Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பாரதிய ஜனதா கட்சி விடுத்த கோரிக்கையை பிரதமர் நிராகரிப்பு

சி.பிஐ இயக்குனரின் நியமனத்தை நிறுத்தி வைக்குமாறு பாரதிய ஜனதா கட்சி விடுத்த கோரிக்கையை, பிரதமர் மன்மோகன் சிங் நிராகரித்துள்ளார்.

சி.பிஐ. இயக்குனராக உள்ள ஏ.பி.சிங், நவம்பர் மாதத்துடன் ஓய்வு பெற உள்ளதால், புதிய இயக்குனராக, ரஞ்சித் சின்ஹா நியமிக்கப்பட்டார்.

சி.பி.ஐ இயக்குனர் போன்ற உயர் பதவிகளுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் கொண்ட குழு தேர்வு செய்யும் நபரைத்தான் நியமிக்க வேண்டும் என்று, லோக்பால் மசோதா தொடர்பான தேர்வுக் குழு பரிந்துரைத்திருப்பதாக பாரதிய ஜனதா கட்சி தெரிவித்தது.

எனவே, சிபிஐ இயக்குனர் நியமனத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெய்ட்லி ஆகியோர் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்த கோரிக்கையை பிரதமர் நேற்றிரவு நிராகரித்தார்.

நியமனத்தை நிறுத்தி வைக்கும் கேள்வியே எழவில்லை என்றும், இது தேவையற்ற கோரிக்கை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அருண் ஜெய்ட்லிக்கு பிரதமர் எழுதியுள்ள கடிதத்தில், மாநிலங்களவையின் தேர்வுக் குழு, லோக்பால் மசோதாவில் ஏராளமான திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரைத்து உள்ளதாகவும், அவற்றை மேற்கொண்டு அரசு புதிய மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்ய வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு அந்த திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறினாலும், அடுத்ததாக மக்களவையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், அதுவரை முக்கிய பதவிக்கு தலைவரை நியமிக்காமல் இருக்க முடியாது என்றும் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post