Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சாதி அரசியலின் தூண்டுதலே வன்முறைக்கு காரணம். தமிழராய் ஒன்றுபடுவோம் - சீமான்


இன்று நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு : 

சாதிய அரசியலின் நேரடி, மறைமுகத் தூண்டலே சாதிய வன்முறைகளுக்கு காரணமாகும். தமிழராய் ஒன்று படுவோம்:  நாம் தமிழர் கட்சி

தமிழ்நாட்டில் சமீப காலங்களில் நடந்துவரும் சாதிய அடிப்படையிலான வன்முறை சம்பவங்கள் அனைத்தும் தமிழ்த் தேசிய இனத்தின் ஒற்றுமைக்கும், தமிழர்களிடையே பொதுவாக நிலவிவரும் சமூக நல்லிணகத்திற்கும் எதிரான சாதிய அரசியல் சக்திகளின் திட்டமிட்ட தூண்டுதலால் நடைபெற்று வருகின்றன. 

தமிழர் எனும் தேசிய இன அடையாளத்திற்குட்பட்ட மக்களுக்குள் நடந்துவரும் இந்த வன்முறையில் சிந்தப்படுவது தமிழனின் குருதியே, இந்த வன்முறையில் சிதைக்கப்படும் சொத்துக்கள் தமிழ் தேசிய இனத்தின் பொருளாதார வாழ்வை திட்டமிட்டு சீர்குலைக்கும் சூழ்ச்சியே. இப்படிப்பட்ட வன்செயல்கள் அனைத்தையும் நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. 

இந்த வன்செயல்களால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைகண்டு பெரும் வருத்தத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் விடுதலைக்காக போராடிய பெருந்தமிழர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, அவருடைய சமாதிக்குச் சென்று மரியாதை செய்துவிட்டு திரும்பியவர்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசியும், கல்லெறிந்து தாக்கியும் நடந்த வன்முறைகளில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வன்முறையின் பின்னணியில் இருந்து செயல்பட்டது சாதிய அடிப்படையிலான அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் சக்திகளே.

இதேபோல், தர்ம்புரி மாவட்டத்திலுள்ள சில கிராமங்களில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்களின் சொத்துக்களை குறிவைத்து கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டதும் சாதிய அரசியலின் தூண்டுதலால் நடந்ததே. ஒரு சாதி மறுப்புத் திருமணத்தை காரணமாக்கி, சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் வாடும் மக்களின் வீடுகளின் மீது தாக்குதல் நடத்தி, அம்மக்களின் பொருளாதாரத்தை முழுமையாக நிர்மூலமாக்கி, அவர்களின் எதிர்காலத்தை இருண்டதாக்கியது மட்டுமின்றி, அங்கு வாழும் இரு சமூகங்களிடையே ஒரு நிரந்தர பகைமைக்கான விதையை தூவியுள்ளது தர்ம்புரி வன்முறை வெறியாட்டக் கும்பல். 

தர்ம்புரி வன்முறைக்கு காரணமாக சொல்லப்படும் காதல் மணமும், சாதி மறுப்புத் திருமணமும் தமிழர் சமூகத்திற்கு அந்நியமானதுமல்ல, தமிழரின் பெருமைமிக்க வரலாற்றில் நடந்திராத்தும் அல்ல. காதல் என்பது மானுட இனங்களுக்கிடையே தோன்றும் இயல்பான இயற்கையான உணர்வே. எனவே அதன் தொடர்ச்சியாக நிகழும் திருமணங்களும் தமிழர் சமூக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டே வந்துள்ளது. ஆனால் சாதிய செல்வாக்கை மட்டுமே நம்பி சங்கம் உருவாக்கி, அரசியல் நடத்தும் சக்திகள் வெளிப்படையாகப் பேசி தூண்டிவிட்ட சாதிய வெறுப்புணர்ச்சியே தர்ம்புரி வன்முறைக்கு காரணமாகியுள்ளது. 

இப்படிப்பட்ட சாதிய அரசியல் சக்திகளை, அவைகளின் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுக்களை அனுமதித்தே இப்படிப்பட்ட கொடூரமான வன்முறைச் சம்பவங்கள் நிகழக் காரணமாகும். இப்படிப்பட்ட சாதிய அரசியல் சக்திகளை தங்களின் அதிகாரத்தை கைப்பற்றும் தேர்தல் அரசியலிற்காக தேசிய, திராவிட கட்சிகள் கூட்டணி வைத்துக்கொண்டு பலனடைந்ததன் பக்க விளைவே, அவைகளும் பலம்பெற்று தமிழ் இனத்தை இப்படிப்பட்ட வன்செயல்களின் மூலம் பிளக்கின்றன. 

நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை, தமிழ்த் தேசிய இன மக்கள் அனைவரும் தங்களுடைய சாதி, மத எல்லைகளைக் கடந்து நின்று, தாங்கள் அனைவரும் ஒரு பாரம்பரியமிக்க, வரலாற்றுச் சிறப்புடைய தேசிய இனத்தி்ன் பிள்ளைகள் என்பதை உணர வேண்டும் என்பதற்காக உழைத்துக்கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கும் கட்சியாகும். இன்றைக்கு இனப் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டு, கேட்பாரின்றி திணறிக்கொண்டிருக்கும் ஒரு அடிமைத் தேசிய இனமாகவே தமிழ்த் தேசிய இன மக்கள் இருக்கின்றனர். இனத்தின் விடுதலையில் இருந்து, அணை நீர் பிரச்சனை, ஆற்று நீர் பிரச்சனை என்று அனைத்திலும் வஞ்சிக்கப்பட்டு, தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து நிற்கும் இனமாக தமிழ்த் தேசிய இன மக்கள் இருக்கின்றனர். 

எனவே,நம் இனத்தின் விடுதலையை வென்றெடுக்கவும், இழந்த உரிமைகளை மீட்டெடுக்கவும் நாம் ஒரு தேசிய இன மக்கள் என்கிற ஒற்றை அடையாளத்தோடும், உணர்வோடும் போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதனை தமிழ் மக்கள் அனைவரும் தெளிவாக உணர்ந்து நமக்கான அரசியலை நாம் உருவாக்கிட, இப்படிப்பட்ட குறுகிய மனப்பான்மைகளை வளர்க்கும் எண்ணங்களில் இருந்து விடுபட்டு, இனத்தின் விடுதலைக்கும், எதிர்காலத்திற்கும் ஒரு வலிமையான அரசியல் படைக்க ஒன்றிணைந்து முன்வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது. 

அதுமட்டுமின்றி, இந்த வன்முறைகளில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணத்தையும், சொத்துக்களை இழந்து நிற்கும் மக்களுக்கு, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை சரியாக மதிப்பீடு செய்து, இழப்பிற்கு நிகரான நிதி உதவியையும் தமிழக அரசு அளித்திட வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது. 

நாம் தமிழர் கட்சிக்காக, 
செந்தமிழன் சீமான் 
தலைமை ஒருங்கிணைப்பாளர்
[vuukle-powerbar-top]

Recent Post