Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வலிநிறைந்த இசைப் பயணத்தில் வெற்றி கண்ட தமிழ்க் கலைஞன் (பாடல் காணொளி இணைப்பு )

இலங்கையில் இசைத்துறை காலத்துக்கு ஏற்றாற்போல் பரிணாமம் கொள்ள வேண்டும். சரியான களம் கிடைக்காமையால் திறமையான கலைஞர்கள் மாறுபட்ட துறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது வருந்தத்தக்க விடயமாகும்.

எதிர்காலத்தில் நல்லதொரு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் நம்நாட்டின் திறமையான கலைஞர்களுக்கு களம் அதை;துக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன் என இசைத்துறையில் சாதனை படைத்துவரும் புலம்பெயர் இசையமைப்பாளர் ஸ்ரீ சியாமளாங்கன் தெரிவித்தார்.

ஸ்ரீ சியமளாங்கன் இசையமைப்பில் சங்கர் மகாதேவன் பாடிய ‘அழகிய தென்றலே…” எனும் பாடல் சமூக வலைத்தளங்களில் இலட்சக்கணக்கான வாசகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

கலாநிதி ஸ்ரீரங்கநாதன் மற்றும் கலாசூரி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் ஆகியோரின் புதல்வரான ஸ்ரீசியாமளாங்கன் அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். இசையமைப்பில் புத்தாக்கம் படைத்துவரம் சியாமளாங்கன் ‘கிரி கோடு ஹித்தக’ , ‘சாந்தனி’ ஆகிய புழ்பெற்ற சிங்கள மொழிப் பாடல்களுக்கு இசையமைத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.


கேள்வி: இசையமைப்பாளராக மிளிர்வதற்கு வழிசமைத்த உங்களுடைய ஆரம்பகாலம், அனுபவங்களை எங்களோடு பகிர்ந்துகொள்வீர்களா?

பதில்: இசை எனது துறையல்ல. நான் பொழுதுபோக்குக்காக இசையை கற்றுக்கொண்டவன். அடிப்படையில் நான் மென்பொருள் பொறியியலாளன். எனது பெற்றோர் இசைத்துறை சார்ந்திருந்த காரணத்தினால் எனக்கும் சிறுவயது முதலே ஆர்வம் இருந்தது.

கணனிசார் துறையில் ஈடுபட்டிருந்த ஆரம்பகாலத்தில் இசையையும் கற்றுக்கொண்டேன். ஹிந்துஸ்தானி இசையைக் கற்றுக்கொண்டு 19 ஆவது வயதில் வட இந்திய சங்கீதத்துறையில் புகழ்பெற்ற விருதுகளில் ஒன்றான விஷாரத் விருதினைப் பெற்றேன்.

அதேபோன்று பிரபல பின்னணிப் பாடகர்கள், இசையமைப்பாளர்களுடன் இணைந்து அவர்களுடைய அனுபவங்களைப் பெறும் வாய்ப்பு கிடைத்தது. 1994 ஆம் ஆண்டு ‘ஏனடா மானிடா..’ என்ற பாடலுக்கு இசையமைத்தேன். அப்போது வாய்ப்புகள் அதிகமாக கிடைப்பதில்லை. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினூடாக அந்தப் பாடலை வெளியுலகுக்கு அறிமுகம் செய்ய முடிந்தது. 1996 களில் இலங்கை வானொலியில் சந்தன மேடை என்ற நிகழ்ச்சி களம் தந்தது.

இசைத்துறை சார்ந்த பின்னணியைக் கொண்டவன் என்பதாலும் இசை மீது கொண்ட ஆர்வம், ஈடுபாட்டின் காரணமாகவும் எனது பயணத்தை செவ்வனே தொடர முடிகிறது.

கேள்வி: இலங்கையில் உங்களுடைய இசையப்பயணத்தை ஆரம்பித்தபோது நீங்கள் எதிர்நோக்கிய சவால்கள் என்ன?

