Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வழக்கில் இருந்து பிரபாகரனை விடுவிக்கக் கோருகிறது தமிழக காவல்துறை

சென்னை பாண்டி பஜாரில் புளொட் இயக்கத்துடன் நடந்த துப்பாக்கிச் சண்டை தொடர்பான வழக்கில் இருந்து, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட நான்கு பேரின் பெயர்களை நீக்க வேண்டும் என்று கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். 

சென்னை பாண்டி பஜாரில் கடந்த 1982 மே மாதம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும், புளொட் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றது. 

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், ராகவன் எனப்படும் சிவகுமார் ஆகியோர் சுட்டதில்புளொட் இயக்கத் தலைவர் முகுந்தன் எனப்படும் உமாமகேஸ்வரன் மற்றும் ஜோதீஸ்வரன் ஆகியோர் காயமடைந்தனர். 

இதையடுத்து, வே.பிரபாகரன் மற்றும் சிவகுமாரை மாம்பலம் காவல்துறையினர் கைது செய்து, அவர்கள் மீது ஆயுத தடைச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சிவனேஸ்வரன் எனப்படும் நிரஞ்சன் சைதாப்பேட்டையிலும், கும்மிடிப்பூண்டி தொடருந்து நிலையத்தில் உமாமகேஸ்வரனும் கைது செய்யப்பட்டனர். 

இவர்கள் மீதும் ஆயுத தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் பிணையில் வெளிவந்த இவர்கள் தலைமறையினர். 

இந்த வழக்கு 7வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. 

இந்த நான்கு பேர் மீதும் பிணையில் வெளிவரமுடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

நீண்டநாட்களாக தள்ளிவைக்கப்பட்டு வந்த வழக்கு, மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, சிபிசிஐடி காவல்துறை சார்பில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

அதில் “முதல் சந்தேகநபராக சேர்க்கப்பட்ட புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் போரில் கொல்லப்பட்டு, அவரது உடல் நந்திக்கடல் பகுதியில் 2009 மே 19ல் கண்டுபிடிக்கப்பட்டது என்று புதுடெல்லியில் உள்ள அனைத்துலக காவல்துறை உதவி இயக்குனர் தகவல் அனுப்பியுள்ளார். 

சிவகுமார் இந்தியாவை விட்டு வெளியேறி 15 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் இல்லை. 

ஜோதீஸ்வரன், ஹொங்கொங்கில் இருப்பதாக தகவல் வந்துள்ளது. 

நிரஞ்சன் இறந்து விட்டதாக சிபிசிஐடிக்கு தகவல் வந்துள்ளது. 

எனவே, இந்த வழக்கிலிருந்து வே.பிரபாகரன், சிவகுமார், ஜோதீஸ்வரன், நிரஞ்சன் ஆகியோரை நீக்குமாறு உத்தரவிட வேண்டும்.” 

இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டுள்ளது. நேற்று தாக்கல் செய்யப்பட்ட மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post