Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஒரு கண்ணில் வெண்ணெயும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்புமா? - உதயகுமார் கேள்வி


அணு உலை போராளி உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

ஒரு கண்ணில் வெண்ணெயும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்புமா? 

நிலம் புயலால் தரை தட்டிய கப்பலில் இருந்த பணியாளர்களைக் காப்பாற்றிய மீனவர்கள் ஐந்து பேருக்கு தலா ரூ. ஒரு லட்சம் வழங்கப்படும் என அறிவித்து, அந்த மீனவத் தோழர்களின் வீரச் செயலையும், தன்னலம் கருதாத சமூக அக்கறையையும் தமிழக முதல்வர் பாராட்டியிருக்கிறார். 

தமிழக முதல்வருக்கு நாங்கள் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் கடலையும், கடல் வளங்களையும், கடல் உணவையும் நம்பிக் கிடக்கும் மீனவர் வாழ்வில் நச்சுப் பொருளைக் கலக்கும் கூடங்குளம், கல்பாக்கம் அணு உலைகளையும் முதல்வர் ஆதரிப்பது வேதனை அளிக்கிறது. 

கூடங்குளம் அணுஉலைப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட எந்தத் தவறும் செய்யாத, உண்மையான, உழைத்து வாழும், இடிந்தகரையைச் சார்ந்த லூர்துசாமி என்கிற 68 வயதுப் பெரியவர் மீதும், நசரேன் எனும் 40 வயது மீனவர் மீதும் குண்டர் சட்டத்தைத் திணித்திருக்கிறது தமிழக அரசு. அதே போல, சிறையில் இருக்கும் இடிந்தகரையைச் சார்ந்த மீனவப் பெண்கள் சேவியர் அம்மா (49), செல்வி (38) மற்றும் சுந்தரி (37) ஆகியோரை பிணையில் வெளியே வர முடியாதபடி மீண்டும், மீண்டும் வழக்குகள் போட்டு வதைக்கிறது தமிழக அரசு. 

இவர்களும் மீனவ மக்கள்தான். பொதுப் பணத்தைக் கொள்ளை அடிக்காத, யாரையும் கொலை செய்யாத, உழைத்து வாழும் மக்கள். இவர்களுக்கு ஏன் இந்த அநீதி என்பது புரியாத புதிராக இருக்கிறது. ஒரு கண்ணில் வெண்ணெயும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கிறது தமிழக அரசு.  

கூடங்குளம் அணுமின் திட்டத்தை உடனே மூடி, கல்பாக்கம் அணுமின் திட்ட விரிவாக்கத்தை நிறுத்தி, தேனி மாவட்டம் தேவாரம் நியூட்ரினோ திட்டத்தை முடக்கி, தமிழ் மண்ணை, நீர் நிலைகளை, காற்றை, கடலை, கடலுணவை, தமிழ் மக்களை, தமிழர் வருங்காலத்தை தமிழ அரசு காக்க வேண்டும். நம் மக்களை அச்சுறுத்துகின்ற “மெல்லக் கொல்லும் இனப்படுகொலை”யை தடுத்து நிறுத்துவது தமிழக அரசின் கடமை என்பதை சுட்டிக்காட்ட விழைகிறோம். 

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் 
இடிந்தகரை 
627 104 
நெல்லை மாவட்டம் 
மின்னஞ்சல்: koodankulam@yahoo.com 
கைப்பேசி: 9865683735; 9842154073


[vuukle-powerbar-top]

Recent Post