Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வன்னிப்போர் அவலங்களின் கதைகளை ஓவிய நாவலாகத் தயாரிக்கும் ஐ.நாவின் முன்னாள் அதிகாரி

கிளிநொச்சியில் இறுதியாக ஐ.நா அதிகாரியாகப் பணியாற்றிய பென்ஜமின் டிக்ஸ், Reflections of the rippling effects of conflict on a Sri Lankan family என்ற பெயரில், இலங்கை போரின் தாக்கங்களை வெளிப்படுத்தும் ஓவிய நாவல் ஒன்றை வெளியிடவுள்ளார். அதுபற்றிய அவரது குறிப்பு. 

2008 செப்ரெம்பர் 12ம் நாள், விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைமையகமான கிளிநொச்சியில் இருந்து நாம் வெளியேற வேண்டும் என்று நான் கேட்கப்பட்டிருந்தேன். 

இலங்கை இராணுவம் தெற்கே சில கி.மீ தொலைவில் இருந்து, ஏற்கனவே நகரின் மீது எறிகணைகளை வீசிய போது, ஐ.நா வளாகமும் தாக்கப்பட்டது. 

எனது ஐ.நா பணியகத்தில் இருந்து ஒரு கி.மீ தொலைவில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலின் போது, குண்டுச்சிதறல்கள் எமது முற்றத்தில் மழையாக கொட்டின. 

நாம் வெளியேறப் போகிறோம் என்ற செய்தி வெளியானதை அடுத்து, நூற்றுக்கணக்கான தமிழ்ப் பொதுமக்கள், எமது பணியகத்துக்கு வெளியே எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தி, எம்மை வெளியேற வேண்டாம் என்று கோரினர். 

20 ஆண்டு மோதல்களுக்குப் பின்னர், அனைத்துலக முகவர் அமைப்புகள், அதிகாரிகளின் பிரசன்னம் அந்தப் பிரதேசத்தில் இல்லாமல், இலங்கை  
இராணுவம் கடும் பலத்துடன் முன்னேறும் என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருந்தார்கள். 

ஆனால், அது எந்தளவுக்கு கடுமையானதாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 

தமது பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்காக அனைத்துலக செஞ்சிலுவைக் குழு வன்னிக்குள் வடக்கே மேலும் நகர்ந்தது. நாம் (ஐ.நா) வெளியேறத் தயாரானோம். 

வன்னியில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் நான் பணியாற்றியிருந்தேன். 

எமது பணியாளர்கள், மற்றும் சமூகத்தில் நான் பல நண்பர்களைப் பெற்றிருந்தேன். 

ஐ.நா பணியாளர்களில் தங்கியிருப்போர் உள்ளிட்ட வன்னிப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு, விடுதலைப் புலிகள் மிகவும் இறுக்கமான அனுமதி வழங்கும் நடைமுறையை வைத்திருந்தனர். 

நாம் அவர்களை விட்டுவிட்டு வெளியேறப் போவதால், மிகுந்த துன்பத்துடன், உணர்ச்சிமயமான சூழலில், அவர்களிடம் விடைபெறத் தொடங்கினேன். 

நான் அடிக்கடி சென்ற ஒரு குடும்பம் அது. அவர்களை எனக்கு மூன்று ஆண்டுகளாகத் தெரியும். 

அவர்களின் திருமணத்தில் பங்கேற்று, அவர்களின் மகள் பிறந்தபோது, அவர்களின் வீட்டுத் தோட்டத்தில் உள்ள மாமரத்தின் கீழ் இருந்து சுவையான உணவை சாப்பிட்டு, எனது நெருக்கமான நண்பர்களாக இருந்தனர். 

அவர்கள் என்னை தம்பி என்றே அழைத்தனர். குடும்ப உறுப்பினராகவே பழகினர். 

வெளியேறுவதற்கு முதல் நாள் இரவு 9 மணியளவில் நான் அவர்களின் வீட்டுக்குச் சென்றேன். 

தவளைகளின் இரவுநேர இரைச்சல்களை மிஞ்சியபடி, அருகிலேயே எறிகணைகள் விழும் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன. 

