Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சேரிகள் குறித்த கட்டுக் கதைகள் ம.செந்தமிழன்


தமிழர் அரசாண்ட காலம் வரையில், சேரி என்பது, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான குடியிருப்பு அல்ல. அதேபோல், சேரி என்றாலே அது ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒதுக்கப்பட்ட பகுதியும் அல்ல.

சேரிகள் குறித்த கட்டுக் கதைகள்ம.செந்தமிழன்தமிழர் அரசாண்ட காலம் வரையில், சேரி என்பது, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான குடியிருப்பு அல்ல. அதேபோல், சேரி என்றாலே அது ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒதுக்கப்பட்ட பகுதியும் அல்ல.


‘பெருவுடையார் கோயிலின் வடமேற்கு வெளிச்சுவரை அடுத்த பகுதிதான் தளிச்சேரி அமைந்த இடம்.’
(தஞ்சாவூர், குடவாயில் பாலசுப்ரமணியன்/ அன்னம் 2009/ பக் – 42)
இது நகரின் நடுவே அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சேரி என்ற சொல் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்பைத்தான் குறிக்கும் என்பதும் ஒரு கட்டுக்கதையே. சேரி எனும் சொல், ’புறத்தே’ உள்ள குடியிருப்பு அல்லது ஊர் எனும் பொருளிலேயே பயன்படுத்தப்பட்டு வந்தது. சேர்ந்து வாழும் பகுதியின் பெயர் சேரி அவ்வளவே.
தளிச்சேரி –பெருவுடையார் கோயிலின் புறத்தே இருந்ததால், இப்பெயர் வந்திருக்கலாம். இராசராசச் சோழர் காலத்தில், கோயிலைச் சுற்றி அக்கிரகாரங்கள் மட்டுமே இருந்தன என்ற கட்டுக்கதையையும் இங்கே நினைவு கூறத்தக்கது.
சிலப்பதிகாரம் குறிப்பிடும் புறஞ்சேரி எனும் ஊரில், பார்ப்பனரும், பாணரும் உள்ளனர்.(புறஞ்சேரி இறுத்த காதை)
இவ்வூரைச் சிலப்பதிகாரம்,
’புரிநூல் மார்பர் உறைபதி’
-அதாவது மார்பில் நூல் அணிந்தவர் வாழும் ஊர் என்று குறிக்கிறது.
பறைச்சேரி, என்றால் பறையர் வாழும் ஊர் என்பதுதான் பொருள். மாறாக, பறையர்கள் தாழ்த்தப்பட்டனர் என்றோ, அவர்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கட்டனர் என்றோ பொருள் அல்ல. இதேபோல், பார்ப்பனச் சேரிகளும் தமிழர் வரலாற்று ஆவணங்களில் ஏராளமாக உண்டு.
ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த சோமன், ரவிதாசன், பரமேஸ்வரன் ஆகியோரின் தம்பி ரேவதாச வித்தன் வாழ்ந்த ஊரின் பெயர் பாப்பனச் சேரி ஆகும்.இம்மூவரும் பிராமணர் என்பது குறிப்பிடத்தக்கது.
(உடையார்குடிக் கல்வெட்டு – ஒரு மீள்பார்வை/முனைவர்.குடவாயில் பாலசுப்ரமணியன்)
நாகை அருகே, பார்ப்பனச் சேரி என்ற ஊர் இன்றும் உள்ளது.
குறிப்பிட்ட சேரிகளில் குறிப்பிட்ட பிரிவினர் தனித்துதான் வாழ்ந்தனர் என்பதும் இல்லை. சேரி என்றால், அதில் பார்ப்பனரும் வாழ்வர், பாணரும் வாழ்வர் என்பதை நிறுவவே சிலப்பதிகார மேற்கோள் காட்டப்பட்டது.
இன்றோ, தமிழகத்தில் சேரிகள் என்பவை தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் இடத்தை மட்டுமே குறிக்கின்றன. இந்த நிலை, உருவானது, விஜயநகர, நாயக்க, மராட்டிய அரசர்கள் காலத்தில்தான்.
இதைக் கொண்டு, தமிழ் இலக்கியங்களில் சேரி எனக் குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள் எல்லாமே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்கள் எனவும், அவ்விடங்கள் ஊரை விட்டு வெளியே இருந்தன எனவும் சேரிகளில் வாழ்ந்த மக்கள் அனைவரும் தீண்டத்தகாதவராக இருந்தனர் என்றும் கற்பனைக் கோட்டைகள் கட்டப்பட்டு வருகின்றன. உண்மையில், இந்த நிலைமைகள் எல்லாம் இன்றுதான் உள்ளன. தமிழர் அரசாண்ட காலம்வரை சேரி என்பது இருப்பிடத்திற்கான குறிச்சொற்களில் ஒன்று. அவ்வளவே.
இதுபோன்ற பொய்களைப் பரப்பியதில், திராவிடக் கோட்பாட்டாளர்கள் கடந்த நூற்றாண்டில் பெருவெற்றி பெற்றனர் என்பது தமிழர்களைத் தலைகுனியச் செய்யும் உண்மை. தலித்தியம் பேசும் சிலரும் இந்தக் கட்டுக் கதைகளை நம்பி, தமிழர் வரலாற்றையே சாதிய வரலாறாக அணுகத் துவங்கிவிட்டனர்.
’நகரப் பெருந்தெருக்களில் உயர்குடியினர் மட்டுமே வாழ்ந்தனர். சாதியால் தாழ்த்தப்பட்டோருக்கு அங்கே இடமில்லை’ என்பதும் பரவலாக வீசப்படும் குற்றசாட்டு.
தஞ்சையின் பெரும் தெருக்களில் ஒன்றான சூரசிகாமணிப் பெருந்தெருவில் வாழ்ந்தோரது பட்டியல் இது;
• குயவர்கள்
• வண்ணத்தார்
• ஈரங்கொல்லிகள் (துணி வெளுப்போர்)
• நாவிதர்கள் (முடி திருத்துவோர்)
• கணித நூலோர் (சோதிடர்)
(தஞ்சாவூர் –முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்/ அன்னம் 2009/ பக் -51)

