Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கம்போடியா நாட்டில் இருந்து சென்னைக்கு கப்பல் மூலம் மணல் இறக்குமதி

தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் கம்போடியா நாட்டில் இருந்து சென்னைக்கு கப்பல் மூலம் மணல் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, மணல் விலை பெருமளவு குறைய வாய்ப்பு உள்ளது.

சென்னை மாநகரம் நாளுக்கு நாள் மிக வேகமாக வளர்ந்து கொண்டே செல்கிறது. இந்த அசுர வளர்ச்சியின் காரணமாக நகரிலும், புறநகர் பகுதிகளிலும் ஏராளமான குடியிருப்புகள், அடுக்குமாடி வீடுகள், பிரம்மாண்டமான வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. கட்டுமான பணிக்கு அடிப்படை மூல பொருளாக இருப்பது மணல்தான். முன்பு தனியார் மணல் குவாரிகள் மூலம் மணல் அள்ளப்பட்டு விற்கப்பட்டு வந்தது.

தனியார் அளவுக்கு அதிகமாக மணலை அள்ளியதாலும், அதிக விலைக்கு விற்பனை செய்ததாலும் அவற்றை ஒழுங்குபடுத்தும் வகையில் மணல் குவாரிகளை அரசே ஏற்றுக்கொண்டது. அதன்படி, தற்போது, அரசின் கட்டுப்பாட்டின் கீழ் மணல் குவாரிகளில் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்களுக்கு மணல் வழங்கப்பட்டு அவர்கள் மூலமாக நுகர்வோருக்கு வினியோகிக்கப்படுகிறது.

அரசு மணல் குவாரிகளில் இருந்து தேவைக்கு ஏற்ப மணலை சப்ளை செய்ய முடியவில்லை. மேலும், கட்டுமான பணிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், மழைகாலத்தை மனதில் கொண்டு ஒரு சிலர் மணலை பதுக்கி வைத்திருப்பதாலும் மணல் விலை கிடு கிடு வென உயர்ந்து ஒரு லாரி மணல் ரூ.30 ஆயிரத்தை தாண்டியது. ஒரு கன அடி மணல் ரூ.65 அளவுக்கு விலை உயர்ந்தது. சாதாரணமாக ஒரு லாரியில் 400 முதல் 450 கன அடி அளவு மணல் ஏற்றுவார்கள்.

மணல் விலை இந்த அளவுக்கு விலை உயர்ந்ததால் பில்டர்களும், வீடு கட்டி வருவோரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். விலை அதிகம் ஒருபுறம் என்றாலும் பணம் கொடுத்தாலும் போதிய அளவுக்கு மணலும் கிடைப்பதில்லை. மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமான பணிகள் பாதிப்புக்கு உள்ளாகின.

இந்த நிலையில், மணல் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் கட்டுமான நிறுவனங்கள் கம்போடியா நாட்டில் இருந்து கப்பல் மூலமாக மணலை இறக்குமதி செய்து வருகிறார்கள். சென்னையில் மணல் விலை ஒரு கன அடி ரூ.65. கம்போடியாவில் இதே அளவு மணலின் விலை ரூ.12. ஆனால், அங்கிருந்து கப்பல் மூலம் கொண்டுவரும் போக்குவரத்து செலவு, பல்வேறு வரிகள் ஆகியவற்றை கணக்கிட்டால் கணிசமான செலவு வந்துவிடும்.

இருந்த போதும் மணல் தட்டுப்பாடின்றி கிடைப்பதால், வேறுவழியில்லாமல் கம்போடியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு கட்டுமான நிறுவனத்தினர் ஆளாகியுள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்கியதுமே மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. இன்னும் மழைக்காலம் தீவிரமடைந்துவிட்டால் நிலைமை இன்னும் மோசமாவிடும். எனவே, அந்த நேரத்தில் தேவையான மணல் கிடைக்காவிட்டால் கட்டுமான பணிகள் ஸ்தம்பித்துவிடும். அதன் காரணமாகத்தான் வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்கிறோம் என்று கட்டுமான நிறுவத்தினர் தெரிவித்தனர்.

சென்னையில் நிலவும் மணல் தட்டுப்பாடு தனியாரை மட்டுமின்றி அரசுத்துறையினரையும் விட்டுவைக்கவில்லை. போதிய அளவு மணல் கிடைக்காததன் காரணமாக மெட்ரோ ரெயில் உள்பட பெரிய உள்கட்டுமான திட்டங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.

மேலும் பல குவாரிகளுக்கு அரசு அனுமதி வழங்கினாலும் கூட மழைக்காலங்களில் சென்னையில் மணல் தட்டுப்பாடு தொடரத்தான் செய்யும் என்பதை அரசு அதிகாரிகளே ஒத்துக்கொள்கிறார்கள். இந்த நிலையில், கம்போடியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்யப்பட்டு வருவதால், தட்டுப்பாடு நீங்குவதுடன் விலையும் பெருமளவு குறைய வாய்ப்பு உள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post