Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தீபாவளி தமிழர் திருநாள் அல்ல. எதிரியின் சாவை கொண்டாடும் மரபு தமிழர்களுக்கு இல்லை!


தீபாவளி பழந்தமிழ் இலக்கியத்தில் இல்லை...

தமிழறிஞர் அ.கி. பரந்தாமனார் தனது "நாயக்கர் வரலாறு" நூலில் குறிப்பிட்டுள்ளார். அதில், "தமிழகத்தில் தீபாவளிக்கும் நரகாசுரன் கதைக்கும் தொடர்பே இல்லை. வடநாட்டார் விளக்கு அலங்காரம் செய்வதுண்டு. தீப=விளக்கு. ஆவலி=வரிசை . தீப+ஆவலி= தீபாவலி. இந்த சொற்றொடர் பின் 'தீபாவளி' என்று திரிந்தது. இன்றும் வடநாட்டு மார்வாரி, குசராத்திகள் இந்நாளில் புதுக்கணக்கு தொடங்குவதோடு அந்நாளில் விளக்கேற்றி கொண்டாடுவர். தமிழகத்தில் 16ஆம் நூற்றாண்டில் மதுரை, செஞ்சி நாயக்கர்களால் புகுத்தப்பட்ட ஒன்றே தீபாவளி" என்று குறிப்பிட்டுள்ளார். அடுத்தவன் இறப்பில் மகிழ்ச்சி கொள்ளும் பண்பாடு தமிழர் பண்பாடாக இருக்க முடியாது. வாடிய பயிருக்கும், குளிரால் நடுங்கிய மயிலுக்கும், தசையொடிந்த பறவைக்கும் இரக்கம் காட்டி வளர்ந்த பண்பட்ட தமிழரினம் எதிரியின் சாவைக்கூட கொண்டாடியதாக எந்த வரலாற்றுப் பதிவும் இல்லை. தமிழரின் மூலவரலாறு அறியாத காரணத்தால் இற்றைய தமிழரினம் தம் இனத்தைச் சேர்ந்த 'நரகாசுரன்' கொன்றழித்த நாளை மகிழ்ச்சியாக்கி கொண்டாடுகிறது. இது அருவெருக்கத்தக்கது. தமிழர்களின் வேர்களை அறிந்திடுவோம்! ஆரியக்கதைக்கு அடிபணியாதிருப்போம்!

- நன்றி கதிர் நிலவன்


நரகாசுரனுக்கு வீர வணக்கம் செலுத்தும் தமிழர்கள் தமிழறிஞர் பரந்தாமர்

ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் நடந்த போரை கூறுகின்ற கதையே இராமயணம். அன்று தமிழ் மண்ணை ஆண்ட மன்னன் இராவணனாக உருவகப்படுத்தப்படுகிறான். ஆக்கிரமிப்பு போர் நடத்திய ஆரியர்களின் மன்னனாக இராமன் இருக்கின்றான். தமிழ் மண்ணின் பல பகுதிகளை கைப்பற்றி தமிழ் மன்னர்களை ராமன் வெற்றி கொள்கிறான். கடைசியில் தமிழர்களின் தலைநகரான இலங்கை வரை சென்று பல சூழ்ச்சிகள் செய்து இராவணனையும் கொல்கிறான். இதுதன் இராமயணக் கதை. இராவணனை பேரரசனாகக் கொண்டே அன்று தமிழர்களின் அனைத்து அரசுகளும் இருந்தன என்பதை இராமாயணத்தை ஆராய்கின்ற போது புரிந்து கொள்ள முடிகிறது.

இராவணனின் வீழ்ச்சிக்கு பிறகு சில காலம் கழித்து ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்த தமிழ் மன்னர்களில் ஒருவனே நரகாசுரன். நரகாசுரனும் மற்றைய பல மன்னர்களும் ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்து வீர மரணம் அடைந்தார்கள். கடைசியில் தமிழினத்தை வெற்றி கொண்ட ஆரியர்கள் தமிழர்களின் வரலாற்றை திரிவுபடுத்தினார்கள். இன்று விடுதலைப் போராளிகளை ஆக்கிரமிப்பாளர்கள் பயங்கரவாதிகள் என்று சொல்வது அன்று ஆரியர்கள் அன்று தமிழின விடுதலைக்காக போரடியவர்களை அரக்கர்கள் என்று சொன்னார்கள். முறிக்கிய மீசையோடு கம்பீரமாக நின்று தமிழ் மண்ணைக் காக்க இறுதிவரை போராடி தன்னுயிரை ஈந்தவர்களுக்கு கொம்புகளும் கோரமான பற்களும் முளைத்து விட்டன. 

ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்! சிங்களப் படைகள் யாழ் நகரைக் கைப்பற்றிய நாளை நாம் கொண்டாடுவோமா? நிச்சயமாகக் கொண்டாடுவோம், சிங்களம் தமிழினத்தை முழுமையாக வெற்றி கொண்டால். அப்பொழுது எங்களின் விடுதலைப் போரளிகளுக்கும் கொம்புகளும், கோரமான பற்களும் முளைக்கும். வெற்றி பெற்றவன் திணிப்பதே வரலாறு என்று ஆகின்றது. தோற்று போனவனின் வரலாறு அவனுடனேயே புதைகுழிக்குள் புதைக்கப்படுகிறது. எமது தமிழ் மன்னர்கள் அன்று தோற்றுப் போனார்கள். அதனால் அரக்கர்கள் ஆகி விட்டார்கள். இப்படி அரக்கன் ஆக்கப்பட்டு விட்ட ஒரு விடுதலைவீரனின் நினைவுநாளை நாம் மகிழ்ச்சியாகக் தீபாவளி என்று கொண்டாடுகிறோம். 

ஆரியர்கள் தமிழினத்தை வென்றது மாத்திரம் அன்றி, வென்ற நாளை தமிழர்களையோ கொண்டாட வைத்து விட்டார்கள். இதை உணர்ந்து தமிழினம் இந்த தீபாவளியை கொண்டாடுவதை நிறுத்த வேண்டும். இங்கே இன்னும் ஒன்றையும் குறிப்பிடுதல் பொருத்தமாக இருக்கும். இன்றைய நாகரீக உலகில் யாருடைய இறப்பும் கொண்டாடப்படுவதில்லை. எம்மை ஆயிரக்கணக்கில் கொன்றொழித்த எதிரிகள் கொல்லப்பட்ட நாளை நாங்கள் யாரும் கொண்டாடுவதில்லை. கோடிக்கணக்கில் மனிதர்களை கொன்ற கிட்லரின் இறப்பையும் யாரும் கொண்டாடுவதில்லை. இப்படி யாராக இருந்தாலும், ஒரு இறப்பு கொண்டாடப்படுவதில்லை. ஆனால் நாம் எமக்காக உயிரை ஈந்த ஒரு மன்னனின் நாளை தீபாவளி என்று மகிழ்ச்சியாக கொண்டாடுகிறோம். இந்த நிலை மாறும் நாளே உண்மையில் தமிழினம் விடுதலை அடைந்த நாளாக இருக்கும். 

- கு.கண்ணன் 
பெரியார் திராவிடர்கழகம்


தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம், எதற்காக கொண்டாடுகிறோம் , அதில் என்ன வரலாற்று உண்மை இருக்கிறது என்பதை தமிழ் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதில்லை. யாரோ ஒரு கதையை சொன்னார்கள், பட்டாசுகள் வெடிக்கச் சொன்னார்கள், அதை நாமும் அப்படியே நம்பி பின்பற்ற வேண்டும் என்ற அடிமை மனநிலை தான் தற்போது தமிழர்களிடம் உள்ளது. இதை கொண்டாடுவதற்கு எந்த அடிப்படைப் காரணங்கள் இல்லாமல் வெறும் வாழ்த்துகள் மட்டும் பரிமாறிக் கொள்கிறார்கள் தமிழர்கள். 

ஆனால் உணர்வுப் பூர்வமாக கொண்டாடப் படவேண்டிய உழவரின் திருநாள் , கதிரவனுக்கு, மாடுகளுக்கு நன்றி செலுத்தும் பொங்கல் திருநாளை எந்த வகையிலும் தமிழர்கள் தீபாவளிக்கு இணையாக பெருமையாக கொண்டாடுவதில்லை. 

இந்த நிலை மாற வேண்டும் என்றால் நம் குழந்தைகளுக்கு உண்மையை சொல்லிக் கொடுப்போம். 
தமிழர்கள் அறிவுள்ளவர்கள் என்று ! 

 நமது பண்பாட்டு பண்டிகை என்பது அறிவிப்பூர்வமாக பொங்கல் திருநாளே என்று ! 

தமிழர் திருநாளை வேறு எந்தப் பண்டிகையை விட சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று ! 

அறிவுக்கு பொருந்தாத பண்டிகைகளை புறக்கணிப்போம் என்று !

நன்றி - ராஜ்குமார் பழனிசாமி[vuukle-powerbar-top]

Recent Post