Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கை அதிபர் மலேசியாவுக்குள் நுழையக் கூடாது – பொது அமைப்புகள் போர்க்கொடி

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச மலேசியாவுக்குள் நுழைவதைத் தடைசெய்ய வேண்டும் என்று மலேசியாவின் மக்கள் நலன்புரி மற்றும் உரிமை இயக்கத்தின் தலைவர் கோபி கிருஸ்ணன் கோரியுள்ளார். 

டிசம்பர் 4ம் நாள் தொடக்கம் 6ம் நாள் வரை நடைபெறவுள்ள அனைத்துலக இஸ்லாமிய அமைப்பின் மாநாட்டுக்காக மலேசியா வரும், இலங்கை 
அதிபரின் வருகைக்கு எதிராக, ஏனைய அரசசார்பற்ற நிறுவனங்களின் தலைவர்களுடன் இணைந்து அவர் நேற்று மலேசிய காவல்துறையில் அறிக்கை ஒன்றை கையளித்துள்ளார். 

இலங்கையில் சிறுபான்மைத் தமிழர்களை இனப்படுகொலை செய்த மகிந்த ராஜபக்சவுக்கு மலேசிய அரசாங்கம் செங்கம்பள வரவேற்புக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளது அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

“இந்த நாட்டில் உள்ள இந்தியர்களின் உணர்வுகளை மலேசிய அரசாங்கம் காயப்படுத்தியுள்ளது. 

இந்த அழைப்பு இந்தியர்களை அவமானப்படுத்துவதாக உள்ளது. 

அவர் இங்கு வருவதைத் தடுக்க நாம் பலப்பிரயோகம் உள்ளிட்ட எல்லா வழிகளிலும் முயற்சிப்போம். 

வரும் செவ்வாய்க்கிழமை மலேசிய நாடாளுமன்றத்துக்கு வெளியே எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளதுடன், இதுபோன்ற பேரணிகளும் நடத்தப்படவுள்ளன.” என்று கோபி கிருஸ்ணன் தெரிவித்துள்ளார். 

அதேவேளை, பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலிய வன்முறைகளை கண்டிக்கும் மலேசிய அரசாங்கம், போர்க்குற்றம் புரிந்த இலங்கை அரசைக் கண்டுகொள்ளாதது குறித்து மற்றொரு அரசசார்பற்ற நிறுவனத் தலைவரான இராஜரத்தினம் விசனம் தெரிவித்துள்ளார். 

“இரட்டைவேடம் போடுவதை நிறுத்தி, மகிந்த ராஜபக்ச வருகையை மலேசிய அரசாங்கம் தடுக்க வேண்டும். 

மகிந்த ராஜபக்சவும், இஸ்ரேலியப் பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹுவும் ஒரே மாதிரியானவர்கள். 

நெதன்யாஹு இல்லை என்று கூறினால், மகிந்த ராஜபக்சவும் இல்லை என்றே கூற வேண்டும்.” என்றும் அவர் கூறியுள்ளார். 

இதற்கிடையே, நேற்றுப் பிற்பகல் அம்பாங்கில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு வெளியே அரசசார்பற்ற நிறுவனங்கள் எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளன. 

அத்துடன், ராஜபக்ச வருகைக்கு எதிராக காவல்துறை முறைப்பாடு ஒன்றும் செய்யப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post