நிலக் காணிக்கொடை வழங்கும் சோழர் கால வழக்கம், பிராமணருக்கு மட்டுமே உரியதாக இருக்கவில்லை. கோயில் தொடர்பான பணிகள் செய்த பல்வேறு தொழில் குலத்தவருக்கும் நிலக் காணி வழங்கப்பட்டது.
பெருவுடையார் கோயில் நிர்வாகத்திற்காக, அக்கோயிலில் பணி செய்தவர்களின் பட்டியலைப் பல்வேறு கல்வெட்டுகள் பதிவு செய்துள்ளன. அப்பணியாளர் அனைவருக்கும் எவ்வளவு நிலக் காணி வழங்கப்பட்டது என்ற பதிவும் அவற்றில் அடங்கும்.
அக்கல்வெட்டுச் சான்றுகளிலிருந்து சிலவற்றை இங்குக் காட்டுகிறேன்.
நட்டுவம் செய்யும் ஆசார்யார்கள் – 12
கானம் பாடுவோர் -5
ஆரியம் பாடுவோர் – 3
தமிழ் பாடுவோர் -4
கொட்டி மத்தளம் இசைப்போர் – 2
முத்திரைச் சங்கு ஊதுவோர் -3
விளக்குப் பணியாளர் – 7
நீர் தெளிப்பவர் – 4
குயவர்கள் – 10
துணி வெளுப்பவர் – 2
நாவிதர் – 6
துணி தைப்பவர் – 2
கன்னார் – 1
தச்சர் – 5
சாக்கைக் கூத்தர் -4
-உள்ளிட்ட மொத்தம் 258 பேர் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் அவரவரது பணிக்கேற்ப, ஒன்றரை முதல் 2 காணி நிலம் வரை வழங்கப்பட்டது.
((இராஜராஜேச்சரம், குடவாயில் பாலசுப்ரமணியன்/ சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளை 2010/ பக் – 429)
இராசராசச் சோழர் காலத்தில், பிராமணருக்கு நிலங்கள் தானமாக வழங்கப்பட்டன என பொத்தாம் பொதுவாக, எந்த முறையான சான்றுகளும் இல்லாமல், பரப்புரை செய்வோர், மேற்கண்ட கல்வெட்டுகளைக் கண்டுகொள்வதே இல்லை.
உணவு உற்பத்தியை, உற்பத்திப் பிரிவினருக்கும் – உற்பத்தி சாராத பிரிவினருக்கும் இடையே பகிர்ந்தளிக்கும் முறையின் நிலவுடைமை வடிவமே நிலக்காணி / நிலக் காணியில் பங்கு வழங்கும் முறை ஆகும். இந்தப் பகிர்ந்தளிப்பின்போது உருவாகும் உபரி மதிப்பை, அரசர், அதிகாரிகள், வேளாளர், வணிகர் ஆகிய நான்கு பிரிவினரும் தமக்குள் பிரித்துகொண்டனர்.

