Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

விடுதலை வேண்டி பூந்தமல்லி சிறப்பு முகாமில் பரமேஸ்வரன் உண்ணா நிலைப் போராட்டம்


எந்தவித வழக்கும் இல்லாமல் சட்டவிரோதமாக பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைத்துவைத்திருக்கும் தன்னை விடுதலை செய்யக்கோரி பரமேஸ்வரன் என்பவர் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கி இருக்கிறார். 

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பொருள் கடத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டில் சென்னையில் 2008 ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட இவரை நீதிமன்றம் 22.10.2008 பிணையில் விடுவித்தது வெளியில் வந்த அவரை சிறை வாசலிலேயே கைது செய்த கியூ பிரிவு காவல்துறை செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்தது.


இதே வழக்கில் இவருடன் 10 பேர் கைது செய்யப்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர் ஆனால் இவரை தவிர மற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்டனர். அதனால் இவர் உட்பட மேலும் பலர் தங்களை விடுதலை செய்யக்கோரி செங்கல்பட்டில் உண்ணாவிரதம் தொடங்கினர். 

2010 பிப்ரவரி மாதம் உண்ணாவிரதம் இருந்த இவர் உட்பட 15 பேரை காவல்துறையினரை  தாக்க முயன்றதாக பொய்வழக்கு பதிவு செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட 43 நாளில் இந்த வழக்கிலிருந்தும் பிணை கிடைத்து வெளியில் வந்த இவரை நீதிமன்ற வளாகத்திலேயே கியூ பிரிவு காவல்துறை  மீளவும் கைது செய்து பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைத்தனர். 

பூந்தமல்லி சிறப்பு முகாமில் இருந்த இவரை 02.02.2011 அன்று வெளியில் இருந்து வழக்கை நடத்திக்கொள்ளலாம் என்று விடுதலை செய்தனர். இதற்கிடையில் போலீசாரை தாக்கியதாக இவர்மீது தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து 15.02.2012 அன்று நீதிமன்றம் விடுவித்தது. இலங்கைக்கு பொருட்கள் கடத்தியதாக இவர்மீது சுமத்தப்பட்ட வழக்கை வெளியில் இருந்து நடத்திக்கொண்டு அமைதியான வாழ்க்கை நடத்தி வந்த இவரை 04.04.2012 அன்று உங்கள் வழக்கிற்கு விரைவில் தீர்ப்பு வர இருக்கிறது ஒருவேளை உங்களுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் நீங்கள் தலைமறைவாகி விடுவீர்கள். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உங்களை கைது செய்கிறோம் மாறாக உங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் உங்களை மீண்டும் விடுதலை செய்துவிடுவோம் என்று சொல்லி மீளவும் கைது செய்து திருப்பி பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைத்தனர். 

27.04.2012 அன்று இலங்கைக்கு பொருட்கள் கடத்திய வழக்கில் இவர் குற்றவாளி இல்லை என்று நீதிமன்றம் விடுதலை செய்தது.ஆனால் இவர் இன்று வரை விடுவிக்கப்படவில்லை. தற்பொழுது இவர் மீது எந்த வழக்கும் நிலுவையில் இல்லாத நிலையிலும் இவரை இன்று வரை பூந்தமல்லி சிறப்பு முகாமிலேயே அடைத்து வைத்திருக்கின்றனர். சட்டவிரோதமாக தன்னை அடைத்து வைத்திருப்பதை எதிர்த்து தன்னை விடுவிக்ககோரி பரமேஸ்வரன் இன்றுமுதல் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கி இருக்கிறார். தனது போராட்டத்தை தமிழாதரவு கட்சிகளும், இயக்கங்களும், மனித உரிமை ஆர்வலர்களும், தமிழ் உணர்வாளர்களும் ஆதரிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார் பரமேஸ்வரன். 

நன்றி : ப்ரிதிக் கணேசன் 
[vuukle-powerbar-top]

Recent Post