Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இடிந்தகரை மக்களின் அதிரடி ! வாக்கு கேட்டு ஊருக்குள் எந்த அரசியல்வாதிகளும் வந்துவிடாதீர்கள் ! 

அணு உலையை ஆதரிக்கும் எந்த கட்சிகளும் வாக்கு கேட்டு இடிந்தகரை பகுதிக்குள் வந்து விடாதீர்கள் என்று அதிரடியாக ஒரு பதாகை வைத்துள்ளனர் இடிந்தகரை மக்கள் .நடுவண் அரசும் மாநில அரசும் இடிந்தகரை மக்களின் போராட்டத்தை துச்சமாக எண்ணி போராளிகள் மீது பல்வேறு கடுமையான வழக்குகளை போட்டு வருகிறது. பல்வேறு அடக்குமுறையை ஏவி வருகிறது . எதற்கும் அஞ்சாமல் , யாருக்கும் மண்டியிடாமல் கொண்ட கொள்கையில் இன்றுவரை உறுதியாக அணுஉலையை மூடியே தீரவேண்டும் என  போராடி வருகிறார்கள் இடிந்தகரை மக்கள். 

இந்தியாவில் உள்ள படித்தவர்கள் பலருக்கு அணு உலைகள் குறித்த எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லாத நிலையில் , இடிந்தகரையில் உள்ள மீனவர்கள் முதல் படிக்காத பாமரர் வரை இன்று அணுஉலை குறித்து அத்துணை அறிவையும் பெற்றுள்ளனர் என்றால் அதற்கு காரணம் உதயகுமார், புஸ்பராயன் போன்ற அறிவார்ந்த போராளிகள் தான். இவர்கள் இடிந்தகரை மக்களுக்கு மட்டும் அணுஉலையின் ஆபத்தை புரியவைக்கவில்லை, தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் இப்போது அணுஉலையின் ஆபத்தை உணரும் வண்ணம் செய்து விட்டனர். 

அணுஉலைகள் பாதுகாப்பானது என அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் திரும்ப திரும்ப பொய்களை கொட்டிக் கொண்டிருக்கும் நிலையில் இடிந்தகரை போராளிகள் அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும்  தொடுத்துள்ள கேள்விகளுக்கு இன்றுவரை அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அணு உலைக்கு எதிரான மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி வருகிறது  அரசு. அணு உலையின் பாதுகாப்பு , கதிர் வீச்சு குறித்து வைக்கப்பட்ட எந்த ஒரு கேள்விகளுக்கும் அரசு வெளிப்படையான பதில் அளிக்கவில்லை. மீனவர்கள் , பாமரர்கள் இத்தகைய கேள்விகளை கேட்கக் கூடாது என்று அரசு சொல்கிறது. ஆனால் இன்று  அணு விஞ்ஞானிகளே பதில் சொல்ல முடியாத அளவிற்கு இடிந்தகரை மக்கள் அணு உலை குறித்த அறிவாற்றலை வளர்த்துக் கொண்டுள்ளனர். இந்தியாவிற்கே அணு உலையின் ஆபத்தை குறித்து பாடம் எடுக்கும் அளவிற்கு இடிந்தகரை மாணவர்கள் தயாராகி விட்டார்கள் என்றால் அது மிகையல்ல. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அதிக அளவு அணு உலை குறித்து விழிப்புணர்வு பெற்ற மாநிலம் தமிழகம் தான் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இடிந்தகரை மக்கள் கடந்த இரண்டாண்டுகள் போராட்டம் மற்றும் பரப்புரை நடத்தி தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர். 

பல தியாகங்கள் செய்து போராட்டம் நடத்தி வரும் இடிந்தகரை மக்களுக்கு சமூக ஆர்வலர்கள் நடுவில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. எனினும்  ஆளும் அதிகார வர்க்கம் போராளிகளை  இன்றுவரை நசுக்கவே பார்க்கிறது. அரசின் அடக்குமுறையை இன்றும் எதிர்த்து போராடும் இடிந்தகரை மக்கள் இன்று தேர்தலை தங்கள் வலிமையான போராட்ட ஆயுதமாக பாவிக்கத் தொடக்கி விட்டனர். அதனால் தான் இன்று இப்படியொரு அறிவிப்பு பதாகையை அவர்கள் வைத்துள்ளனர். இவர்களின் வாக்கு வேண்டுமெனில் ஆளும் கட்சியோ எதிர் கட்சியோ  அணு உலைகளை ஆதரிக்கக் கூடாது . அப்படி ஆதரிக்கும் கட்சிகளுக்கு இடிந்தகரை மக்களின் வாக்குகள் இல்லை என்பது ஒரு நெத்தியடி அறிவிப்பாகும். 

மக்கள் போராட்டத்தை மதிக்காத எந்த ஒரு அரசும் ஆட்சியில் நீடிக்காது என்பதை காலம் ,சொல்லும். இடிந்தகரை மக்களை போல் தமிழக மக்கள் அனைவரும் தங்கள் வாக்குகளை நேர்மையான ஆயுதமாக பயன்படுத்த வேண்டும். காசுக்கு வாக்களிப்பதை விட்டு விட்டு தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக வாக்குகளை செலுத்த வேண்டும் என்பதே இடிந்தகரை மக்கள் சொல்லும் செய்தி. 

அணு உலை இல்லா தமிழகம் காண வெல்லட்டும் இடிந்தகரை மக்கள் போராட்டம் ! 
 

[vuukle-powerbar-top]

Recent Post