Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பாசனத்திற்கு நீர் கேட்டு திருமருகல் அருகே விவசாயிகள் திடீர் சாலை மறியல்

திருமருகல் அருகே பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொட்டாரக்குடி மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதியில் வளப்பாறு மூலம் சுமார் 300 ஏக்கர் வயல்கள் பாசன நீர் பெறுகின்றன. இந்த நிலையில் கடந்த மாதம் பெய்த கன மழை காரணமாக இப்பகுதியில் சாகுபடி செய்த சம்பா பயிர்கள் கனமழையால் பாதிக்கப்பட்டது. மழைவிட்டு தண்ணீர் வடிந்த நிலையில் மீண்டும் இப்பகுதியில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் மேட்டூர் அணைநீர் வரத்து குறைந்ததால் சம்பா சாகுபடிக்கு நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஒரு சில வயல்களில் பாசன நீர் இல்லாமல் வெடிப்பு ஏற்பட்டுள்ளன. எனவே சம்பா சாகுபடிக்கு தேவையான அளவு தண்ணீர் விட வேண்டும் என்பதை வலியுறுத்தி திருமருகல் அருகே கொட்டாக்குடியில் விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு முன்னோடி விவசாயி யாசின் தலைமை தாங்கினார்.

விவசாயிகளின் திடீர் சாலைமறியலை தொடர்ந்து நாகை தாசில்தார் சம்பத்குமார், நன்னிலம் காவிரி வடிநில உபக்கோட்ட உதவி செயற்பொறியாளர் வில்வேந்தன், வருவாய் அலுவலர் ரமேஷ்குமார், கிராமநிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன், திட்டச்சேரி பேரூராட்சித் தலைவர் கோவிரவிசந்திரன், போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சம்பா சாகுபடிக்கு தேவையான நீரை திறந்து விட வேண்டும் என்பதை விவசாயிகள் வலியுறுத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் சாலைமறியலை விவசாயிகள் கைவிட்டனர். சாலைமறியல் காரணமாக நாகூர் –திருவாரூர் சாலையில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
[vuukle-powerbar-top]

Recent Post