கோயில்களில் பிராமணரல்லாதோர்:
கோயில்களில் பிராமணர் மட்டும்தான் கோலோச்சினர். அல்லது, கோயில்களில் பூசை செய்தோர் அனைவருமே பிராமணர்கள்தான் என்ற பரப்புரையின் உண்மைப் பக்கங்களைக் காண்போம்.
’தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் தலைமை சிவாச்சாரியாரக இருந்தவர் பவனபிடாரன் என்பவராவர்.’(மேலது நூல் / பக் – 440)
இவர் ஆரியருமல்லர்; பிராமணரும் அல்லர். தமிழாய்ந்த தமிழரே! தேவாரம் பாடுவோர் பிடாரர் எனப்பட்டனர். பவனபிடாரர், தேவாரம் பாடுபவர்; இவரே கோயிலின் தலைமைக் குரு. பிராமணர்கள் இவருக்கு அடுத்த நிலையில்தான் வைக்கப்பட்டனர். பிராமணர்கள், அரசனிடமிருந்து காணிப் பங்கு எதிர்பார்த்து வாழ்ந்த நிலையில்,
‘பவன பிடாரன் பெருவுடையார் கோயிலுக்கு பொன் போர்த்திய செப்புக் குடத்தை அறக்கொடையாக வழங்கினார்’ (மேலது நூல்/ பக் – 440)
பிராமணரைக் கொலை செய்வது பாவம் என்பது ஆரிய பிராமணியத்தின் கோட்பாடுகளில் ஒன்று. பிரமஹத்தி தோக்ஷம் என்று இதற்குப் பெயர்.
‘மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாச்சரியனுடன் போரிட்ட இராஜராஜன் அந்நாட்டு பிராமணர்களைக் கொன்றான் என்பதைச் சாளுக்கியக் கல்வெட்டுகள் காட்டுகின்றன’(உடையார்குடி கல்வெட்டு ஒரு மீள் பார்வை –குடவாயில் பாலசுப்ரமணியன்)
இவை ஒருபுறமிருக்க, கோயில்களில் பூசை செய்யும் பிரிவினர் குறித்த சில விளக்கங்களைக் காண்போம். தமிழர் வரலாற்றில் பார்ப்பார்கள் என்னும் பிரிவினரில் தமிழரும் உண்டு; அந்தப் பார்ப்பாரில் பெரும்பகுதியினர் வள்ளுவர், பறையர் உள்ளிட்ட அறிவார்ந்த பிரிவினர் ஆவர்.
ஆரியப் பிராமணர் தமிழருடன் இணைந்து பிழைக்கத் தொடங்கிய பிறகு பார்ப்பார் எனும் பெயரைத் தமக்கானதாகவும் மாற்றிக் கொண்டனர். மார்பில் குறுக்காக நூல் அணியும் வழக்கம் தமிழர்களின் அறிவுசார் குலத்தவரிடன் தொன்மையான வழக்கமாகும். சூத்திரர், எனும் சமக்கிருதச் சொல்லுக்கான பொருளே, ‘நூல் அணிந்தவர்’ என்பதுதான்.
இதற்கான சான்று கீழே தரப்பட்டுள்ளது.
sutra (p. 351) [ s&usharp;-tra ] n. [&root;sîv] V., C.: thread, string, cord (ord. mg.); C.: sacred cord (worn over the left shoulder by the three upper castes);
(http://dsal.uchicago.edu/dictionaries/macdonell/)
ஆகவே, பூணூல் அணிந்தோரெல்லாம், ஆரிய பிராமணர் அல்லர். பூணூல் என்பது பிராமணர்களுக்கு மட்டுமே உரித்தான உடமையும் அல்ல!

- senthamila
[vuukle-powerbar-top]

Recent Post