Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com


பள்ளர், பறையர் அடிமைகள் ஆக்கப்பட்ட வரலாறு! -ம.செந்தமிழன்

 வேளாண் தொழிற்நுட்பத்தில் வல்லவரான பள்ளர்கள், நாயக்க பிராமணரிடமும் பிற பிராமணரிடமும் பிராமணரல்லாத நாயக்கர் உள்ளிட்ட ஆதிக்க சாதியினரிடமும் அடிமைகளாகவே மாறிய வேதனைமிக்க வரலாறு இந்தத் திராவிடர் ஆட்சியில் உருவானது. 

இது குறித்த சில சான்றுகளைக் காணலாம். முக்கூடற் பள்ளு, இலக்கியம் பள்ளர்கள், நாயக்கரிடம் அடிமைகளாக வேளாண் பணி புரிந்த நிலையைப் பதிவு செய்துள்ளது. இவ்விலக்கியமே, நாயக்கர்காலத்தில் இயற்றப்பட்டது என்பதால், நாயக்கரை நேரடியாக விமர்சிக்கும் பாங்கில் இல்லை. மாறாக, நாயக்கப் பண்ணையாரை உயர்த்தி, பள்ளரே பாடுவதாக உள்ளது. இறுதிப் பகுதியில் பள்ளி பண்ணையாரைத் திட்டுவதாக மட்டும் உள்ளது. ஆயினும், அக்கால பள்ளர் நிலை எந்தளவு தாழ்த்தப்பட்டது என்பதை இவ்விலக்கியத்திலிருந்து நாம் உணரலாம். ஆண்டை – அடிமை என்ற முறைக்கான ஆவணம் இதுவாகும். பள்ளர்கள் பண்ணையாரை ‘ஆண்டையே’ என அழைக்கும் முறை இவ்விலக்கியத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூன்று நதிகள் கூடும் தெற்குச் சீமை அழகை விவரிக்கும்போது, ’சாதி நால்வளம் நீதி பெருக்கும்’ என்கிறார் புலவர். ’நால்வருணமே நீதி’ என்கிறது இவ்வரி. வாழ்த்திப் பாட குயிலை அழைக்கும் கற்பனையில்,

 ’பார்பூத்த கீர்த்தி பெறும் வைணவரும் தானிகரும்’ ’அருள் பெருந் தருமநிதி சாத்தூரிற் பெரியநம்பி அய்யங்கார் வாழவே கூவாய் குயிலே’- என்று பள்ளர் பெண்களான பள்ளியர் பாடினராம். 

இந்தப் பண்ணையார் ‘நாயினாரே’ என்று சில இடங்களில் பள்ளரால் அழைக்கப்படுகிறார். பள்ளர்களின் உழைப்பால் விளைந்த நெல் பின்வருமாறு பங்குபிரிக்கப்படுகிறது; அன்னதானம் நடக்கும் தினச் சத்திரத்திற்கும் பெரிய நம்பி ஐயங்காருக்கும் ஏழு திருப்பதி கோயில்களுக்கும் வேதம் ஓதுவோருக்கும் -கொடுக்கப்படுகிறது. இவைபோக வேறு சில பங்குகளும் உண்டு. ஆனால், உழைத்த பள்ளருக்கு இல்லை. இதனால், பள்ளி கோபம்கொண்டு நாயினாரான பண்ணையாரை இழிவாகத் திட்டுகிறாள். 

’ஆந்தை மூஞ்சி ஆண்டையே மட்டிவாய் ஆண்டையே சட்டித் தலை ஆண்டையே நீர் இறைக்கும் சால்போன்ற வயிறு கொண்ட ஆண்டையே’- என்றெல்லாம் பள்ளி பாடுகிறாள். 

பண்ணையாரோ, விளைச்சலைக் கண்ட மகிழ்ச்சியில் இந்த இழிசொற்களைக்கூடக் காதில் வாங்காமல் போய்விடுகிறார். முக்கூடற் பள்ளு, காலத்திலும் வானியற் அறிவரான கணியர் சாதியினர் வாழ்ந்துவந்தனர் என்பதும், அவர்கள் ‘கணியார்’ என்ற அதே பழந்தமிழ்ப் பெயராலேயே அழைக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்க செய்தியாகும். 

