Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com


'தமிழர் கழகம்' கண்ட முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் நினைவு நாள் |19.12.1994| முதல் இந்தி எதிர்ப்புப்போரில் (1938) தந்தை பெரியாரோடும், தமிழறிஞர்களோடும் கைகோத்துப் போராடிய முதன்மைப் போராளியே கி.ஆ.பெ.விசுவநாதம். பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலும், நீதிக்கட்சியிலும் தொடர்ந்து பணியாற்றினார். 24.7.1927ஆம் ஆண்டு திருச்சியில் சுயமரியாதை அல்லது மூன்று நண்பர்கள் நாடகத்தை அரங்கேற்றினார். அதில் கலப்புத் திருமணத்தையும், விதவைத் திருமணத்தையும் வலியுறுத்திப் பேசினார். இந்த நாடகத்திற்குப் பிறகு தான் தமிழ்நாடெங்கிலும் பார்ப்பன வேதமந்திரங்கள் தவிர்த்த சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின. 1937ஆம் ஆண்டு நாவலர் சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற தமிழர் மாநாட்டில் தைமுதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு நாள் என்று முடிவு செய்யப்பட்டதை வரவேற்றுப் பேசினார். தந்தைபெரியார் நீதிக்கட்சியை "திராவிடர்க்கழகம்" என்று பெயர் மாற்றம் செய்த போது அக்கட்சியிலிருந்து விலகினார். தமிழுக்காக, தமிழருக்காக தமிழரால் நடத்தப்படும் தமிழியக்கம் ஒன்றை "தமிழர் கழகம்" என்ற பெயரில் தொடங்கினார். தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்திற்கு வலுசேர்க்கும் வகையில் "தமிழர் நாடு" என்ற ஏட்டையும் நடத்தினார். தமிழர்கழகம் என்று பெயர் வைத்தோர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள் என்று தந்தை பெரியார் பேசியதைக் கண்டித்தார். மொழிவழி அடிப்படையில் பிரிந்த தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் ஆகியோரைப் பார்த்து கருங்காலிகள், பித்தலாட்டக்காரர்கள் என்று பெரியார் கூறத்தயாரா? என்று கேள்வி எழுப்பினார். 1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் மக்களை தூண்டியதாகக் கூறி இரண்டு மாதம் சிறையிலடைக்கப்பட்டார். அதன் காரணமாக கி.ஆ.பெ.விசுவநாதம் தனது மகள் மணிமேகலை திருமண உறுதியேற்பாடு நிகழ்வுக்கு செல்ல முடிய வில்லை. தன் வாழ்நாளின் இறுதியில் தமிழீழ விடுதலைப் போருக்கு துணை நின்றார். "2000 ஆம் ஆண்டுகால தமிழர் வரலாற்றில் மாவீரன் பிரபாகரனைப் போல் ஒரு பெருவீரனை யாம் கண்டதில்லை" என்று புகழாரம் சூட்டினார். உருத்திரிந்த தமிழ்த்தேசியமாய் உருவான திராவிட இயக்கத்தை உண்மைத் தமிழ்த்தேசிய இயக்கமாய் மாற்ற முயன்று அதில் தோற்றாலும், வருங் காலத்தில் அவரின் தொலைநோக்குச் சிந்தனைகள் தமிழ்த்தேசிய விடுதலைக்கு உரமாக அமையும் என்பது மட்டும் உறுதி!


[vuukle-powerbar-top]

Recent Post