Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கை அரசு நிகழ்த்திய வன்னிப்போரின் கொடூரத்தை மறைக்கும் போரிடச்சுற்றுலா


நிலத்தின் கீழ் அமைக்கப்பட்ட கட்டடம் ஒன்றில் உள்ள இருட்டான அறை ஒன்றில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் ஒருவரது குரல் ஒலித்துக் கொண்டிருந்தது. குழந்தைகளைத் தூக்கி வைத்திருந்த தாய்மார் உள்ளடங்கலாக 50 வரையான பயணிகள் அந்தக் குழுவில் அடங்கியிருந்தனர். இதனைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த இளையோர்கள் தமது செல்லிடத் தொலைபேசிகளில் ஒளிப்படங்களை எடுத்தனர். முதியோர்கள் அங்கிருந்த சுவர்களில் சாய்ந்த வண்ணம் நின்றிருந்தனர். இவர்கள் தமது வழிகாட்டி கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் மிகக் கவனமாக செவிமடுத்தனர்
                                                                                                           
அங்கிருந்த ஒடுங்கிய படிக்கட்டுக்கள் மண்டபம் ஒன்றிற்கு செல்வதற்கான வழியாக காணப்பட்டது. கடந்த காலத்தில் இலங்கையில் மிகவும் பீதியை உண்டுபண்ணிய, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தங்குமிடமாகக் காணப்பட்ட, நிலத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த பதுங்குகுழியைப் பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் பல நூற்றுக்கணக்கான கிலோமீற்றர்கள் பயணம் செய்கின்றனர்

இலங்கையின் தலைநகரான கொழும்பிலிருந்து 330 கிலோமீற்றர் தொலைவிலுள்ள, முன்னர் புலிகளின் முக்கிய செயற்பாட்டு மையமாகக் காணப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் தெற்கில் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு எனும் இடத்தில் உள்ள இந்நிலக்கீழ் பதுங்குகுழியானது காட்டின் அடர்ந்த பகுதியில் காணப்படுகிறது

துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகம் மேற்கொள்வதற்கான இடம், வாகனம் நிறுத்தும் கொட்டில், பயிற்சி செய்வதற்கான இடம், மண்டபம் மற்றும் போரில் உயிர் நீத்த தனது போராளிகளுக்கு புலிகளின் தலைவர் வணக்கம் செலுத்துவதற்கான மண்டபம் போன்றவற்றை இந்நிலக்கீழ் பதுங்குகுழியானது கொண்டுள்ளது

"இது அசாதாரணமானது. அவர்கள் எவ்வாறு இது போன்ற ஒன்றை அமைத்தார்கள்?" என நிலக்கீழ் பதுங்குகுழியில் காணப்பட்ட ஒடுங்கிய படிகளில் நடந்து கொண்டிருந்த றஞ்சினி என்ற பெண் வினவினார்

புலிகள் தமது நீர்மூழ்கிக் கப்பல்களை அமைக்கும் கப்பல் கட்டுந்துறை புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசத்தைப் பார்வையிடச் செல்லும் பயணிகளின் கவனத்தை ஈர்க்கின்ற பிறிதொரு விடயமாகக் காணப்படுகின்றது. இக்கப்பற் துறையில் விடுதலைப் புலிகளால் வழிமறிக்கப்பட்டு, முற்றுகையிடப்பட்ட ஜோர்தானிய சரக்குக் கப்பலும், Farah III என்கின்ற கப்பலின் எஞ்சிய பகுதிகளும் காணப்படுகின்றன

எது எவ்வாறான கவனங்களை ஈர்த்தாலும் கூட, யுத்ததம் இடம்பெற்ற வலயங்களில் வாழும் தமிழ் மக்கள் 30 ஆண்டுகால யுத்தத்தின் வடுக்களைத் தாங்கி நிற்கும் அதேவேளையில் தற்போதும் கூட தமது அன்றாட தேவைகளை எதிர்கொள்வதில் பல்வேறு கடினங்களைச் சந்திக்கின்றனர் என்பதே உண்மையாகும்

மே 2009ல், தனிநாடு கோரி முப்பதாண்டுகளாகப் போராடிய புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதை அடுத்து இலங்கை இராணுவப் படைகள் புதுக்குடியிருப்பில் காணப்படும் நிலக்கீழ் பதுங்குகுழியை கண்டுபிடித்தனர்

புலிகளின் பிரதான செயற்படு தளங்களாகக் காணப்பட்ட புதுக்குடியிருப்பு மற்றும் முல்லைத்தீவு தற்போது பல ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ள இடங்களாக காணப்படுகின்றன. இங்கு வருகின்ற பயணிகளில் பெரும்பாலானவர்கள் சிறிலங்காவின் தென்பகுதியைச் சேர்ந்த சிங்களவர்களாவர்