அந்தக் குடும்பம் முற்றாக நம்பிக்கையிழந்து போயிருந்ததைக் கண்டேன். 

முந்தைய நாள் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலை அடுத்து, கணவன் பதற்றத்துடன் அவசியமான பொருட்களை தனது உழவு இயந்திரத்தில் ஏற்றிக் கொண்டிருந்தார். 

அவர்களின் இரண்டு வயதுக் குழந்தையுடன் மனைவி பதுங்குகுழியில் மனமின்றிப் பதுங்கியிருந்தார். 

எமது வெளியேற்றத்துடன் எல்லோரும் அந்த இடத்தை விட்டு வெளியேறினார்கள். 

எனது நண்பர் என்னைப் பார்த்துக் கேட்டார், “உண்மையிலேயே நீங்கள் வெளியேறுகிறீர்களா? எமக்கு என்ன நடக்கப் போகிறது?” 

அந்தச் சூழலில் குழப்பத்தில் இருந்த நான் அவளுக்கு சில பதில்களை கூறினேன். 

ஐ.நாவின் அதிகாரபூர்வமான வரியில் சொல்வதானால், நாம் “இடமாற்றம் செய்யப்பட்டோம்”. 

“விரைவில் திரும்புவோம்” என்று கூறுவது அபத்தமானது. 

நாம் வெளியேறிய பின்னர், இலங்கை  அரசாங்கம் எம்மை மீளத்திரும்ப அனுமதிக்காது.

உழவு இயந்திரத்தில் பொருட்களை ஏற்ற அவர்களுக்கு நான் உதவினேன். 

அங்கே சொல்வதற்கு எதுவுமேயில்லாததால், அமைதியாக இருந்தோம். 

எனக்கு ஒரு கோப்பை தேநீர் வழங்கப்பட்டது. அமைதியாக அதைக் குடித்தேன். 

“நல்ல அதிஸ்டம்”, “பாதுகாப்பாக இருங்கள்”, “விரைவில் உங்களைப் பார்ப்பேன்” என்பதை விட அவர்களுக்குச் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இருக்கவில்லை. 

அது எனக்கு மோசமானதாக தெரிந்தது. 

அழகான கொழுப்பு நிறைந்த கன்னங்களை கொண்ட சிறிய பெண் குழந்தையை இறுக கட்டியணைத்து, விட்டு வெளியேறினேன். 

சில நிமிடங்கள் கழித்து நான் எனது காரை நிறுத்தி விட்டு வீதியின் பக்கம் வெறித்துப் பார்த்தேன். 

மறுநாள் காலை நாம் எமது வாகனங்களை அணியாக நிறுத்தியிருந்தோம். 

நாம் வெளியேறுவதை பல பொதுமக்கள் எமது வளாகத்துக்கு வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். 

எமது வெளியேற்றம் காலை 11 மணியளவில் இடம்பெறுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. 

காலை 10.45 மணியளவில், இலங்கை  விமானப்படை எம்மில் இருந்து 2 கி.மீ தொலைவில் வீதியில் குண்டுகளை வீசியது. 

இப்போது விலகலாம் என்ற என்ற செய்தியை அது கூறியது. 

தலைக்கவசம், உடற்கவசம், உள்ளிட்ட எல்லா பாதுகாப்பு விதிமுறைகளும் வாகனத்தில் இருந்தன. 

சேலை அணிந்த, சாரம் அணிந்த குடும்பங்களைத் தாண்டி வாகனத்தைச் செலுத்தினேன். 

அவர்களை கைவிட்டுச் செல்வதான குற்றஉணர்வினால் நான் பாதிக்கப்பட்டேன். 

பொதுமக்களைப் பாதுகாக்கின்ற கொள்கை இல்லாத ஐ.நாவில் இருந்து என்ன செய்யப் போகிறேன்? என்று எனது உள்ளுணர்வு கேள்வி எழுப்பியது. 

மறுநாள் ஐ.நாவில் இருந்து நான் பதவி விலகிக் கொண்டேன். 

தொடர் நிகழ்வுகளால் வெறுப்படைந்து இலங்கையினை விட்டு வெளியேறும் சூழலை ஏற்படுத்தியது.