ஆனால், எண்ணற்ற தத்துவ ஆசான்களை அளித்த கணியார் குலம் கேலியான பொருளில் கையாளப்பட்டுள்ளது. காரணம், அக் காலத்தில் கணியார்கள் அப்படியான நிலையில் வைக்கப்பட்டார்கள் என்பதே. ’ஆருக்கும் பணியான் சீவலப்பேரி கணியான்’ என்கிறது அவ்வரி. ’ஊரில் எவருக்கும் அடங்காதவனான, கணியான் சும்மா வந்து தொந்திரவு செய்தான்’ என்ற பொருளில் உள்ளது. இதற்கு உரை எழுதியுள்ள உரையாசிரியர் புலியூர் கேசிகன், ’கணியான் என்றால், பறை அடிப்பவர்’ என்று குறிப்பிடுகிறார். 

இன்றைய பறையர் சாதி, கணியார் குலத்துடனும் தொடர்புடைய குலமாக இருந்தமையின் அடையாளமே இது. தமிழர் மரபில் அந்தணராகப் பறையர்கள் இருந்தனர். நான்கு மறைகளை ஓதும் பறையர்கள் வாழ்ந்ததாக, சிலப்பதிகாரத்தில் குறிப்பு உள்ளது. 

’சேரன் செங்குட்டுவன் முன் நால்வகை மறைகளைப் பாடும் பறையூர் கூத்தச் சாக்கையர்கள் வந்து ஆடினர்’ என்கிறது சிலப்பதிகாரம். (நடுகற்காதை:76-77) இப்பாடலில், சாக்கையர்கள் ’நால்வகை மறையோர்’ என்றே அழைக்கப்படுகின்றனர். 

இவர்கள் ஊர் பறையூர் என்பதனால், இவர்கள் பறையர் ஆகின்றனர். நால்வகை வேதங்களையும் பாடி ஆடும் தொழிலில் பறையர் இருந்தனர் என்பதும், அவர்களுக்கு மறையோர் எனப் பட்டம் சூட்டப்பட்டதும் கவனிக்கத்தக்கது. 

மேலும், பறையர், பள்ளர், கணியர், வள்ளுவர், அம்பட்டர், தச்சர் உள்ளிட்ட குலத்தவர் சங்ககாலத்தில் ‘அறிவுச் சமூகத்தவராக’வே வாழ்ந்தனர். இதற்கான சான்றுகள் ஏராளம். ஆனால், திராவிடர் ஆட்சியில் மேற்கண்ட குலங்கள் மிக இழிவாக நடத்தப்பட்டன. முக்கூடற் பள்ளுவில் உள்ள ‘கரையச் சாத்தா விரைய வெட்டும்’ என்ற குறிப்பு ஒன்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தகவலைத் தாங்கி நிற்கிறது. 

சாத்தன் எனும் கடவுளுக்கு கிடா வெட்டு நடந்ததை இக்குறிப்பு தெரிவிக்கிறது. கிடா வெட்டி வணங்குபவர்கள், பள்ளர்கள். சாத்தன், எனும் பெயர் பழந்தமிழ் ஆசீவக தத்துவ ஆசானைக் குறிப்பதாகும். அந்தச் சாத்தனாரே, ஐயனார் ஆவார். ஐயனார் வழிபாடு, இன்றும் தமிழகத்தில் பரவலாக உள்ளது. ஆசீவகம் எனும் தத்துவம் இந்திய நிலப்பரப்பு எங்கும் பரவி இருந்த தமிழர் தத்துவம் ஆகும். இது குறித்த விரிவான ஆய்வு முடிவுகளை பேரா.முனைவர்.க.நெடுஞ்செழியன், அறிஞர் குணா ஆகியோர் வெளியிட்டுள்ளனர். 

சாத்தனாரை, அவர் பெயராலேயே வணங்கும் வழக்கம் பள்ளருக்கு இருந்துள்ளமை, பள்ளரின் அறிவுத் தொடர்ச்சியின் அடையாளம் ஆகும். ஒரு மாபெரும் தத்துவ ஆசானை வழிபடும் வழக்கம் அறிவார்ந்த சமூகங்கள் / குலங்களில் மட்டுமே இருக்கும். அதுவும், அவரது பெயராலேயே வணங்குதல் என்பது போற்றத்தக்க சேதி ஆகும். நாயினார் பன்ணைக்கு அடிமைகளாக சேவகம் புரிந்த நிலையிலும், வார்த்தைக்கு வார்த்தை ‘ஆண்டையே...ஆண்டையே’ என அந்த நாயினாரை அழைத்தபோதும், சாத்தனையும் வழிபட்ட பள்ளர்கள் தமிழரின் அறிவு மரபுத் தொடர்ச்சியின் கண்ணிகள் என்பதில் ஐயமில்லை. 

