Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஹீரோ 'அய்யர்' விளம்பரத்தால் மீண்டும் சிக்கல். காவல்துறையில் அய்யர் கூட்டமைப்பு புகார்.



ஹீரோ அய்யர் விளம்பரத்தால் மீண்டும் சிக்கல். காவல்துறையில் அய்யர் கூட்டமைப்பு புகார்! 

இரு வாரங்களுக்கு முன்பு ஹீரோ இரு சக்கிர வாகன நிறுவனம் தனது ஸ்பிளென்டர் வகையான ஊர்திக்கு அய்யர் என்று பெயர் சூட்டி விளம்பரம் வெளியிட்டு இருந்தது . இந்த விளம்பரத்திற்கு தமிழர்கள் நடுவே கடும் எதிர்ப்பு கிளம்பியது. எவ்வாறு ஒரு ஆதிக்க சாதியின் பெயரை வாகனத்திற்கு சூட்டலாம் என்றும், இதே போல் நாடார், முதலியார், பள்ளர் பறையர் போன்ற சாதி பெயர்களை இணைத்து வாகனங்கள் வெளியிடுவீர்களா என பலரும் ஹீரோ நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

தமிழர்களின் எதிர்ப்பலை பலமாக இருந்ததால் ஹீரோ நிறுவனம் அந்த விளம்பரத்தில் இருந்த அய்யர் என்ற பெயரை குமார் என்று மாற்றினார்கள் .

இந்நிலையில் கோவையில் இயங்கும் அகில இந்திய இளைஞர்கள் அய்யர் கூட்டமைப்பின் தலைவர் கே. ராமசுப்ரமணியன் கோவை காவல்துறை ஆணையரிடம் புகார் ஒன்று அளித்துள்ளார். 

அந்த புகாரில் எப்படி ஹீரோ நிறுவனம் ஒரு இயந்திரத்திற்கு அய்யர் என்று பெயர் சூட்டலாம் என்று கேள்வி எழுப்பி உள்ளார். இது அய்யரை சிறுமைப் படுத்துவதாக உள்ளது. அய்யர் என்ற பெயரை தவிர்த்து வேறு சாதிப் பெயரை இந்நிறுவனம் பயன்படுத்தி இருந்தால் இந்நேரம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தமிழ்நாட்டில் உருவாகி இருக்கும். ஆனால் அய்யர்கள் அமைதியான மக்கள் , அதனால் தான் அவர்களை கேவலப் படுத்தி கேலிக் கூத்தாக இந்த விளம்பரம் சித்தரித்து உள்ளது என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆகவே ஹீரோ நிறுவனத்தின் மீதும், விளம்பர நிறுவனம் மீதும் அதை வெளியிட்ட நாளிதழ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் வலியுறுத்தி உள்ளார் ராம சுப்ரமணியன். 

இவ்வாறு அய்யர் கூட்டமைப்பு சார்பாக புகார் அளிக்கப்பட்டாலும் சில அய்யர்   சமூகத்தை சேர்ந்த மக்கள் , இந்த விளம்பரத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர் . ஒரு பெரிய நிறுவனம் அய்யர் என்று தங்களின் வாகனத்திற்கு பெயர் சூட்டி உள்ளது அய்யர் சமூகத்திற்கு பெருமையே அன்றி சிறுமை இல்லை என்று கருத்து தெரிவித்து உள்ளனர். 

எவ்வாறாயினும் சாதிப் பெயர்களை தனியார் நிறுவனங்கள் தமிழகத்தில் பயன்படுத்தினால் நிச்சயம் சிக்கல் தான் என்பது இந்த ஹீரோ விளம்பர சர்ச்சையால் விளங்க முடிகிறது.

[vuukle-powerbar-top]

Recent Post