Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நடுவண் பாட திட்டத்தில் நாடார் பற்றிய பகுதியை நீக்க வேண்டும் - முதல்வர் கடிதம்பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:– 

நாடார் சமுதாயம் 

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 9–ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், நாடார் சமுதாயம் குறித்த ஆட்சேபகரமான குறிப்புகளை நீக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள நாடார் சமுதாய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். டெல்லி தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) வெளியிட்ட இந்த பாடப்புத்தகத்தில் ‘ஆடை அணிதல் – ஒரு சமூக வரலாறு’ என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள 8–வது அத்தியாயப் பாடத்தில் காலனி ஆதிக்க இந்தியாவில் மாற்றம் என்ற துணைத் தலைப்பின் கீழ் 168–ம் பக்கத்தில் 4–வது பத்தியின் முதல் பகுதி, சாதி மோதலும், ஆடை மாற்றமும் என்பது பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது. இதில், நாடார் சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் பல கருத்துகள் இடம்பெற்றுள்ளன. 

பூர்வீக குடிமக்கள்

ஆனால், இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் தவறானவை. உண்மையில், நாடார் சமுதாயத்தினர்தான் கன்னியாகுமரி மாவட்டத்தின் பூர்வீக குடிமக்கள் ஆவர். தமிழ் நாகரிகத்தின் தொட்டிலாக கருதப்படும் கடல் கொண்ட குமரி கண்டத்தின் எஞ்சியுள்ள ஒரு பகுதியே குமரி மாவட்டம் ஆகும். தொல்காப்பியம், சிலப்பதிகாரம் ஆகிய இலக்கியங்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன.

புகழ்பெற்ற தமிழ்ப் புலவர்களான தொல்காப்பியர், அதங்கோட்டு ஆசான் ஆகியோர் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர்கள்தான். அய்யா வைகுண்டரின் மேலாடை புரட்சி எனும் தோள்சீலை புரட்சியும், அவரது சமூக சீர்திருத்தங்களும் இந்த பாடப்புத்தகத்தில் புறக்கணிக்கப்பட்டு உள்ளன. 

மூவேந்தர் பரம்பரை

சேர, சோழ, பாண்டிய நாடுகளை ஆண்டு வந்த பரம்பரையின் வழித்தோன்றல்களே நாடார்கள் என்று கூறப்படுகிறது. 

நீலமைக்காரர்கள் (நாடான்கள்) பின்பற்றி வரும் பாரம்பரிய பழக்க வழக்கங்களையும், நாடார்கள் அதிகம் வாழும் திருச்செந்தூர் தேரி பனங்காடுகள் மற்றும் பாண்டியர்களின் தலைநகராக விளங்கிய கொற்கையில் கிடைத்துள்ள புராதன சின்னங்களையும் பார்க்கும்போது, நாடார்கள் முற்கால பாண்டியர்களின் வழித்தோன்றல்கள் என்று கருத இடம் இருக்கின்றது. இடைக்காலத்தில் சேர, பாண்டிய மன்னர்களின் ஆட்சிகளில், நாடார்கள் நிர்வாகிகளாகவும், கணக்கர்களாகவும் பணிபுரிந்தனர் என்பது நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் கிடைத்த இரண்டு கல்வெட்டுகள் மூலம் தெரியவந்துள்ளது. 

ஆகவே, சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகத்தில் கூறப்பட்டிருப்பது போல, நாடார் சமுதாயத்தினர், கீழ் வகுப்பினர் அல்ல. மாறாக, அவர்கள் ஒருகால கட்டத்தில் தென்னிந்தியாவில் ஆட்சியாளர்களாக இருந்து வந்தனர். 

பெருந்தலைவர் காமராஜர் 

 கால ஓட்டத்தில், நாடார்கள் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாராட்டத்தக்க அளவு முன்னேற்றம் அடைந்தனர். கல்வியிலும், வியாபாரத்திலும் அவர்கள் தங்கள் கடும் உழைப்பாலும், மன உறுதியாலும் வெற்றி அடைந்தனர். காமராஜர் உள்ளிட்ட பெருந்தலைவர்கள் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான். சமூகத்திற்கு அவர்கள் ஆற்றிய பங்கு அளவிட முடியாதது ஆகும்.நாடார் சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு சங்கத்தினர், தங்களது சமூகத்தைப் பற்றி ஆட்சேபகரமான கருத்துகள் சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது குறித்து கண்டனம் தெரிவித்து எனக்கு மனுக்கள் அளித்துள்ளனர். அந்த பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள உண்மைக்கு மாறான விவரங்கள், நாடார்கள் குறித்து மாணவர்கள் மனதில் தவறான கருத்தை உருவாக்கக்கூடும். 

சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்க நடவடிக்கை

எனவே, இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட்டு, சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சகத்தை தாங்கள் அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post