Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகா மறுத்து விட்டதையடுத்து, காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த சம்பா சாகுபடி பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. விவசாயிகள் பெரும்  நஷ்டமடைந்து தற்கொலை செய்து கொண்டனர். இதனால் வறட்சி பாதித்த காவிரி டெல்டா பகுதியில், அமைச்சர்கள் குழு இன்று தனது ஆய்வை துவக்கியுள்ளது. இந்த ஆய்வின் முடிவில் தங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

தற்போது  வறட்சி பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். மேலும், வறட்சி நிவாரணமாக ஏக்கர் ஒன்றிற்கு ரூ. 5 ஆயிரமும், கருகிய பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ. 8 ஆயிரத்து 682ம் சேர்த்து, ஏக்கர் ஒன்றிற்கு தலா ரூ. 13 ஆயிரத்து 682 வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

ஆனால் விவசாயிகள் தரப்பில்,  "தங்களுக்கு இந்த நிவாரணம் போதாது என்றும், ஏக்கர் ஒன்றிற்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், இறந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், பேரிடர் பாதித்த மாநிலமாக, தமிழகத்தை அறிவிக்க வேண்டும், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்" என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை, விவசாயிகள் முற்றுகையிட்டனர். இந்த போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

இந்நிலையில், வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட்டு சேதங்களை மதிப்பிட அமைக்கப்பட்ட 8 அமைச்சர்கள் கொண்ட குழு இன்று தனது ஆய்வை துவக்கியுள்ளது. மேலும், மத்திய அரசு வழங்கும் பேரிடர் நிவாரண நிதி வழங்குவதிலும் மத்திய அரசு ஓரவஞ்சனை செய்வதாகவும் தமிழக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
[vuukle-powerbar-top]

Recent Post