Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com


எரிவாயுக் கலன்கள் : நடுவண் அரசின் மொழித் தீண்டாமை  கொள்கையும் மற்றும் துரோகமும்!

மக்களை பாதுகாப்பு  தொடர்பு உடைய விடயத்திலும் இந்திய அரசு தனது மொழித் தீண்டாமை கொள்கையை  கடைபிடிக்கிறது.

சமையல் எரிவாயு கலன்கள் அனைத்திலும் இரு மொழிக் கொள்கை தான் . பட்டிதொட்டி எங்கும் அனுப்பப்படும் இந்த எரிவாயுக் கலன்களில் தமிழில் பாதுகாப்பு சம்பந்தமான செய்திகள் இல்லை . இதனால் தமிழர்கள் மற்றும் இந்தியை தெரியாதவர்கள்  ஆங்கிலம் கட்டாயமாக படித்திருக்க வேண்டும் அல்லது இந்தியை படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என சொல்கிறது நடுவண் அரசு .

என்ன ஒரு மோசமான வஞ்சனை இந்த இந்திய அரசுக்கு ! ஆனாலும் இது குறித்து தமிழ்நாட்டில்  யாரும் கவலை படுவதாக தெரியவில்லை .

இந்திய தேசபக்தர்கள், மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள்  இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி ஆயிற்றே அதனால் எரிவாயுக் கலன்களில்   இந்தியில் இருந்தால் தப்பில்லை, தமிழ் தேவை இல்லை  என்று சண்டை பிடிக்க வந்து விடுவார்கள். உண்மையில் இந்தி இந்தியாவின் தேசிய மொழியும் அல்ல .

இதில் இன்னொரு விசயத்தையும் நாம் கவனிக்க வேண்டும் . இந்த சமையல்  எரிவாயுவின் விலையை ஏற்றியும் , மானிய விலையை அவ்வப்போது  நீக்கியும் ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது இந்திய அரசு. இப்படிப் பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை  நிர்ணயம் செய்வது எண்ணை  நிறுவனங்கள் மற்றும் நடுவண் அரசு . நடுவண் அரசு நினைத்தால் ஒரே நாளில் நமக்கு பெட்ரோல் டீசல் போன்றவற்றை  நிறுத்த முடியும் நிறுத்தியும் வேடிக்கை பார்த்துள்ளது . அப்போது தமிழக மக்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல .

பெட்ரோல் டீசல் எரிவாயுக் கலன்கள்   போன்றவைகள் மாநில அரசின் கைகளில் தான் இருக்க வேண்டும்  . மின்சாரம் பாதி மாநிலங்களின் கைகளிலும் மீதி மத்திய அரசின் கைகளிலும் உள்ளதால் தமிழகம் படும் பாடும் நாம் அறிவோம்   .

நமது தேவையை நாமே பூர்த்தி செய்தல் வேண்டும் . நடுவண் அரசின் தயவை நாம்  நாடவேண்டியது இல்லை . மாநில சுயாட்சி நமக்கு கிடைக்கப்பெற்றால் இது போன்றவைகள்  மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டு வரும் . நமக்கு எவ்வளவு தேவை,  தேவை இல்லை என்பதை நாமே  நிர்ணயித்துக் கொள்ளலாம் . மேலும் நடுவண் அரசின் மொழித் தீண்டாமை கொள்கையும் இதன் மூலம் ஒரு முடிவுக்கு வரும் . கிராமங்களில் உள்ள மக்கள் அவர்கள் மொழியில் செய்தியை படிக்க  வேண்டும் என்ற எந்த அக்கறையும் இல்லாமல் நடுவண் அரசின் நிறுவனங்கள் இவ்வாறு செயல்படுவது  கண்டிக்கத்தக்கது .

நடுவண் அரசு இந்த மொழித் தீண்டாமையை உடனே கைவிட்டு  , அனைத்து  எரிவாயுக் கலன்களிலும்  தமிழ் மொழியை பயன்படுத்த வேண்டும் . மாநில அரசும் , இந்த   அத்தியாவசியத் எரிவாயுத் துறையை  தமிழக அரசின் கட்டுப் பாட்டிற்குள்  கொண்டு வரவேண்டும், அல்லது மாநில அரசுக்கு என்று ஒரு எரிவாயுத் துறையை நிறுவ வேண்டும்  என்பதே நமது கோரிக்கை .   
[vuukle-powerbar-top]

Recent Post