Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. அரசு நடவடிக்கை எடுக்குமா?


தமிழகத்தில் இயங்கிவரும் தொடர்வண்டி பயணச் சீட்டில் இந்தியை திணிப்பதில் ஆர்வம் காட்டும், தென்னக தொடர்வண்டி நிர்வாகம் தமிழை முற்றிலும் புறக்கணிக்கிறது. துவக்கத்தில் அச்சிடப்பட்ட சிறு அட்டையாக இருந்த பயணச்சீட்டு, பின்னர் மின்னணு பயணச்சீட்டாக மாற்றமடைந்தது. 

இதில், மாநில மொழி, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில், தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். தமிழகத்தில் இயங்கிவரும் தொடர் வண்டிகளுக்கான பயணச்சீட்டுகளில், தகவல்கள், தமிழில் குறிப்பிடப்பட்டது. நாளடைவில் கணிணி பயணச்சீட்டு அறிமுகமாகி, இதிலும் தமிழ், இந்தி, ஆங்கில மொழிகள் இடம்பெற்றது. தமிழ் மட்டுமே அறிந்தவர்கள், தகவல்களை எளிதில் அறிந்துகொள்ள முடிந்தது. பயணச்சீட்டு தவறாக வழங்கப்பட்டால், உடனடியாக அறிந்து, அதை மாற்றிக்கொள்ளவும் முடிந்தது. தற்போதைய பயணச்சீட்டில், தமிழ் இன்றி, இந்தி, ஆங்கிலம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. 


இதனால் தமிழ் மட்டும் அறிந்தவர்கள் திண்டாடுகின்றனர். தகவல்கள், தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் குறிப்பிடப்பட்ட, நீண்டகால நடைமுறை புறக்கணிக்கப்பட்டு, கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே குறிப்பிடப்படுகிறது. 

தமிழகத்தில் உள்ள பயணச்சீட்டு முன்பதிவு மையங்களில், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில், பயணச்சீட்டு வழங்குவதும் வாடிக்கையாக உள்ளது.சாதாரண மற்றும் முன்பதிவு பயணச்சீட்டுகளில், இந்தியை மட்டுமே திணிப்பதில் ஆர்வம்காட்டும் ரயில்வே நிர்வாகம், தமிழை முற்றிலும் புறக்கணித்து வருகிறது.

மேலும் தொடர்வண்டிகளின் முன்பதிவு செய்யப்பட்ட நபர்களின் பெயர்களை பட்டியலாக  தொடர் வண்டிப் பெட்டிகளில் ஒட்டுவார்கள். இந்த பட்டியலில் ஹிந்தி மொழி முதன்மையாகவும் பின்பு ஆங்கிலத்திலும் அச்சிட்டு தொடர்வண்டி நிர்வாகம் வெளியிடுகிறது. ஹிந்தி மட்டுமே படிக்கத் தெரிந்த மக்கள் மட்டும் படிக்கலாம், அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தமிழ் மட்டுமே படிக்கத் தெரிந்த மக்கள் எவ்வாறு தங்கள் பெயர்களை படிப்பார்கள் என்று சிறிதளவும் இந்திய  தொடர்வண்டி நிர்வாகம் சிந்திப்ப தில்லை. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து அறுபது ஆண்டுகள் ஆகிறது . இன்னும் ஹிந்தியை தவிர்த்த மற்ற மாநில மொழிகளுக்கு உரிய மரியாதையோ, உரிமைகளோ வழங்கப்பட வில்லை என்பது வேதனைக் குரியது. தமிழர்களும் மத்திய அரசுக்கு வரிப் பணம் கட்டுகின்றனர். இருந்தும் தமிழ் மொழியை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதே பலருடைய கேள்வியாக உள்ளது . தமிழ்நாட்டில் பயணம் செய்பவர்களின் பெயர்கள் தமிழில் இருப்பது தானே நியாயம். அவ்வாறு இல்லாமல் அவர்கள் பெயர்கள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் இருப்பது அவசியமற்றது. தமிழ் நாட்டிற்குள்  பயணம் செய்யும் அத்தனை தொடர்வண்டிகளிலும் தமிழ் மொழி , ஆங்கிலம் மட்டுமே இருந்தால் போதுமானது. இந்தி இந்தியாவின் தேசிய மொழியும் அல்ல . அப்படி இருக்க ஏன் இந்தியை தமிழ் நாட்டில் உள்ள தொடர் வண்டியில் திணிக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இது மத்திய அரசின் இந்தி வெறியை காட்டுகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர் தமிழ் மக்கள். இது  குறித்து தமிழக கட்சிகள்  போராட்டம் நடத்த வேண்டும்  என்பதே பலரது  கோரிக்கையாக உள்ளது. 



[vuukle-powerbar-top]

Recent Post