Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com




நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதால் காவிரியில் தண்ணீர் வந்துவிடுமா? மைய அரசு உடனடியாகத் தலையிட்டு கர்நாடகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! தொல்.திருமாவளவன் அறிக்கை

காவிரி கண்காணிப்புக் குழு திசம்பர் மாத இறுதிக்குள் தமிழ்நாட்டுக்கு 12 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. தினமும் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் தரவேண்டும் என்ற அதன் இடைக்கால ஆணையைவிட இது அளவில் குறைவு என்றபோதிலும் இந்த அளவுக்காவது தண்ணீர் கிடைக்குமே என்று டெல்டா மாவட்டத்து விவசாயிகள் சற்றே ஆறுதல் அடைந்தனர். ஆனால், 6 டிஎம்சி தண்ணீருக்கு மேல் கொடுக்க முடியாது என கர்நாடக அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது. அதையேதான் திங்களன்று உச்ச நீதிமன்றத்திலும் அவர்கள் கூறப்போகிறார்கள். இப்படி காவிரி நதி நீர் ஆணையம், நடுவர் மன்றம், கண்காணிப்புக் குழு, உச்ச நீதிமன்றம் என இந்தப் பிரச்சனை இழுத்தடிக்கப்படுகிறதே தவிர தமிழகத்துக்கு சேர வேண்டிய தண்ணீர் வந்தபாடில்லை.

இதனிடையில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுகிறோம் என மைய அரசு கூறியுள்ளது. ஒருவிதத்தில் இது தமிழ்நாட்டுக்கு நல்லதுதான் என்றாலும், அரசிதழில் வெளியிடுவதால் மட்டுமே காவிரியில் தண்ணீர் வந்துவிடப் போவதில்லை. எத்தனை அமைப்புகள் எத்தனை ஆணைகளைப் பிறப்பித்தாலும் தண்ணீர் தருவதில்லை என்பதில் கர்நாடகா பிடிவாதமாக உள்ளது. மைய அரசு தனது பொறுப்பை நிறைவேற்றாமல் உச்சநீதிமன்றத்தின் தலையில் சுமத்துவது மத்திய அரசுக்கு அழகல்ல.

இத்தகைய சூழல் உருவானால் மத்திய அரசு மாநில அரசை முடக்கி வைப்பதற்கான அதிகாரம் அரசியல் அமைப்புச் சட்ட உறுப்பு 365 மூலம் வழங்கப்பட்டிருக்கிறது. உறுப்பு 356ன்கீழ் ஆட்சியைக் கலைப்பதற்குத்தான் கட்டுப்பாடுகளை உச்சநீதிமன்றம் விதித்துள்ளது. ஆனால் உறுப்பு 365ன்கீழ் நடவடிக்கை எடுக்க எந்தவொரு தடையுமில்லை. எனவே மைய அரசு அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி கர்நாடக அரசை எச்சரிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

மேலும், காவிரி கண்காணிப்புக் குழுவின் தீர்ப்பையும் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பையும் அரசிதழில் வெளியிடுவதாகச் சொல்லியிருக்கும் மைய அரசின் அறிவிப்பையும் தமிழ்நாட்டுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றிகளாக எண்ணி போராட்ட நடவடிக்கைகளில் நாம் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கொடுக்கக் கூடாது என கர்நாடகம் முழுவதும் கொந்தளிக்கிறது.

ஆனால் தற்கொலை செய்துகொள்ளத் தொடங்கியிருக்கும் தமிழக விவசாயிகளைக் காப்பாற்றுவதற்கோ, தமிழகத்தின் நதிநீர் உரிமைகளைக் காப்பதற்கோ கிளர்ந்து போராட முன்வராமல் தமிழகம் அமைதி காப்பது வேதனை அளிக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் நதிநீர் உரிமையைப் பாதுகாக்கவும், கருகிக் கொண்டிருக்கும் சம்பா சாகுபடியைப் பாதுகாக்கவும் மைய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.

இவண் தொல்.திருமாவளவன்


[vuukle-powerbar-top]

Recent Post