Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ராமதாசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் அரை நிர்வாணப் போராட்டம் ( படங்கள்)


அறிவார்ந்த மேதைகளே உலகைக் காப்பாற்றுங்கள்! - டிசம்பர் 21 குறித்த செய்திகள் - செந்தமிழன் 

 (இணைப்பு ஒளிப்படம்: @Paul Gregory – சத்தியமங்கலம், திம்பம் மலையிலிருந்து ) 

 உலகம் அழியுமா அழியாதா என்ற கேள்வி, மனிதகுலத்திற்கு ஒரு படிப்பினையையும் தராமல் உலா வருகிறது. மாயன்கள், இயற்கையின் ஆற்றல்களைப் பெற்ற முன்னோடிகள். இயற்கையைச் சிதைக்காமல், வாழத் தெரிந்தவர்கள். இயற்கையின் பேராற்றலை உணர்ந்து அதை வணங்கி வாழ்ந்தவர்கள். காலம் கடந்து நிற்கும் அவர்களது ஆற்றல்களின் வெளிப்பாடுகளில் ஒன்றாகக் கூட, தற்போதைய ‘உலக அழிவு’ பற்றிய செய்திகளை என்னால் உணர முடிகிறது. இந்தச் சமூகத்திற்கு, மாயன்களின் பேரால், ஒரு முக்கியமான பாடம் கற்றுத் தரப்படுவதாகவே எண்ணுகிறேன். மாயன் நாட்காட்டியை முன்னிட்டு பேசப்படும் ’அழிவு’ எனும் கருத்து, பரபரப்புச் செய்திக்கானதல்ல. ‘அனைத்தையும் வென்றுவிட்டோம். எங்கள் அறிவே மேன்மையானது. இயற்கையை வென்றவர்கள் நாங்கள்’ எனும், மனிதகுலத்தின் அறிவுத் திமிரை, எள்ளி நகையாடிக் கொண்டுள்ளது இயற்கை. 

எந்த சுனாமியையையும் தடுக்க இயலாமல், எந்த நில அதிர்வையும் தாங்கவியலாமல், எந்த வறட்சியையும் கடக்க இயலாமல், எந்தப் புயலையும், பனிப் பொழிவையும், வெள்ளத்தையும், வெப்பத்தையும் வெல்ல முடியாமல் கையறு நிலையில் நிற்கிறது மனித குலத்தின் அறிவு சமூகம். கொசுக்களின் எண்ணிக்கையைக் கூட இந்த அறிவுச் சமூகத்தினால் கட்டுப்படுத்த இயலவில்லை. ’மனித அறிவே மேலானது’ என்ற இறுமாப்பு தொழிற்புரட்சியும், காலனி ஆதிக்கமும் கூடிப் பெற்ற அசுரக் குழந்தை. கடந்த மூன்று நூற்றாண்டுகளாக, இந்த குழந்தை பிரபஞ்சத்தைக் காட்டிலும் உயரமாகவும் அகன்றும் வளர்ந்து விட்டதாகக் கற்பிதங்கள் செய்யப்பட்டன. கப்பல்களில் தொலைதூரம் பயணித்த ஐரோப்பிய வந்தேறிகள், இயற்கையின் மைந்தர்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்த தீவுகளை அடைந்தார்கள். அத்தீவுகளைத் தாமே ‘கண்டுபிடித்ததாக’ தம்பட்டம் அடித்துக் கொண்டனர். அத்தீவுகளில் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருந்த அழகிய மக்களைத் துப்பாக்கி முனையில் அடிமைகள் ஆக்கினர். 

பழங்குடி மக்கள் ஆடைகளை வெறுத்தவர்கள். பழங்குடிகளில், திறந்த நிலையில் ஒரு பெண்ணின் உறுப்புகளைக் கண்டால், எந்த ஆணுக்கும் குறி விறைத்து, அப்பெண் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டதில்லை. திறந்த நிலையில் ஓர் ஆணின் குறியைக் கண்ட எந்தப் பெண்ணும் அவனை மோகித்து அலைந்ததில்லை. நிர்வாணம் என்பது, மனித குல நாகரிகத்தின் முதிர்ச்சி என வாழ்ந்து காட்டிய பழங்குடிகள், ஐரோப்பிய வந்தேறிகளால், ’காட்டுமிராண்டிகள்’ என அழைக்கப்பட்டனர். விரல் நுனியைக் கூட கையுறையால் மறைக்கும் சீமாட்டிகளும் சீமான்களும் ‘நாகரிகமானவர்கள்’ என மரியாதை பெற்றனர். நாட்டின் தலைநகரில் பேருந்தில் பெண்ணை வன்புணர்ச்சி செய்யும் சமூகம் ’அறிவுச் சமூகம்’. 