பதில்: மிகவும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தேன். நான் மட்டுமல்ல அப்போதிருந்த கலைஞர்கள் எல்லாருமே தங்களை நிலை நிறுத்திக்கொள்வதில் பாரிய சிக்கல்கள் இருந்தன.

ஆரம்பகாலங்களில் ஒலிப்பதிவுகள் செய்வதற்கு கலையங்கள் இருக்கவில்லை. இலங்கை வானொலியின் கலையகம் மாத்திரமே இருந்தது. அதில் ஒலிப்பதிவு செய்ய பணம் கொடுக்க வேண்டும். குறிப்பிட்டளவு நேரம் மாத்திரமே ஒதுக்குவார்கள். அந்த நேரத்துக்குள் முடிக்க வேண்டும்.

தொழில்நுட்பங்களின் வளர்ச்சி இலங்கையில் குறைவாக இருந்தது. தமிழ் ஊடகங்கள் உருவாகாத காலகட்டத்தில் இலங்கை வானொலி மாத்திரமே கைகொடுத்தது. கலைஞன் ஒருவனுக்கு சமூக அங்கீகாரம் கிடைக்க வேண்டுமாயின் கடுமையான உழைப்பும் விடா முயற்சியும் அவசியம்தானே? அவையே என்னை வலுப்படுத்தின.

கேள்வி: சங்கர் மகாதேவனுடன் இணைந்து பணியாற்றியமை குறித்து…

பதில்: சங்கர் மகாதேவன் இங்கு (அவுஸ்திரேலியாவுக்கு) நிகழ்ச்சியொன்றுக்காக வருகை தந்திருந்ததை அறிந்து அவருடன் தொடர்புகொண்டேன். எனது பாடல் குறித்து அவருடன் விரிவாகப் பேசினேன். அவரும் ஒலிப்பதிவுக்காக எனது கலையகத்துக்கு வர சம்மதித்தார்.

அவர் என்னைச் சந்தித்தபிறகு அழகிய தென்றலே பாடலை மெதுவாக முணுமுணுத்துக்கொண்டிருந்தார். அப்போதே எனது பாடல் வெற்றியடையப்போகிறது என நான் ஊகித்துக்கொண்டேன்.

அவருடன் பணியாற்றியதை மறக்க முடியாது. பழகுவதற்கு இனிமையானவர். என்னைப்போலவே இலங்கையர்கள் உள்ளிட்ட ஏனைய நாட்டவர்களோடு இணைந்து இசைப் பணியாற்ற ஆர்வமுள்ளதாகக் குறிப்பிட்டார்.

கேள்வி: கிரி கோடு ஹித்தக…, சாந்தனி பாயலா… ஆகிய படல்களின் வெற்றி குறித்து..

பதில்: கிரி கோடு ஹித்தக பாடல் பாத்திய சந்தோஷக்காக நான் இசையமைத்துக்கொடுத்த பாடல். ஆனால் பெரும்பாலானோருக்கு நான் தான் இசையமைத்தேன் என்பது தெரியாது.

நான் இறுதியாக இலங்கைக்கு வந்த சமயம் விமான நிலையத்திலிருந்து பலருக்கு அழைப்பினை ஏற்படுத்தினேன். அவர்களில் அதிகமானோரின் அழைப்புப் பாடல் கிரி கோடு ஹித்தக என்பதைக் கேட்டு அகமகிழ்ந்தேன்.

இவ்விரு பாடல்களினதும் வெற்றி எனது இசைப் பயணத்துக்கு சக்தியளிப்பதாகவே இருந்தது. ஏனென்றால் இலங்கையில் உள்ள அனைத்து சிங்கள மக்களையும் கவர்ந்த பாடல்களில் இவ்விரு பாடல்களும் அடங்குகின்றன.

