Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஈழ பிரச்சனையை நோக்கிய இலண்டன் உலகத் தமிழர் மாநாடு

இலண்டனில் உலகத் தமிழர் மாநாடு கடந்த வாரம் நடந்தது. தமிழகத்தில் இருந்து, தி.மு.க, பா.ம.க., இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியின் போது, இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான் என்றும், இவை பற்றி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

போர்க்குற்றம் மட்டுமன்றி, இலங்கையில் தமிழர்கள் மீது தொடர்ந்து அடக்குமுறை நடைபெற்று வருவதாகவும் மாநாட்டில் குறிப்பிடப்பட்டது. இந்த தீர்மானங்கள் குறித்து இரண்டு நாட்கள் விவாதம் நடைபெற்றது.

இறுதி நாளான வெள்ளிக்கிழமையன்று, தமிழ்த் தலைவர்கள், பொதுமக்களுடன் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு தவிர மற்ற தி.மு.க., பிரதிநிதிகளும், இதர கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். மக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, தலைவர்கள் பதிலளித்தனர்.

இதில், பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், இலங்கைத் தமிழர்களின் போராட்டத்திற்கு தங்கள் கட்சியின் முழு ஆதரவு உண்டு என்றார். இனப் படுகொலை குறித்து சர்வதேச விசாரணையை வலியுறுத்தி இந்தியாவில் ஆதரவு திரட்டப் போவதாக திராவிடர் விடுதலைக் கழக பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன் தெரிவித்தார்.

இதனிடையே இலங்கை அரசு அறிவித்துள்ள எல்.எல்.ஆர்.சி. எனப்படும், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளை இலங்கைத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் தனி ஈழம் குறித்த கோரிக்கையை மட்டுமே முன் வைக்க வேண்டும் என்றும் லண்டன் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

இதற்கான பொது வாக்கெடுப்பு, இலங்கைத் தமிழர்களிடமும் புலம் பெயர்ந்த தமிழர்களிடமும் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
[vuukle-powerbar-top]

Recent Post