Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மானிய விலையில் ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் என்ற வரம்பு தளர்த்தப்பட்டு 9ஆக உயர்த்தப்படும் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார். இதற்கு தேர்தல் ஆணையம் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம், வீடுகளுக்கு வழங்கப்படும் மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கை 6 ஆக குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதை விட கூடுதலாக சிலிண்டர்களை வாங்க நினைப்பவர்கள் அசல் விலையான 931 ரூபாயை செலுத்தி பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, மானிய விலையில் விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, ஆண்டுக்கு 6 சிலிண்டர்களுக்குப் பதிலாக 9 சிலிண்டர்களை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து மிக விரைவில் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். சிலிண்டர் எண்ணிக்கையை 9ஆக உயர்த்துவதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.9 ஆயிரம் கோடி கூடுதல் செலவு ஏற்படும்'' என்றார். இ‌ந்த ‌நிலை‌யி‌ல் குஜராத்தில் முதல் கட்டமாக நாளை சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறும் சூழலில், இந்த அறிவிப்பு விதிகளுக்கு எதிரானது என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து, இன்று காலை 11 மணிக்குள் உரிய விளக்கம் அளிக்குமாறு அமைச்சர் வீரப்ப மொய்லிக்கு தேர்தல் ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post