Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அந்நிய நேரடி முதலீடு மக்களவையில் பாஜக கடும் எதிர்ப்பு

சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்தால் உள்நாட்டு விவசாயிகளும் சிறு வணிகர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என நாடாளுமன்ற விவாதத்தின்போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

அவரது பேச்சுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், தொடர்ந்து பேசிய சுஷ்மா ஸ்வராஜ், சில்லறை வணிகத்தில் 51 சதவிகிதம் அந்நிய முதலீட்டை அனுமதித்தால், இந்தியப் பொருட்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படும் நிலை ஏற்படும் என்று கூறினார்.

விவசாயிகளிடம் இருந்து விளை பொருட்களை உற்பத்தி விலையை விட குறைந்த விலைக்கே வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் என்றும், இதனால் உள்நாட்டுப் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்றும் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

மெக் டொனால்ட்ஸ் போன்ற நிறுவனங்கள் உருளைக் கிழங்குகளை நிச்சயமாக இந்திய விவசாயிகளிடம் இருந்து வாங்காது என்றும், அவை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யும் என்று கூறிய சுஷ்மா, அந்நிய முதலீட்டை அனுமதித்தால் வேலைவாய்ப்பு அதிகமாகும் என்பது தவறான கருத்து என்றும் குறிப்பிட்டார்.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசித்த பின்னரே அனுமதி வழங்கப்படும் என்று கடந்த 2011-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அப்போதைய நிதியமைச்சர் பிரணப் முகர்ஜி அளித்த உறுதிமொழியை மத்திய அரசு மீறிவிட்டதாகவும் சுஷ்மா ஸ்வராஜ் குற்றம்சாட்டினார்.

இத்தகைய காரணங்களால் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்திய அவர், இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான வணிகர்களும் விவசாயிகளும் மட்டுமில்லாமல் நுகர்வோர்களும் பாதிக்கப்படுவார்கள் என குறிப்பிட்டார்.
[vuukle-powerbar-top]

Recent Post