Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கரும்பு விலையைத் தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்! - வைகோ


கரும்பு விலையைத் தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்!
வைகோ அறிக்கை: 

கரும்பு சாகுபடி என்பது தமிழகத்தின் மிக முதன்மையான வணிகப் பயிராக உள்ளது. தமிழகத்தில் சுமார் 7 இலட்சம் ஏக்கர் பரப்பில் - 17 மாவட்டங்களில் கரும்பு பயிரிடப்படுகின்றது. சுமார் 5 இலட்சம் விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரமாகக் கரும்பு விவசாயம் உள்ளது.

தமிழகத்தின் கரும்பு விளைச்சல் 400 இலட்சம் டன்னாக உள்ளது. இந்தியாவின் கரும்பு உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 10 சதவீதம் ஆகும். தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகள் கரும்பிலிருந்து சர்க்கரை எடுத்தது போக துணை விளைபொருளாக 400 மெகா வாட் மின்சாரமும் 24 கோடி லிட்டர் எரி சாராயமும் உற்பத்தி செய்கின்றன.

இவ்வாறு வேளாண் துறையிலும், தொழில்துறையிலும் முக்கியமாக உள்ள கரும்பை உற்பத்தி செய்யும் விவசாயிகள் நிலை துயர மிக்கதாக உள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கரும்பின் உற்பத்தி செலவு 100 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. குறிப்பாக உரம் 200 சதவீதம் விலை அதிகரித்துள்ளது. 2012-2013 அரவை ஆண்டு அக்டோபர் மாதமே தொடங்கிவிட்டது. இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் மாநிலப் பரிந்துரை விலையை (ளுஹஞ) தமிழக அரசு இன்னமும் அறிவிக்காமல் உள்ளது விவசாயிகளுக்கு மிகுந்த வேதனையாக உள்ளது.

கடந்த ஆண்டு மாநில அரசின் பரிந்துரை விலை  லாரி வாடகையுடன் ஒரு டன்னுக்கு ரூ.2,100/- ஆகும். கரும்பின் உற்பத்தி செலவு இந்த ஆண்டு 100 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு 50 சதவீதமாவது விலை உயர்வு செய்து ஒரு டன் கரும்புக்கு ரூ.3,000/- பரிந்துரை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். தமிழகக் கரும்பு உற்பத்தியைப் பாதுகாக்கும் பொருட்டு கரும்பு உழவர்களின் நலனைக் காக்கும் வகையில் உடனடியாக கரும்பு விலையை அறிவிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
19.11.2012 மறுமலர்ச்சி தி.மு.க 
[vuukle-powerbar-top]

Recent Post