Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சி.பி.எஸ்.ஈ தனியார் பள்ளியில் படித்து வந்த தன் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ந்த தமிழர்.  

ஜெயதேவன் என்னும் தமிழ் உணர்வாளர் இந்த ஆண்டு முதல் தன்னுடைய இரு பிள்ளைகளையும் தனியார் பள்ளியில் இருந்து நீக்கி தமிழ் வழிக் கல்வி அரசு பள்ளியில் சேர்த்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.  ஏன் அவ்வாறு செய்தார் என்பது  குறித்து ஜெயதேவன் அவர்களை தொடர்பு கொண்டு நாம் கேட்ட போது  அவரே அதற்கான தகவலை தந்துள்ளார். இதை ஒவ்வொரு தமிழரும் அவசியம் படிக்க வேண்டும். 

ஜெயதேவன் கூறியதாவது, 


அன்புக்குரிய எனது தோழர்களே,  நான் ஒரு மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறேன். எனது மென்பொருள் நிறுவன கிளைகள் திருச்சி, மதுரை, கோவை, சென்னை, ஊட்டி, திருவாரூர் ஆகிய ஊர்களில் உள்ளது. நான் தமிழொளி என்ற மாதமிருமுறை செய்தி தாள் நிறுவனம் நடத்துவதோடு, அதன் ஆசிரியராகவும் உள்ளேன்.

தோழர்களே.. ஆங்கில வழி கல்விக்கு எதிராக, தமிழ் வழி கல்வியை ஆதரித்து, அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டி ஒரு ஆலோசனை கூட்டத்தை அணைத்து கட்சி தோழர்களும் ஏற்பாடு செய்து இருந்தனர். அக்கூட்டத்தில் பல தோழர்கள் அரசின் முடிவுக்கு எதிராக பேசினர். தமிழ் வழி கல்வியின் பயனை வலியுறுத்தினர். நானும் தமிழ் வழி கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி பேசினேன். இப்படி பேசிகொண்டிருந்த போது அரசு பள்ளிகள் பற்றிய விவாதம் வந்தது. அரசு பள்ளியில் நிலவும் பிரச்சனைகள் பற்றி பலர் பேசினர். அந்த விவாதம் மற்றும் ஆர்ப்பாட்டம் முழுவதும் அரசு பள்ளியில் ஆங்கில வழி கல்வியை அமல் படுத்துவது தொடர்பானதுதான். எனவே ஒரு தோழர் ஒரு கேள்வி கேட்டார். இங்கு பேசி கொண்டு இருக்கும் உங்களில் எத்தனை பேர் உங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் பயில வைத்துள்ளீர்கள். சமுதாயத்திற்காக போராட வரும் நாம், அதை நம் குடும்பங்களில் செயல்படுத்தாதது ஏன்? என்ற கேள்வியை கேட்டார். கேள்வி கேட்ட அவரை தோழர்கள் பலர் பல காரணங்களை சப்தமாக கூறி அவரை அமைதி படுத்தினர். அனாலும் அவர் கேட்ட கேள்வி நியாயமானது என்பதை உணர்ந்தேன்.

தோழர்கள் பலர் அரசு பள்ளியில் கழிப்பறை வசதி உட்பட பல குறைகளை சொல்லி அதனால் என் பிள்ளையை அங்கு சேர்க்க வில்லை என்று அந்த தோழரை அமைதி படுத்தினர். ஆனாலும் என் மனதில் அந்த தோழரின் கேள்வி என்னை தாக்கி கொண்டே இருந்தது. என் மனைவியீடம் இது பற்றி பேசினேன். என் மனைவி அரை மனதுடன் சரி என்றார். அதோடு உங்கள் கொள்கைகளை உங்களோடு வைத்து கொள்ள கூடாதா? பிள்ளைகள் படிப்பிலும் செயல் படுத்த வேண்டுமா? என்று யோசியுங்கள். நீங்கள் நம் இனத்திற்கான போரட்டங்களுக்கு போகும் போது உங்கள் கூட நாங்களும் வந்து கொண்டுதான் இருக்கிறோம்.ஆதரவு தருகிறோம், ஆனால் இந்த படிப்பு தொடர்பாக தயவு செய்து யோசியுங்கள் , நம் குழந்தைகள் கொஞ்சம் வசதியாக இருந்தவர்கள். அங்கு தரையில் உட்கார வேண்டும். கழிப்பறை வசதிகள் சரியாய் இருக்காது என்று வாதிட்டார். நான் மனதுக்குள் உறுதியாக அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று இருந்தேன், ஆனாலும் நான் அரசு பள்ளிகளை சென்று பார்க்கலாம். பிறகு முடிவு செய்வோம் என்று சமாதான படுத்தினேன்.