ஆனால், திராவிட அரசர்களும் அவர்களது பிராமணத் தலைவர்களும் இந்த அறிவு மரபைச் சிதைப்பதில் பெருமளவு வெற்றி கண்டுவிட்டனர். இன்று பள்ளர், பறையர் ஆக உள்ளவர்களிடம் சாத்தன் யார் எனக் கேட்டால் தெரியாது. கணியார் என்போரைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா எனக் கேட்டால் அவர்களுக்கு எதுவும் புரியாது. ஆய்வு செய்தால் மட்டுமே கண்டுபிடிக்க இயலும். அந்தளவுக்கு வரலாறு மறைக்கப்பட்டுவிட்டது.

சோழர் கால சதுர்வேதி மங்கலத்தில் இருந்த கிராமங்களிலேயே, நிலக் காணி பெற்றிருந்த பறையர்கள், நாயக்கர் காலத்தில் செத்த மாடு உரிக்கும் தொழிலுக்குத் தள்ளப்பட்டார்கள். நான்கு மறைகளைக் கற்று, சேரன் செங்குட்டுவன் முன்னே கூத்து நடத்திய பறையர்களை, பிராமண வேரிலிருந்து வளர்ந்து, ஆரியத்தின் கூறுகளுடன் தழைத்த நாயக்க மன்னர்கள், தாழ்த்தப்பட்ட சாதியாராக்கினர். 

இதுபோல் எத்துணை அறிவுக் குலங்களைச் சீரழித்தனர் நாயக்க ஆட்சியாளரும் அவரது மறு பக்கத்தினராகிய பிராமணரும்! விஜயநகரப் பேரரசின் வரலாற்றை எழுதியுள்ள ஆசிரியர் பின்வருமாறு கூறுகிறார்; 

’ஒவ்வொரு சாதி மக்களும் தனித்தனிப் பகுதிகளில் குடியிருந்தனர். அவரவர்கள் குடியிருந்த இடம் அவர்களின் சாதியாலேயே அழைக்கப்பட்டது. குறிப்பாக, உயர்சாதி மக்களாகக் கருதப்பட்ட பிராமணர்கள் வாழ்ந்த இடம் அக்ரகாரம் எனப்பட்டது. 

கைவினைஞர்கள் குடியிருந்த பகுதி கைக்கோளர் தெரு, கம்மாளர் தெரு என்றும், கீழ்சாதி மக்களான பறையரும் புலையரும் ஊரின் புற எல்லையில் குடியிருந்த பகுதி சேரி என்றும் வழங்கப்பட்டது. 

சமுதாயத்தில் சாதி வேற்றுமைகள் வலுப்பெற்று ஒவ்வொரு சாதிக்குள்ளும் பல்வேறு பிரிவுகள் இருந்தன’ (தமிழகத்தில் விஜயநகர ஆட்சி /முனைவர் அ.சிங்காரவேல்/ சரசுவதி மகால் நூலக வெளியீடு 2007/ பக் - 98) சோழர்காலத் தஞ்சைப் பெருந்தெருவில் குயவரும் வண்ணாரும் கூடி வசித்தமையைக் கண்டோம். 

பிராமணருக்குத் தனியாகப் பார்ப்பனச் சேரி இருந்த சேதியைக் கண்டோம். புறஞ்சேரியில் பார்ப்பனரும் பாணரும் ஒன்றாக வசித்த வரலாற்றைக் கண்டோம். அது தமிழர் வரலாறு. 

மேற்கண்ட சாதிக்கொரு தெரு என்பதும், பறையரையும் புலையரையும் ஊருக்கு வெளியே வைத்தமையும், திராவிடர் வரலாறு. இந்த வேறுபாட்டை உரைக்காமலேயே கடந்த 100 ஆண்டுகளாக, திராவிட அரசியல் வெற்றி நடைபோட்டு வருகிறது.


[vuukle-powerbar-top]

Recent Post