யுத்த வலயங்களைப் பார்வையிடச் செல்கின்ற சுற்றுலாப் பயணிகளின் வழிகாட்டிகள், புலிகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட நிழல் நிர்வாகம் தொடர்பாகவும், அவர்களின் இராணுவத் திறன் தொடர்பாகவும் சரியான விளக்கங்களை வழங்காதமை தொடர்பில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் அச்சங்கொள்கின்றனர்

ஏனெனில் யுத்தம் இடம்பெற்ற வலயங்களில் வாழும் மக்கள் உண்மையில் தற்போது எவ்வாறு துன்பங்களை எதிர்நோக்குகின்றனர் என்பது தொடர்பாகவோ அல்லது யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த பல பத்தாயிரக்கணக்கான பொதுமக்கள் நாளாந்தம் எதிர்நோக்கிய இன்னல்கள் தொடர்பாகவே சுற்றுலாப் பயணிகள் எந்தவொரு செய்திகளையும் அறிந்துகொள்வதில்லை

"உண்மையில் என்ன நடந்தது என்பதை சுற்றுலாப் பயணிகளுக்கு எடுத்துக் கூறுவதில்லை அல்லது அவர்கள் இதனை அறிய விரும்புவதில்லை" என சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை நிதியத்தின் மோதல் நிகழ்ச்சித் திட்டத்தின் மனித உரிமை விவகாரத்தை தலைமை தாங்கும் மனித உரிமைச் செயற்பாட்டாளரான றுக்கி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்

இலங்கையில் தொடரப்பட்ட யுத்தத்தின் இறுதியில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நாட்டிற்கு உள்ளே செயற்படும் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அனைத்துலக மனித உரிமை கண்காணிப்பு அமைப்புக்கள், உதவிப் பணியாளர்கள் போன்றோர் தமது வெளியிட்ட அறிக்கைகளில் குறைந்தது 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால் இதனை நிராகரித்த இலங்கை அரசாங்கம் இறுதிப் பேரில் 7000 பேர் வரையிலே கொல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது

2009ன் முற்பகுதியில் இலங்கையில்  உண்மையில் என்ன நடந்தது என்பதையும், இதற்கு யார் பொறுப்பாளிகள் என்பதையும் நவம்பர் மாதத்தின் முதற்பகுதியில் .நா வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இறுதி யுத்தத்திற்குள் அகப்பட்டுக் கொண்ட தமிழ் மக்கள், இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான மீட்பு நடவடிக்கை மூலம் காப்பற்றப்பட்டு 'நலன்புரி நிலையங்களில்' தற்காலிகமாக குடியேற்றப்பட்டதாக இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் கூறிவருகிறது

இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் அனைத்துலக நியமங்களுக்கு அப்பால் திறந்த தடுப்பு முகாங்களில் அடைத்து வைக்கப்பட்டதாக .நா அதிகாரிகளும், உதவிப் பணியாளர்களும் உறுதிப்படுத்துகின்றனர்

"யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களின் ஊடாகப் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் தற்காலிக கொட்டகைகளில் வாழும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நிலையை காணத் தவறுகின்றனர்" என யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டியங்கும் பெண்கள் மற்றும் அபிவிருத்திக்கான மையத்தின் தலைவி சறோஜா சிவச்சந்திரன் தெரிவித்துள்ளார்

450,000 வரையான இடம்பெயர்ந்த மக்கள் தற்போது அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்ட போதிலும், இவர்களுக்கான அடிப்படைத் தேவைகள் இன்னமும் பூர்த்தியாக்கப்படவில்லை. உடனடியாக வீடுகள் தேவைப்படும் 170,000 பேரில் 21,000 குடும்பங்களுக்கு மட்டுமே நிரந்தர வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான புனர்வாழ்வுத் திட்டங்கள் போதியளவில் முன்னெடுக்கப்படவில்லை என .நா வெளியிட்ட இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மொழி மற்றும் கலாசாரம், சமூகக் கட்டமைப்புக்கள் என்பன யுத்த வலயத்தை பார்வையிடச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கும் அங்கு வாழும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இடையில் நீண்ட இடைவெளியை ஏற்படுத்துகின்றன

"யுத்தம் இடம்பெற்ற வலயத்தில் காணப்படும் நிலக்கீழ் பதுங்குகுழி போன்ற கவனத்தை ஈர்க்கின்ற குறிப்பிட்ட சில இடங்களை மட்டுமே சுற்றுலாப் பயணிகள்பார்வையிட விரும்புகின்றனர். இதற்கப்பால் வேறெதனையும் பார்வையிட அல்லது அவதானிக்க இவர்கள் விரும்பவில்லை" என யுத்தம் முடியும் வரை யுத்த வலயத்தில் வாழ்ந்த 61 வயதான ஓய்வு பெற்ற இலங்கை அரசாங்க கல்வித் துறை அலுவலரான மகேந்திரன் சிவகுமார் இவ்வாறு தெரிவித்தார்

கட்டுரை வழிமூலம் : Inter-Press Service - Amantha Perera 

மொழியாக்கம்  : கவாஸ்கர் 

[vuukle-powerbar-top]

Recent Post