வந்தேறிகள் சென்று இறங்கிய காடுகள் பழங்குடிப் பெண்களின் கதறலால் அதிர்ந்தன. ஆண்கள் அடிமைகள் ஆக்கப்பட்டனர். ’மரணம் என்பது, வாழ்ந்த மனிதனின் முதிர்ச்சி நிலையைக் குறிப்பது. ஆகவே, மரணம் துன்பமல்ல, அதைக் கொண்டாடுவோம்’ என்பது உலகெங்கிலும் வாழும்/வாழ்ந்த, பழங்குடிகளின் நம்பிக்கை. மரணத்தைக் கொண்டாடிய அந்த மக்கள், வந்தேறிகள் வருகைக்குப் பின்னர்தான், மரணத்தைக் கண்டு அஞ்சினார்கள். அதுவரை அவர்கள் சந்தித்த மரணங்கள், இயற்கை நிகழ்வுகள். வந்தேறிகளோ, தமது துப்பாக்கிகளால் மரணத்தைச் செயற்கையாக வரவழைத்தனர். வேட்டையில் இறந்தால் – வீரம், போரில் கொல்லப்பட்டால் - தர்மம். முதுமையில் இறந்தால் – இயற்கை. ஆனால், காரணமே அறியாத வகையில், துப்பாக்கிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பழங்குடிகள், மரணத்தைக் கண்டு அஞ்சத் துவங்கினர்.

வந்து இறங்கியவர்களுக்கும் நமக்கும் என்ன உறவு? என்ன பகை? ஏதும் புரியவில்லை. அவர்கள் வணங்கிய பெருமரங்கள், ஐரோப்பிய சீமான்களின் உணவு மேசையாக மாற்றப்பட்டன. அவர்களது மலைகள், பெயர்த்தெடுக்கப்பட்டு, ஐரோப்பியக் கழிவறைகளில் பதிக்கப்பட்டன. இயற்கையின் பிள்ளைகள், ’மலை’ என வணங்கிய அனைத்தும் அறிவின் பிள்ளைகள் கண்களுக்கு ’குவாரி’களாகத் தெரிந்தன. தொழிற்சாலையில் உற்பத்தி ஆகாத எதுவும், நாகரிகமற்றது, என அறிவு பூதம் அறிவிப்பு செய்தது. 

வேப்பங்குச்சியும், ஆலங்குச்சியும் கொண்டு பல் துலக்குபவர்கள், ’நாகரிகமற்றவர்கள்’. நச்சு வேதிப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பற்பசைகளால் பல் துலக்குவோர் ‘நாகரிகமனவர்கள்’ என்ற வகைப்பாட்டு உலகம் முழுவதும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. வானத்தைப் பார்த்து மழைக் குறி சொல்லும் கிராமத்துப் பூசாரிகள் கேலி செய்யப்பட்டனர். 
’நாளை காலை முதல் மாலை வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படலாம். மிகச் சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன’ என பொத்தாம் பொதுவான அறிக்கைகள் பகட்டுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 

பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே, கோள்களின் எண்ணிக்கையையும், இயல்புகளையும், விண்மீன்களின் தன்மைகளையும், நகர்வுகளையும் துல்லியமாக அறிவித்த இனத்தின் வாரிசுகள் ’மூடநம்பிக்கையாளர்கள்’ என அறிவிக்கப்பட்டனர். ஐம்பூதங்களின் சேர்க்கையே உலகம், அணுக்களின் சேர்க்கையே உலகம், பூமி உருண்டை வடிவமானது, சூரியனை 360 பாகையில் கோள்கள் சுற்றி வருகின்றன என்றெல்லாம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தவர்கள் ‘பிற்போக்குவாதிகள்’ என அவமானப்படுத்தப்பட்டார்கள். 

இதே தகவல்களை 300 ஆண்டுகளுக்கு முன் உரைத்தவர்கள் ‘விஞ்ஞானிகள்’ என கொண்டாடப்பட்டனர். ஆக, எதையும் அறிவிக்கும் அதிகாரம் இயற்கையின் மைந்தர்களிடமிருந்து பிடுங்கப்பட்டு, அறிவின் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டது. கேள்வி கேட்பவர்கள் சுடப்பட்டார்கள், கைது செய்யப்பட்டார்கள், அவமதிக்கப்பட்டார்கள். உலகின் தொன்மையான பழங்குடிகளில் பெரும்பகுதியினர் துடைத்தழிக்கப்பட்டார்கள். மீதமுள்ளோரும் ’இயற்கைக்கும் தமக்குமான உறவை அறுத்துக் கொண்டுள்ளனர். எவரேனும் தமக்கும் இயற்கைக்குமான உறவை உறுதி செய்ய முனைந்தால், அவர்கள் இப்போது, தீவிரவாதிகள் எனவும் பயங்கரவாதிகள் எனவும் அழைக்கப்படுகிறார்கள்.

