Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

புலவர் இறைக்குருவனார் மறைவு தமிழ் இனத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு - வைகோ



புலவர் இறைக்குருவனார் மறைவு
தமிழ் இனத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு வைகோ இரங்கல்


இன்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 


தமிழ்கூறும் நல்உலகின் தலைசிறந்த தமிழ் அறிஞர், இலக்கியச்செம்மல் புலவர் இறைக்குருவனார் மறைந்தார் என்ற செய்தி கேட்டு நான் மிகுந்த அதிர்ச்சியுற்றேன்.

பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் அவர்களின் அன்பு மருமகனும், தனித்தமிழ் ஆர்வலருமான இறைக்குருவனார் அவர்கள் வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழியின் உயர்வுக்காகவும், தமிழ் இனத்தின் உரிமை வாழ்விற்காகவும் அர்ப்பணிப்புடன் தொண்டாற்றியவர் ஆவார். தமிழ் இலக்கிய ஆய்விலும், தனித்தமிழ் வளர்ச்சியிலும் மறைமலை அடிகள், பாவாணர், பெருஞ்சித்திரனார் ஆகியோர் அடியொற்றி செந்தமிழ்மொழி செழுமையுற அரும்பணி ஆற்றிய பெருமைக்கு உரியவர். அவரது அருமை மகள் வழக்கறிஞர் கயல் என்கிற அங்கயற்கண்ணி தமிழ் ஈழம் சென்றபோது, இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு, அங்கு சிறை வைக்கப்பட்ட செய்தி அறிந்து, புலவர் இறைக்குருவனார் துடித்துப்போனார்; உடனடியாக என் கவனத்திற்கும் கொண்டு வந்தார். பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை நான் தொடர்பு கொண்டு சகோதரி வழக்கறிஞர் கயல் அவர்களைச் சிங்கள இராணுவத்தின் கொடூரக் கரங்களில் இருந்து விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

அவர் விடுதலைபெற்று வந்தவுடன் திரு. இறைக்குருவனார் அவர்கள், அவரது துணைவியாருடன் வருகை தந்து எனக்கு நன்றி தெரிவித்தார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், 1999-ஆம் ஆண்டு நீலாங்கரையில் திராவிட இயக்கப் பயிற்சிப் பாசறை நடைபெற்றபோது, அதில் பங்கேற்று இளைஞர்களுக்கு பயிற்சி வகுப்பெடுத்து பெருமை சேர்த்தார்.

தமிழ் இனத்தை கருவறுத்த கொடியவன் இராஜ பக்சே சாஞ்சி வருகையை எதிர்த்து மத்தியப் பிரதேசத்தில் கழகம் நடத்திய போராட்டத்தை வெகுவாகப் பாராட்டி இறைக்குருவனார் அவர்கள் எனக்கு மடல் எழுதியிருந்தார்கள்.

கடலூர் மாவட்டத்தில் நவம்பர் 20-ஆம் தேதி நடைபெற்ற “நாடாளுமன்றத்தில் வைகோ” நூல் அறிமுக விழா வாழ்த்தரங்கத்தில் பங்கேற்க விரும்பி இசைவு அளித்திருந்தார். அவர் உடல்நலக் குறைவால் பங்கேற்க இயலவில்லை. புலவர் இறைக்குருவனார் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், தமிழ் இன உணர்வாளர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
24.11.2012 மறுமலர்ச்சி தி.மு.க.
[vuukle-powerbar-top]

Recent Post