Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பில் அசோக் கே.காந்தாவுடன் மனோ கணேசன் குழுவினர் பேச்சு!


இந்தியா தமிழ் நாட்டின் கூடங்குளம் பகுதி கடற்கரைக் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தலைமையிலான குழுவினர் இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகாரலயத்திர் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற இந்த சந்திப்பில் மனோ கணேசன் தலைமையில் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பின் பிரதிநிதி வண. ஜெயபாலன் குரூஸ் ஐக்கிய சோஷலிச பொது செயலாளர் சிறிதுங்க ஜெயசூரிய சுதந்திர வர்த்தக வலய தொழிற்சங்க இணை செயலாளர் அன்டன் மார்கஸ் ஜனநாயக மக்கள் முன்னணியின் உதவி பொது செயலாளர் சண். குகவரதன் ஊடகவியலாளர் குசல் பெரேரா சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த கலந்துரையாடலில் இந்திய உயர் ஸ்தானிகாரலயம் சார்பாக இலங்கைக்கான பிரதி உயர் ஸ்தானிகர் குமரனும் இதில் கலந்து கொண்டார்.
இந்த சந்திப்பின் போது கூடங்குளம் அணு ஆலையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் அணுக்கழிவுகள் அகற்றப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும் இடம் தொடர்பாகவும் எழுந்துள்ள கேள்விகளை இலங்கை குழுவினர் இந்திய தூதுவரிடம் எழுப்பினர். குறிப்பாக மன்னார் வலயத்தில் வாழும் பொது மக்கள் மற்றும் மீனவ சமுதாயத்தின் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச உணர்வுகள் இந்திய தரப்பினரிடம் தெரிவிக்கப்பட்டன.
இவை தொடர்பாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்படுவதற்காக எழுத்து மூலமான ஆவணம் ஒன்றையும் இந்திய உயர் ஸ்தானிகரிடம் இலங்கை குழுவினரின் சார்பாக மனோ கணேசன் கையளித்தார். இந்த ஆவணத்தின் பிரதிகள் தமிழக முதல்வர் ஜெயலிதா ஜெயராம் அணு சக்திக்கு எதிரான இந்திய மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டாளருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது மனோ கணேசன் கூறியதாவது
'கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக எமக்கு மூன்று கேள்விகள் உள்ளன. ஒன்று விபத்து நிகழுமானால் அதை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் எவை? அபாயகரமான அணுமின் கழிவுகளை இந்திய அரசு எவ்விதம் பாதுகாப்பாக அகற்றி வைக்க போகின்றது? இலங்கையில் வட மாகாணத்தில் குறிப்பாக மன்னார் வலயத்தில் வலயத்தில் வாழும் மக்களின் வாழ்வாதார நெருக்கடிகளுக்கான விசேட ஏற்பாடுகள் எவை ஆகிய கேள்விகளுக்கு விடை காணவே இந்த சந்திப்பு நடைபெற்றது .
ரஷ்யாவின் செர்னோபில் ஜப்பானின் புகுசீமா மற்றும் டயிச்சி ஆகிய நகரங்களில் ஏற்பட்ட விபத்துகளையும் உத்தேச சுனாமி அபாயம் தொடர்பான கருத்துகளையும் நாம் பேச்சுவார்த்தைகளின் போது வெளிப்படுத்தினோம். யூரேனியம் கழிவுகள் கன்னியாகுமரி கடல் பகுதியில் தாட்டு வைக்கப்பட போகின்றது என்ற நமக்கு தெரிய வந்துள்ள தகவல் தொடர்பிலும் நாம் கேள்விகள் எழுப்பினோம்.
இதன்மூலம் இலங்கையின் மன்னார் வலயம் உட்பட மேற்கு கரையில் வாழும் மக்களின் நல்வாழ்வுக்கு ஏற்படக்கூடிய குந்தகங்கள் தொடர்பிலும் எமது கவலையை நாம் தெரிவித்தோம். இந்த நடவடிக்கைகள் ஏற்கனவே துன்பத்தில் உலவும் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரங்களுக்கு ஏற்படுத்த கூடிய சவால்களையும் நாம் தூதுவரிடம் தெரிவித்தோம்.
இந்த அணுக்கழிவுகள் தொடர்பாக இந்திய உயர்நீதிமன்றம் செப்டெம்பர் பதினேழாம் திகதி அறிவித்துள்ள நிலைப்பாடு தொடர்பாகவும் நாம் உயர் ஸ்தானிகரின் கவனத்துக்கு கொண்டு வந்தோம். இது தொடர்பான அச்ச உணர்வு இந்திய மண்ணிலேயே ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் காரணமாக பெரும் மக்கள் போராட்டம் தமிழகத்தில் வெடித்துள்ளது.
போராடும் மக்கள் ஏற்றுக்கொள்ளும் பதில்களை வழங்கி போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர இந்திய மத்திய அரசாங்கத்தினால் இதுவரையிலும் முடியாமல் போயுள்ளது. அத்துடன் போராட்டக்காரர்களுக்கு எதிராக இந்திய அரசு எடுத்து வரும் கடும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் எமது கவலையையும் நாம் தெரிவித்தோம்.
இவற்றுக்கு பதிலளித்த இந்திய தூதுவர்  தமது அரசு கூடங்குளம் அணு ஆலை தொடர்பாக எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான விபரங்களை எமக்கு எடுத்துக்கூறினார். எமது ஆவணத்தை இந்திய பிரதமருக்கு அனுப்பி வைப்பதாகவும்  இது தொடர்பாக தொடந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதாகவும்  இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா எமக்கு உறுதி அளித்தார்' என்றார்.
[vuukle-powerbar-top]

Recent Post