இயற்கையை வணங்குதல் மூடநம்பிக்கை. இயற்கையின் பேராற்றலை நிராகரிக்கும் அறிவுச் சமூகத்தின் தத்துவவாதிகளை வணங்குவது ‘பகுத்தறிவு’ என்ற எழுதப்படா சட்டம் நடைமுறைக்கு வந்தது. பல்லாண்டுகளைக் கடந்து நிற்கும் மரத்தை வணங்கும் எளியோர் ‘அறிவற்றோர்’. ’மனிதரை விஞ்சிய ஆற்றலே இல்லை’ என்று உரைத்துவிட்டு, எப்போதோ இறந்துபோன, மனிதர்களின் சிலைகளுக்கு மாலையிடுவோரும் ஆண்டு தோறும் வணங்குவோரும் ’அறிவாளர்கள்’.

ஒருகாலத்தில் வாழ்ந்து, ஊருக்காகப் போராடி இறந்த கிராமத்து முன்னோர்களை அதே ஊர்க்காரர்கள் வணங்கினால், மூடத்தனம். ஒருபோதும் கண்டிராத தொலைதூர நாடுகளில் பிறந்து இறந்த தலைவர்களை, அதே கிராமத்தில் சிலை நட்டு வணங்கினால், அது ’லட்சியவாதம்’. 

ஆக, இயற்கைக்கு நெருக்கமாக எவரேனும் வாழ்ந்தால், அவர்களை இழிவுபடுத்துவதும், ’அறிவின் அடிமைகளாக வாழ்ந்தால் அவர்களை அங்கீகரிப்பதும் சமகால சமூக அதிகார மையங்களின் கோட்பாடு. இயற்கையின் பிள்ளைகளாக மனிதர்கள் தம்மை உணர்ந்த வரையில், அழிவைப் பற்றிய அச்சம் அவர்களுக்கு இருக்கவில்லை. அவ்வப்போது நேர்ந்த இயற்கைப் பேரிடர்களுக்குப் பின்னரும் மனித குலம் நீடித்துப் பிழைத்து, நாகரிகம் வளர்த்து, கட்டிடக் கலை கண்டு, மருத்துவம் அறிந்து, வானியல் உரைத்து, மொழியியல் கண்டு, வேளாண்மை பெருக்கி, காட்டு விலங்குகளைக் கால்நடைகளாக்கி, இன்னும் எண்ணற்ற அற்புதங்களைச் செய்து, இப்புவியில் மனிதர்களுக்கான வாழ்வுலகை நமக்கு வழங்கியுள்ளது. 

பல்லாயிரம் ஆண்டுகாலமாக இறுகத் தழுவிக் கிடந்த மனிதகுலத்தையும் இயற்கையையும் வெறும் 300 ஆண்டுகளில் ’அறிவுப் புரட்சி’ பிரித்தேவிட்டது. ஆழிப் பேரலைகள் பொங்கும்போதும், நிலம் நடுங்கும்போதும் ’இயற்கை அன்னையே காப்பாற்று’ என வேண்டுதல் ‘அறிவற்ற’ செயல். ஆகவே, மீண்டும் கடல் பொங்கினால், ‘அமெரிக்காவே காப்பாற்று, பிரான்சே காப்பாற்று, ஜப்பானே காப்பாற்று’ என வேண்டலாம். 

 ‘இயற்கை என்பது மனிதர்களை விட மேலானது இல்லை’ எனக் கண்டுபிடித்த ‘மேதைகள்’ பெயர்களைச் சொல்லி ‘காப்பாற்றுங்கள் மேதைகளே’ என வேண்டலாம். அமெரிக்காவும் இன்னபிற நாடுகளும் மேற்படி மேதைகளும் பெரும் ஆற்றல் மிக்கவர்கள்தான். ஏறத்தாழ 15,000 ஆண்டுகளாக மனித குலம் உணர்ந்து வாழ்ந்த வாழ்வியலை, வெறும் மூன்று நூற்றாண்டுகளில் புரட்டிப் போட்ட வல்லவர்கள் அல்லவா அவர்கள்! ஆனால், நண்பர்களே, நானறிந்த வரையில், எந்த அழிவு நேர்ந்தாலும் மரங்களும் மண்புழுக்களும் அஞ்சப்போவதில்லை. ஏன் தெரியுமா? அவைகளுக்குத்தான் அறிவே இல்லையே!


[vuukle-powerbar-top]

Recent Post