Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மலேசிய தேர்தலும் தமிழக மக்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமும் ! 

அண்மையில் நடந்து முடித்த மலேசியா தேர்தலில் வழக்கம் போல் ஆளும் கட்சியே ஆட்சியை பிடித்துள்ளது . நஜிப் ரசாக் தலைமையில் ஆளும் கூட்டணி தனது ஆட்சியை தக்க வைத்துள்ளது. இவரை எதிர்த்து போட்டியிட்ட அன்வர் இப்ராகிம் கட்சி தோல்வியை தழுவியது. எனினும் முன் எப்போதும் இல்லாத வகையில் இத்தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளது என்று அன்வர் குற்றம் சாட்டி உள்ளார். தேர்தலின் முறைகேடுகளை கண்டிக்கும் வகையில் சுமார் 40000 மக்கள் கருப்பு சட்டை அணிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து 56 ஆண்டுகளாக ஒரே கூட்டணி தனது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ராணுவமும் காவல்துறையையும் தங்கள் கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் இக்கட்சி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகிறது என்று மலேசிய மக்கள் கருதுகின்றனர். குறிப்பாக தேர்தல் காலத்தில் வாக்களர்களுக்கு பணம் கொடுப்பது, காவல்துறையே வாக்களிப்பது,  கள்ள வாக்குகள் போடுவது, ஒருவரே இரண்டு முறை வாக்களிப்பது  என பல்வேறு முறைகேடுகள் ஆளும் கட்சி செய்து வருகிறது. எல்லாவற்றையும் விட கவனிக்க வேண்டியது, வெளிநாட்டில் இருந்து மலேசியாவிற்கு வந்த குடியேறிகளை ஆளும் கட்சிக்கு வாக்களிக்க வைத்து வாக்கு வங்கியை அதிகரித்துள்ளது ஆளும் கட்சி. அப்போது வெளிநாட்டினர் கணிசமான அளவிற்கு மலேசியாவில் வந்து தங்கி உள்ளனர். அவர்களுக்கு வாக்குரிமையை கொடுத்து அவர்களுக்கு பணம் கொடுத்து நஜீபுக்கு வாக்களிக்கும் படி செய்துள்ளனர் ஆளும் கட்சியினர். இது மண்ணின் மைந்தர்களின் வாக்காக  கருத முடியாது என்று கூறுகின்றனர் எதிர் கட்சியினர். இந்தியாவில் நடக்கும் முறைகேடுகளை விட பன்மடங்கு முறைகேடுகள் மலேசியா தேர்தலில் நடைபெறுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

இதில் தமிழக மக்கள் கவனிக்க வேண்டிய விடயங்கள் உள்ளன. தமிழகத்திலும் தேர்தல் முறைகேடுகள் இவ்வாறு நடப்பது நாம் அறிந்ததே. பணம் கொடுத்து வாக்குகளை வாங்குவது இங்கு சகஜ பழக்கமே. ஆனால் தமிழகத்தில் பிழைப்பிற்கு அண்மையில் வந்த வருகின்ற வட மாநிலத்தவரின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போவதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இவர்கள் எதாவது ஒரு வகையில் அடையாள அட்டை வாங்கி விடுகின்றனர். இவர்களுக்கு வாக்குரிமையும் கிடைத்து விடுகிறது. இவர்களின் எண்ணிக்கை வரும் காலங்களில் கணிசமாக கூடும் நிலையில் இவர்களின் வாக்கு வங்கி நாளை தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். வட மாநிலத்தவர்கள் செறிந்து வாழும் பகுதியில்   வட மாநிலத்தை சேர்ந்த நபரே தேர்தலில் நின்று வெற்றியும் பெறுவர். சட்டமன்றத்திற்கு இவர்களும் செல்வர். நாளடைவில் தமிழக சட்டமன்றத்தில் வடமாநில மக்களின் ஆதிக்கம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இந்த நிலை தொடரும் என்றால் தமிழ்நாட்டில் தமிழர்கள் தங்கள் வேலை வாய்ப்பு,  மொழி, பண்பாட்டு உரிமையை இழக்கும் அபாயமும் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் மட்டுமே தீர்மானிக்க வேண்டிய தமிழக ஆட்சி அதிகாரத்தை வெளி மாநில மக்கள் தீர்மானிக்கும்  நிலை வந்தால் தமிழர்கள் தங்கள் அடிப்டை உரிமைகளை தக்க வைக்க போராடும் நிலை ஏற்படும். ஆளும் கட்சிகளும் வடமாநில மக்களை திருப்திப் படுத்த அவர்களுக்கு பலவேறு சலுகைகளை கொடுத்து வாக்கு வங்கியை தக்க வைக்கும்.  
 
இந்த நிலைமை தமிழகத்தில் வரக் கூடாது என்றால், தேர்தல் முறையில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அந்தந்த மாநில மக்கள் அவர்கள் சார்ந்த அந்தந்த மாநிலக் கட்சிகளுக்கு மட்டும் வாக்களிக்க தேர்தல் ஆணையும் ஆவன செய்தல் வேண்டும். வடமாநில மக்கள் தமிழகத்தில் வாக்களிக்காமல் அவர்கள் சார்ந்த மாநில கட்சிகளுக்கு தேர்தல் நேரத்தில் இங்கிருந்த படியே வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கலாம். வெளி மாநில தமிழர்களும் தமிழக அரசியல் கட்சிக்கு அங்கிருந்த படியே வாக்களிக்கலாம். தமிழ்நாட்டின் மக்களுக்கு மட்டும் தமிழக தேர்தலில் வாக்களிக்க உரிமை கொடுக்க வேண்டும்.  பிறமாநில மக்களுக்கு தமிழக தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பு கொடுக்கப் படக் கூடாது என அண்மையில் தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சி போராட்டம் நடத்தியது. மொழிவழி மாநிலம் பிரிக்கப் பட்ட பின் அந்தந்த மொழியின மக்கள் மட்டுமே அந்தந்த மாநில ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருக்க வேண்டுமே தவிர வேற்று மொழியினர் தீர்மானிக்கக் கூடாது. அப்படி வேற்று மொழியின மக்கள் மாநில தேர்தலில் நின்று ஆட்சியை கைபற்றினால், அவர்கள் மண்ணின் மைந்தர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுக்க முடியுமே அன்றி நல்லாட்சி கொடுக்க முடியாது. அது சமூக நீதிக்கு புறம்பாகவும் அமையும். 

இந்த நிலையை தமிழக கட்சிகள் தலைவர்கள் இப்போதே உணர்ந்து இந்த சிக்கலுக்கு தீர்வு காண முன்வர வேண்டும். பாராளுமன்றத்திலும் இது குறித்து விவாதம் செய்து நல்லதொரு தீர்வை எட்ட வேண்டும். 


[vuukle-powerbar-top]

Recent Post