கேள்வி: இலங்கையில் தமிழ் இசைத்துறையின் வளர்ச்சி குறித்து உங்களுடைய கருத்து என்ன?

பதில்: இலங்கையில் தமிழ் இசைத்துறை வளர்ச்சியடைந்துகொண்டுதான் வருகிறது. புதிய தொழில்நுட்பங்களில் தனியொருவராக இருந்து இசையமைத்தல் உள்ளிட்ட பல்வேறு புதிய அணுகுமுறைகள் காணப்படுகின்றன. ஆயினும் இன்னும் கூட கலைஞர்களுக்கு சரியான களம் கிடைக்கவில்லை என்றே கூற வேண்டும்.

இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகளைப் பொறுத்தவரையில் கலைத்துறையில் ஈடுபடும் ஒருவருக்கு சரியான களம் கிடைப்பதுடன் அதனைக் கொண்டே தனது குடும்பத்தை கொண்டு நடத்தக்கூடியளவு வருமானமும் கிடைக்கிறது. இலங்கையில் கலைத்துறையில் ஈடுபடும் ஒரு கலைஞன் அதனையே நம்பி வாழ்க்கை நடத்த முடியுமா? ஆதலால் அவர்கள் வேறு துறைகளில் தம்மை நிலைநாட்டிக்கொண்டு இசைத்துறையை பகுதி நேரத் தொழிலாக செய்து வருகிறார்கள்.

கலைஞர்களின் வளர்ச்சிக்கு ஊடகங்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். இலங்கையில் ஊடகங்களின் பங்களிப்பு இல்லை என நான் கூறவில்லை. இலங்கைக் கலைஞர்களுக்கான பங்களிப்பு இன்னும் தேவைப்படுகிறது என்றே குறிப்பிட விரம்புகிறேன்.

எமது ஊடகங்கள் பெரும்பாலும் தென்னிந்திய சினிமாவையே சார்ந்துள்ளன. உள்நாட்டுக் கலைஞர்களுக்கும் இடம் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்களின் ஊடாக உள்நாட்டு இசைத்துறை வளர்ச்சியடையும்.

திறமையான கலைஞர்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். சரியான களம் கிடைக்காத காரணத்தினால் அவர்களும் தென்னிந்திய வாய்ப்புகளையே தேடிச் செல்பவர்களாக இருக்கிறார்கள்.

இலங்கையில் இசைத்துறை காலத்துக்கு ஏற்றாற்போல் பரிணாமம் கொள்ள வேண்டும். சரியான களம் கிடைக்காமையால் திறமையான கலைஞர்கள் மாறுபட்ட துறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது வருந்தத்தக்க விடயமாகும்.

கேள்வி: சந்தர்ப்பம் கிடைக்குமானால் நம்நாட்டுக் கலைஞர்களையும் உங்களோடு இணைத்துக்கொள்வீர்களா?

பதில்: நிச்சயமாக. எதிர்காலத்தில் நல்லதொரு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் நம்நாட்டின் திறமையான கலைஞர்களுக்கு களம் அமைத்து கொடுக்கத் தயாராக இருக்கிறேன். அதாவது இந்தியா உள்ளிட்ட ஏனைய நாட்டுக் கலைஞர்களுடன் நம் நாட்டுக் கலைஞர்களையும் இணைத்து பணியாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளேன்.

கேள்வி: தென்னிந்திய சினிமாவிலும் காலடி எடுத்துவைக்கும் திட்டம் உள்ளதா?

பதில்: திட்டம் என்றில்லை. சந்தர்ப்பம் கிடைக்குமானால் சாதித்துக்காட்டுவேன். எனது தொழிலுக்கு அப்பால் பொழுதுபோக்காகவே இசைத்துறையில் ஈடுபட்டுள்ளதால் நேரம் ஒதுக்கி காத்திரமான படைப்புகளை வழங்குவதையே நான் விரும்புகிறேன்.
[vuukle-powerbar-top]

Recent Post