Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மாணவ தலைவர்கள் கைதானதை அடுத்து யாழ் பல்கலைக்கழகச் சூழலில் பதற்றம் அதிகரிப்பு

யாழ் பல்கலைக்கழக மாணவ தலைவர்கள் நால்வர் இலங்கை காவல்துறையின் தீவிரவாத விசாரணைப் பிரிவினால், கைது செய்யப்பட்டுள்ள நிலையில், யாழ் பல்கலைக்கழகச் சூழலில் பதற்றநிலை அதிகரித்து வருகிறது. 

இதையடுத்து சிங்கள மாணவர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். 

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலர் பரமலிங்கம் தர்சானந்த் (24), கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் கனகசுந்தரசாமி ஜெனமேஜெயன் (24), விஞ்ஞான பீட மாணவர் ஒன்றிய உறுப்பினர் சண்முகம் சொலமன், மருத்துவபீட மாணவர் கணேசமூர்த்தி சுதர்சன் ஆகியோர், இலங்கை 
காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இவர்க்ள தற்போது தீவிரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டு வவுனியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

திருநெல்வேலியில் உள்ள சிறிரெலோ கட்சியின் பணியகம் மீது பெற்றோல் குண்டுவீசியதாக இவர்கள் மீது இலங்கை காவல்துறை குற்றம்சாட்டியுள்ள போதும், மாவீர்ர் நாளன்று தீபம் ஏற்றியதற்கு பழிவாங்கும் செயலாகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாணவர்கள் கூறுகின்றனர். 

மாணவ தலைவர்கள் கைதானதை அடுத்து யாழ் பல்கலைக்கழத்தில் விரிவுரை புறக்கணிப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் பெருமளவு இலங்கை படையினரும், காவல்துறையினரும் பல்கலைக்கழக சுற்றுப்புறத்தில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றநிலை அதிகரித்துள்ளது. 

இதையடுத்து சிங்கள மாணவர்கள் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர். 

மாணவர்களை விடுவிக்கக் கோரி நடத்தப்படும் போராட்டத்துக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. 

அதேவேளை மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிராக இன்றும் நாளையும் யாழ்ப்பாணத்தில் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இதனிடையே, கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்குமாறு, இலங்கை காவல்துறைமா அதிபரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post