Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்தி எதிர்ப்புப் போரில் உயிர் நீத்த "முதல் தமிழ்ப் போராளி" நடராசன் நினைவு நாள்

‎15.1.1939

1938 ஆம் ஆண்டு சென்னை மாகாண முதல்வர் இராசாசி கட்டாய இந்தியை பள்ளிகளில் கொண்டு வந்தார். தமிழறிஞர்களும் தந்தைபெரியாரும் கைகோர்த்து இந்தித் திணிப்பை எதிர்த்தனர். தமிழர்கள் சாதி கடந்து தமிழ்மொழி காக்கும் போரில் தன்னை இணைத்துக் கொண்டனர். அப்போது இந்தி தியாலஜிகல் பள்ளி முன் மறியல் செய்து கைது செய்யப்பட்டவர் தான் தொல்குடி தமிழர் நடராசன். அவர் ஆறுமாத காலம் சிறைத் தண்டனை பெற்று சென்னை சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு நோய்வாய்ப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நோய் முற்றிய நிலையில் 15.1.1939 இல் உயிர் துறந்தார். அவரின் மரணம் இந்தி எதிர்ப்பை தீவிரப்படுத்தியது. நடராசன் சாகும் தருவாயிலும் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து வெளியே வர மறுத்தார். "கோழையாக வாழ்வதை விட, வீரனாக சாவதே என் விருப்பம்" என்று அறிவித்தார். இந்த உண்மைகளை மூடி மறைத்து "படிப்பறிவற்றதால் தான் நடராசன் மறியலில் ஈடுபட்டார்" என்று குல்லுகப் பட்டர் இராசாசி கூறினார்.

இதற்கு நடராசன் தந்தை கடும் கண்டனம் தெரிவித்தார். நடராசன் இறுதி ஊர்வலத்தில் கறுப்புக் கொடியோடு பத்தாயிரம் பேர் கலந்து கொண்டனர். சென்னை மூலக் கொத்தளம் சுடுகாட்டில் அறிஞர்அண்ணா, அண்ணல் தங்கோ, தர்மாம்பாள் ஆற்றிய எழுச்சி உரைகள் நடராசன் ஈகத்தை பறைசாற்றின. நடராசன் மறைவிற்குப் பின்னர் இந்தி எதிர்ப்புப் போரில் தாளமுத்து உயிர் நீத்தார். அவர் உடலும் நடராசன் புதையூண்ட இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன. நடராசன் -தாளமுத்து பெயர்கள் தமிழர் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவை தான் என்றாலும் இருவர் தம் குறிக்கோள்கள் நிறைவு பெற வில்லை. அவர்கள் மறைந்து 74 ஆண்டுகள் ஆகி விட்டன. இந்தி திணிப்பை எதிர்த்த தமிழர்கள் ஆங்கிலத் திணிப்பிற்கு எதிராகவும் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நடராசன் பற்ற வைத்த நெருப்பு அணைய வில்லை. ஆம்! இன்னும் மொழிப் போர் இன்னும் முடிய வில்லை!


[vuukle-powerbar-top]

Recent Post