Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இன்று கர்நாடக முதல்வருடன் ஜெயலலிதா சந்திப்பு

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் ஷெட்டரை சந்தித்துப் பேசுவதற்காக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று காலை பெங்களூரு புறப்பட்டுச் செல்கிறார்.

இந்த சந்திப்பின்போது, தமிழகத்திற்கு வரவேண்டிய காவிரி நீரின் பங்கு மற்றும் இதுவரை கர்நாடகா திறந்துவிட்டுள்ள தண்ணீரின் அளவு ஆகிய விவரங்கள் அடங்கிய ஆவணத்தை அவர் ஷெட்டரிடம் வழங்குவார் என தெரிகிறது. பெங்களூருவில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக கர்நாடக துணை முதல்வர் அசோக் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அந்த ஓட்டல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. காவிரி பிரச்னை பற்றி 15 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான், இரு மாநில முதலமைச்சர்களும் சந்திக்க இருக்கிறார்கள்.

முன்னதாக, இந்த சந்திப்பின் போது வலியுறுத்தப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து, அரசு அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று ஆலோசனை நடத்தினார். இதனிடையே, தமிழக முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை சமாதானமாக நடைபெறும் என்றும், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என்றும் கர்நாடக முதலமைச்சர் ஷெட்டர் கூறியுள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்னையை தமிழக, கர்நாடக முதலமைச்சர்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 26-ம் தேதி யோசனை தெரிவித்தது. இதையடுத்து, ஷெட்டருடன் பேச்சு நடத்துவதற்காக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று பெங்களூரு செல்கிறார்.

காவிரி: முதலமைச்சரின் முயற்சிகள் : 1991-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பை வழங்கிய 6 மாதத்தில் அதனை மத்திய அரசிதழில் வெளியிட முயற்சி எடுத்தார்.

1993- ஜூலையில் காவிரி தண்ணீர் கோரி சென்னை கடற்கரையில் 4 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.

2005 ஜூலை 26-ம் தேதி தமிழக அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்களுடன் டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்த ஜெயலலிதா, உடனடியாக 24 புள்ளி 32 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தினார்.

2003-ம் ஆண்டுக்குப் பிறகு 9 ஆண்டுகளாக கூட்டப்படாமல் இருந்த பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையத்தை கடந்த செப்டம்பர் 19-ம் தேதி கூடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

2012 நவம்பர் 26-ம் தேதி, காவிரி பிரச்னையை தீர்க்க இரு மாநில முதலமைச்சர்களும் சந்தித்துப் பேச வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கர்நாடக முதல்வரை தானே நேரில் சென்று சந்திப்பதாக அறிவித்தார் ஜெயலலிதா.

காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்னை தொடர்பாக முதலமைச்சர்கள் அளவில் பேச்சுவார்த்தை நடப்பது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே இதுகுறித்து நடந்த சந்திப்புகள் நடைபெற்றுள்ளன.
[vuukle-powerbar-top]

Recent Post