட்டணியை வெளியில் இருந்து ஆதரிக்கும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளும் அந்நிய முதலீட்டு அனுமதியை எதிர்ப்பதால், அதனை எதிர்க்கொள்ள காங்கிரஸ் கட்சி முயன்று வருகிறது. இந்நிலையில், டெல்லியில் நேற்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத், வாக்கெடுப்பு குறித்து தாங்கள் கவலைப்படவில்லை என்று தெரிவித்தார். மேலும், எந்த விதியின் கீழ் வாக்கெடுப்பு நடத்துவது என்பது குறித்து மக்களவை சபாநாயகர் தான் முடிவு செய்வார் என்று அவர் கூறினார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையுடன் இருப்பதாக கூறிய அவர், நாடாளுமன்றத்தில் எந்த விவாதம் நடைபெற்றாலும், அரசை ஆதரிப்பதில் கூட்டணி கட்சிகள் உறுதியாக இருப்பதாக குறிப்பிட்டார்.

சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் விவகாரத்தில், மத்திய அரசு தெளிவுடன் இருப்பதாகவும் அமைச்சர் கமல்நாத் தெரிவித்தார்.

இதனிடையே, நாடாளுமன்றத்தில் தொடர்ந்து தங்களது கோரிக்கையை வலியுறுத்துவது குறித்து, பாரதிய ஜனதாவின் நாடாளுமன்ற குழுக் கூட்டம், கட்சியின் மூத்த தலைவர் அத்வானி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில், அந்நிய நேரடி முதலீடு விவகாரத்தில் பாரதிய ஜனதா எடுத்துள்ள நிலை குறித்து அத்வானி விளக்கினார்.

சில்லறை வணிகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சிகளின் ஆதரவை பெறும் ஒரு பகுதியாக பிரதமர் மன்மோகன் சிங் ஏற்கனேவே இக்கட்சிகளின் தலைவர்களுக்கு விருந்து அளித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக நடந்து கொண்ட இக்கட்சிகள் இந்த விவகாரத்திலும் மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கும் என்றே எதிர் பார்க்கப்படுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post