Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

குஜராத் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று முன்தினம் (13-ந்தேதி) 87 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் நடந்தது. சுமார் 69 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது.

இதையடுத்து குஜராத் மாநிலத்தில் வருகிற திங்கட்கிழமை (17-ந்தேதி) 2-வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று (சனிக்கிழமை) முடிகிறது. இதையொட்டி குஜராத்தில் பாரதீய ஜனதா தலைவர்களும், காங்கிரஸ் கட்சி தலைவர்களும் உச்சக்கட்ட இறுதி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்களை கவரும் வகையில் அங்கு தேர்தல் பிரசாரத்தில் அனல்பறக்கிறது. இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி தேர்தல் பிரசாரம் செய்து வரும் முதல்- மந்திரி நரேந்திர மோடி இன்று பல இடங்களில் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். காந்தி நகரில் அவர் பிரசாரத்தை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளார்.

மோடிக்கு சவால் விடும் வகையில் ராகுல்காந்தியும் குஜராத் இறுதிநாள் பிரசாரத்தில் குதித்துள்ளார். அவர் இன்று மாலை கட்ச் மாவட்டத்தில் உள்ள பூஜ் நகரில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசி பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

இதனால் மோடி- ராகுல் இடையே போட்டி பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

குஜராத்தில் இன்றுடன் பிரசாரம் ஓய்வதால் அந்த மாநிலத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது. இதையட்டி இரண்டாம் கட்ட தேர்தல் பெற உள்ள தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2-ம் கட்ட தேர்தலிலும் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிக அளவில் இருக்கும் என்று தெரிகிறது. இது யாருக்கு சாதகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

திங்கட்கிழமை ஓட்டுப்பதிவு நடைபெறும் வாக்குச் சாவடிகளில் இப்போதே ராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். ஓட்டுப்பதிவு முடிந்ததும் ஓட்டுப் பெட்டிகளை பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் தேர்தல் கமிஷன் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.

வருகிற 20-ந்தேதி (வியாழக்கிழமை) குஜராத் மாநிலத்தில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். அன்று மதியம் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? என்பது தெரிந்து விடும்.

இதுவரை நடத்தப்பட்டுள்ள கருத்துக்கணிப்புகள் அனைத்தும் நரேந்திரமோடி அமோக வெற்றி பெற்று 3-வது முறையாக முதல்-மந்திரி ஆவார் என்று கூறியுள்ளன. அது பலிக்குமா? என்பது 20-ந்தேதி தெரியும்.

இமாச்சல பிரதேசத்தில் கடந்த மாதம் 4-ந்தேதி தேர்தல் நடந்தது. அந்த மாநில ஓட்டுக்களும் 20-ந்தேதி எண்ணப்பட உள்ளன.
[vuukle-powerbar-top]

Recent Post