அடுத்த இரண்டு ஆண்டுகள், வரையறுக்கப்பட்ட ஊடக செய்திகள் மூலம் இலங்கையினை மிகவும் உன்னிப்பாக கவனித்தேன். 

நண்பர்கள் இறந்துபோன செய்திகள் கிடைத்தன. 

2011 மே மாதம், கிளிநொச்சியில் இருந்த நண்பரின் கணவரின் முகநூலில் இருந்து நட்புக்கான அழைப்பு கிடைத்தது. 

அவர்கள் எல்லோரும் உயிர்தப்பி, இந்தியா சென்றார்கள். 

அதேவேளை, அவர்களைப் பார்க்கச் சென்றபோது, கணவர் ஏற்கனவே ஐரோப்பா புறப்பட்டு விட்டார். 

புலம்பெயர் தமிழர்கள் மூலம் சேகரித்த 20 ஆயிரம் டொலரை முகவருக்கு கொடுத்து, மனைவி மற்றும் மகளை விட்டு விட்டு புகலிடம் தேடிச்சென்றார். 

சென்னையில் சேரிப்பகுதியில் உள்ள ஒரு சிறிய கொங்றீட் அறையில் நான், எனது பழைய, அன்பு நண்பருடன் அமர்ந்திருந்தேன். 

வெளியில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வந்து கொண்டிருந்தது. 

இப்போது 5 வயதாகும் அந்தக் குழந்தை என் மடியில் அமர்ந்து மாமா என்று அழைத்தது. 

இந்தக் கதையை சொல்ல வேண்டும் என்று நான் புரிந்து கொண்டேன். 

சிறிய கடற்கரைப் பகுதிக்குள் கடுமையான குண்டுவீச்சுகளில் இருந்து இந்தக் குடும்பம் உயிர் பிழைத்தது. 

இறுதிவாரங்களில் அவர்கள் எதுவும் செய்ய முடியாத போது தற்கொலை செய்து கொள்வது பற்றி சந்தித்தார்கள். 

ஐ.நாவினால் அமைக்கப்பட்ட, இலங்கை அரசினால் நடத்தப்படும் “பாதுகாப்பு நரகமான” முகாம்களில் அவர்கள் ஏழு மாதங்கள் வாழ்ந்தார்கள். 

அதன்பின்னர், இந்தியாவுக்குத் தப்பிச் சென்றனர். 

அவர் இப்போது சென்னையில் தனியாக, பாதிக்கப்படக் கூடிய சூழலில் வாழ்கிறார். 

அவள் தனது கணவரிடம் இருந்து பிரிக்கப்பட்ட நிலையில் உள்ளார். 

போரின் நீண்டகால விளைவாக இதைக் காண்கிறேன். 

இந்தக் குடும்பமும், இதுபோன்ற ஏனையவர்களும் தமது வீடுகளைப் பார்க்கப் போவதில்லை. 

அவர்கள் வெளிநாடுகளில் நிரந்தரமாக குடியேறப் போகிறார்கள். 

இதுபோன்ற கதைகளை உயிர்தப்பி அகதிகளாக ஐரோப்பாவிலும், இந்தியாவிலும் அடைக்கலம் தேடியுள்ளோரிடம் சேகரித்துள்ளேன். கணவர் அன்ரனி இப்போது லண்டனில் இருந்த கொண்டு, இலங்கையில் 
தனது கடந்தகால வாழ்க்கையை, புகலிட சட்டவாளரிடமும், சென்னையில் உள்ள தனது மனையுடன் ஸ்கைப் வழியாகவும் பகிர்ந்து கொள்கிறார். 

திரைப்பட இயக்குனர் லன்ட்சே பொலொக்கும் நானும், 2011இல் இந்தக் கதை ஓவியங்களை வரையத் தொடங்கி இப்போது நூல் வடிவைப் பெற்று வருகிறது. 

நவீன போர்முறையின் கொடூரத்தன்மையை மக்கள் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை என்று நான் நம்புகிறேன். 

ஆனால், மோதலின் விளைவுகள் ஒரு குடும்பத்தில் பல தலைமுறைகளுக்கும் தொடரும்.
[vuukle-powerbar-top]

Recent Post