Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அணுஉலைப் போராளிகள் மீது குண்டர் சட்டம். அரசுக்கு வைகோ கடும் கண்டனம்
இன்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. 

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது தேசப் பாதுகாப்புச் சட்டம், குண்டர் தடுப்புச் சட்டத்தை அடக்குமுறையாக ஏவும் தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்

தென்தமிழ்நாட்டின், குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய கூடங்குளம் அணுமின் நிலையத்தை அகற்றக்கோரி, அணு உலை எதிர்ப்பு மக்கள் இயக்கமும், அணு உலை எதிர்ப்பாளர்களும் தொடக்கத்தில் இருந்து அறவழியில் போராடி வருகின்றனர்.

ஜப்பானில் புகுஷிமா அணு உலை பேரழிவிற்குப் பின்னர், உலகத்தில் பல்வேறு நாடுகள் அணு உலைகளை மூடிவிட முடிவுசெய்து உள்ள சூழலில், கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் கூடங்குளம் அணு உலையை எதிர்த்து இலட்சக்கணக்கான மக்கள் இடிந்தகரையைப் போராட்டக்களமாகக் கொண்டு அமைதி வழியில் அறப்போர் நடத்தி வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான தாய்மார்கள் பங்கேற்ற காலவரையற்ற உண்ணாநிலை அறப்போரும், ஓராண்டுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரத அறப்போராட்டமும், இதுவரை இந்தியாவில் எங்கும் நடைபெறாத உறுதியும் தியாகமும் நிறைந்த போராட்டம் ஆகும்.

ஆனால், மத்திய அரசு போராட்டக்காரர்களை இழிவுபடுத்தியும், போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியும், கிறிஸ்துவ மிசினரிகள் மீது அபாண்டமாக பழி சுமத்தியும், போராட்டக்குழுவின் தலைவர் உதயகுமார் மீது களங்கச் சேற்றை வாரி இறைத்தும், இந்திய விமானப்படை விமானங்களை இடிந்தகரை வட்டாரத்தில் தாழ்வாகப் பறக்கச் செய்து அச்சுறுத்தியும், அதன் விளைவாக இடிந்தகரையைச் சேர்ந்த மீனவர் சகாயத்தை படுகொலை செய்தும் தொடர்ந்து அராஜகம் புரிந்து வருகிறது.

தமிழக அரசும், ஒரு இடைப்பட்ட 5 மாத காலத்தில், செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை மக்கள் அச்சம் தீரும் வரை அணு உலையை திறக்க மாட்டோம் என்று கூறிவிட்டு, பின்னர் அணு உலையை இயக்குவதற்கு ஆதரவு அளித்தோடு. இந்தப் பிரச்சினையின் தொடக்கத்தில் இருந்தே காவல்துறையின் மூலம் அடக்குமுறையை ஏவி வருகிறது. கடந்த 2011 செப்டம்பர் தொடக்கத்தில், கூடங்குளம் வட்டாரத்தில் உள்ள அணு உலை எதிர்ப்பாளர்களை மிரட்டுவதற்காக ஆயிரக்கணக்கானவர்களைக் கைது செய்தது.

அறவழியில் போராட்டம் நடத்தப்பட்டதோடு, இந்த நெடிய போராட்டத்தில் துளி அளவும் வன்முறையில்  கிளர்ச்சியாளர்கள் ஈடுபடவில்லை. எனினும், காவல்துறை தடியடிப் பிரயோகம், கண்ணீர்புகை வீச்சு, துப்பாக்கிச் சூடு நடத்தி கொடிய அடக்குமுறைகளில் ஈடுபட்டது. மணப்பாட்டைச் சேர்ந்த அந்தோணி ஜான் என்பவரைச் சுட்டுக் கொன்றனர். இந்த இரண்டு படுகொலைகளுக்கும் தமிழக அரசு நீதி விசாரணை அறிவிக்கவில்லை.

இதுவரை, 350-க்கும் மேற்பட்ட வழக்குகள் மொத்தத்தில் 2 இலட்சம் பேர் மீது போடப்பட்டு உள்ளன. தேசப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 8 வழக்குகள் பதிவு செய்து உள்ளனர். தாய்மார்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இடிந்தகரை, வைராவிகுளம், கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த பலர், இன்னமும் வேலூர், திருச்சி, கடலூர், பாளையங்கோட்டைச் சிறைகளில் வாடுகின்றனர். அறப்போராட்டத்தை நசுக்க முனைந்து,  அடக்குமுறையின் உச்சகட்டமாக, தற்போது அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தை ஏவி சிறையில் அடைக்கத் தொடங்கி விட்டனர்.
இடிந்தகரையைச் சேர்ந்த 68 வயதான லூர்துசாமி என்பவரும், 40 வயதான நசரேன் என்பவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், நவம்பர் 15 அன்று வைராவிக்குளத்தைச் சேர்ந்த தவசிகுமார் மீதும் கூடங்குளத்தைச் சேர்ந்த சிந்துபாரத் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் போட்டு கைது செய்து பாளை மத்திய சிறையில்  அடைத்து உள்ளனர்.

பிணையில் சிறையில் இருந்து விடுதலை பெறக்கூடாது  என்பதற்காக, காவல்துறை ஏவுகிற இந்த பாசிச நடவடிக்கை ஜனநாயகத்தின் மென்னியை முறிக்க முயலும் அநீதி ஆகும். அடக்குமுறையாலோ அச்சுறுத்தலாலோ எதேச்சதிகார மிரட்டலாலோ, எந்த உரிமைக் கிளர்ச்சியையும் நசுக்க முடியாது. மாறாக, போராட்டம் மேலும் வீறுகொண்டு எழும்; வெல்லும் என்பது வரலாறு தருகின்ற பாடம் என்பதை, ஆட்சியாளர்கள் உணர வேண்டும். 

காவல்துறையினர் மேற்கொண்டுவரும் அராஜக அடக்குமுறைக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு, பொய் வழக்குகள் அனைத்தையும் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
16.11.2012 மறுமலர்ச்சி தி.மு.க., 
[vuukle-powerbar-top]

Recent Post