Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பெண்களின் மீது அமிலம் வீசும் கொடுமையை கடும் தண்டனையின் மூலம் தடுத்திட வேண்டும்:நாம் தமிழர் கட்சி

தன்னைக் காதலிக்காத அல்லது திருமணம் செய்துகொள்ள முன்வராத இளம் பெண்களின் முகத்தில் அமிலத்தை வீசி தாக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருவது அதிர்ச்சியையும், வருதத்தையும் அளிக்கிறது. காரைக்காலில் நடந்துள்ள ஒரு நிகழ்வு அரசும், காவல்துறையினரும் கவனத்தில் எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டியது அவசியமாகிறது. அங்கு பி.டெக் வரை படித்துவிட்டு பணியாற்றிவரும் பெண்ணை ஒரு தலையாக காதலித்த ஒரு இளைஞன், தன்னை அவள் காதலிக்க மறுத்த காரணத்திற்காக அவளுடைய முகத்தில் அமிலத்தை (ஆசிட்) வீசித் தாக்கியுள்ளார். இதில் அந்த பெண்ணின் முகம் முழுவதுமாக சிதைந்துள்ளது. அவருடைய கண் முற்றிலுமாக பார்வையிழந்துவிட்டது. மிகக் கொடூரமான வன்முறைக்கு ஆளான அந்த பெண் மீண்டும் தனது இயற்கையான உருவத்தை அடைய முடியாத துயரமான நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் (தற்போது ஆதித்யா  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்) .

சமீபத்தில் சேலத்திலும், நாகர்கோயிலிலும் இப்படிப்பட்ட அமிலத் தாக்குதல் குற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இன்று காலை நாளிதழ்களில் வந்துள்ள ஒரு செய்தியும் குறிப்பிடத்தக்கதாகும். மும்பையில் மணமான ஒரு பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர், பூச்சிகளைக் கொல்ல விற்கப்படும் ஹிட் என்ற அமிலம் கலந்த பொருளை ஒரு பெண்ணின் முகத்தில் அடித்துவிட்டு, அதன் மீது தீக்குச்சியையும் பற்ற வைத்து வீசியுள்ளார். இதில் அந்த பெண்ணும், அவரோடு இருந்த மற்றொரு பெண்ணும் முகத்தில் படுகாயமடைந்துள்ளனர். 20 விழுக்காடு எரி காயத்துடன் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்படி, பெண்களோடு ஏற்படும் முரண் அல்லது தகராறு போன்றவற்றிற்கெல்லாம் பெண்ணின் முகத்தை சிதைப்பது என்கிற கோணத்தில் இந்த குற்றச்செயல்கள் பெருகி வருகின்றன. இதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது வருத்தத்திற்குரியதாகும். இது இளம் பெண்களின் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கி வருகிறது.

பெண்கள் மீது மட்டுமின்றி, தங்களுடைய தொழில், அரசியல் எதிரிகள் மீதும் அமிலத் தாக்குதல் நடந்து வருகிறது. எனவே அரசு மிகுந்த கவனம் செலுத்த வேண்டிய ஒரு சமூக பிரச்சனையாக இது உருவாகியுள்ளது. இப்படிப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டாலும் அவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனை போதுமானதாக இல்லை என்பதே மனிதாபிமான செயல்பாட்டாளர்களின் கருத்தாக இருக்கிறது.

எனவே இப்படிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபடுவோரை, கொலை வழக்குகளில் ஈடுபடுவோரை விசாரிப்பது போல் விரைவு நீதிமன்றங்களில் விசாரித்து தண்டிக்க வேண்டும் என்பது மட்டுமின்றி, அதற்கான தண்டனையும் கடுமையாக்கப்பட வேண்டும். மேலும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் அமிலங்கள் என்று பார்த்தால், அது பெரும்பாலும் ஆய்வு சாலைகளில் பயன்படுத்தப்படும் கான்சன்டிராட்டட் ஹைட்ரோகுளோரிக், ஹைட்ரஜன் சல்பேட் போன்றவையாகவே உள்ளது. வீட்டுச் சுவர்களில் பூசப்படும் வண்ணங்களை விற்கும் கடைகளிலும் விற்கப்படும் அமிலங்களும் இப்படிப்பட்ட தாக்குதல்களில் பயன்படுத்தப்படுகிறது.

எனவே, ஆபத்தான இப்படிப்பட்ட அமிலங்களை விற்பனை செய்யும் முகவர்கள், சில்லரை வியாபாரிகள் ஆகியோரையும் முறையற்ற விற்பனைக் குற்றத்திற்காக வழக்கில் சேர்க்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். எப்படி ஆபத்தான மருந்து பொருட்களை மருத்துவரின் பரிந்துரையின்றி விற்பதற்கு மருந்தகங்களுக்கு அனுமதியில்லையோ அதேபோல், இப்படிப்பட்ட அமிலங்களை விற்பனையின் மீதும் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும். கொடுமையான இந்த குற்றச்செயல்களுக்கு வேராக இருப்பது அமிலங்களே. எனவே அவற்றின் விற்பனையை முறைபடுத்துவது மூலம் மட்டுமே இந்த குற்றச்செயல்களை தடுத்திட முடியும். இது தொடர்பான நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக மேற்கொண்டு, இதற்கு மேலும் இப்படிப்பட்ட கொடூரமான குற்றச்செயல்கள் நடந்திடாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது. 

நாம் தமிழர் கட்சிக்காக,
செந்தமிழன் சீமான் தலைமை
ஒருங்கிணைப்பாளர்[vuukle-powerbar-top]

Recent Post