என் அலுவலக சந்தை படுத்தும் (மார்க்கெட்டிங்) தம்பி, மற்றும் தங்கைகளிடம் சொல்லி அரசு பள்ளிகள் எப்படிவுள்ளது என்று பார்த்து வர சொன்னேன். நமது அலுவலகம் அருகில் உள்ள குறுப்பிட்ட அரசு பள்ளி சூழல் நன்றாக உள்ளது ஆனால் என்று பல குறைகளையும் சொன்னார்கள். 

அந்த பள்ளிக்கு என் மனைவி மற்றும் என் மகள் யாழினி வயது 7, மகன் தமிழினியன், வயது 5 ஆகியோரோடு அந்த அரசு பள்ளிக்கு சென்றேன். எங்களை வரவேற்ற பள்ளி ஆசிரியையிடம் எங்கள் பிள்ளைகளை இந்த பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றோம். அவர் இது அரசு பள்ளி என்றார். தெரிந்துதான் வந்துள்ளோம் என்றோம். அவர் அரசு பள்ளிக்கு அரசு வழங்கும் வசதிகளை கூறியதோடு, அவர்கள் மாணவ,மாணவியரை சேர்க்க வீடு, வீடாக சென்று வருவதையும் பற்றி கூறீயதோடு, அரசு பள்ளிகள் நன்றாக உள்ளது. அரசு ஆசிரியர்களும் நன்றாக உழைக்கின்றனர். ஆனால் சமூகத்தில் தனியார் பள்ளிகளில் படிக்க வைத்தால்தான் கெளரவம் என்று பெற்றோர் நினைக் கின்றனர் என்றார். ஒரு சில மாணவர்களை காட்டி இந்த மாணவரின் அப்பா, அம்மா குடி நோயாளிகள் ஆனால் இவன் நன்றாக படிப்பான். படிக்காத பெற்றோர் பிள்ளைகளையும் நாங்கள் படிக்க வைக்கிரோம். நாங்கள் உண்மையாக தனியார் பள்ளி ஆசிரியர்களை விட கடுமையாய் உழைக்கிறோம் என்றார். அரசு பள்ளிகளுக்கு ஒரு சில வசதிகளை செய்து கொடுத்தால் உறுதியாக தனியார் பள்ளிகள் என்ற பண பிசாசுகள் ஒழிந்து போகும் என்றார். 


அதன் பிறகு என் மகனை 1ம் வகுப்பிலும், என் மகளை 2ம் வகுப்பிலும் அந்தப் பள்ளியிலே சேர்த்து விட்டேன்.  அந்த பள்ளியில் உள்ள கம்ப்யூட்டர் லேப் செயல்படாமல் பழுது அடைந்து உள்ளது. அதை எனது நிறுவனம் சரி செய்து கொடுத்ததோடு நிரந்தரமாக அதை நாங்கள் பராமரிக்கவும், ஆசிரியர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யவும் பொறுப்பு எடுத்து கொண்டோம். 


தினமும் 2 வேளை கழிவறைகளை சுத்தம் செய்ய ஒருவரை பணியமர்த்தி அவருக்கு மாதம் 3500 சம்பளம் மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டிய பொருட்கள் ஆகியவற்றை கொடுத்து கண்காணிக்கவும் கூறியுள்ளோம். குடி நீர் தொட்டி மற்றும் குடிநீர் சம்ப் ஆகியவற்றை சுத்தம் செய்து தொடர்ச்சியாக பராமரிக்க உள்ளோம். அரசு பள்ளியில் L.K.G., U.K.G.கள் உள்ளது. குழந்தைகளுக்கு தேவையான படம், மற்றும் எழுத்துக்கள் அடங்கிய சார்ட்-களுக்கும் ஏற்பாடு செய்துள்ளேன்.

தோழர்களே.. அரசு பல திட்டங்களை செயல்படுத்தி கொண்டு உள்ளது. அவற்றை நாம் அலட்சிய படுத்தி விடுகின்றோம். நாம் அலட்சிய படுத்துவதால் நம் வரி பணம் கொள்ளையர்களால் பறி போகிறது. ஒரு அரசு தன் குடி மக்களுக்கு கட்டாயம் இலவச கல்வி, மருத்துவம், குடிநீர் போன்றவற்றை கொடுத்து ஆக வேண்டும். இவற்றை நாம் சரியாக பயன் படுத்த வேண்டும். பாடுபட்டு சேர்த்த பணத்தை மூட நம்பிக்கைகாக கோவில்  உண்டியலிலும், வறட்டு கௌரவத்திற்காக கல்வி கொள்ளைகாரர்களிடமும் கொடுக்கும் நாம்.. நம் பிள்ளைகளை, அரசு பள்ளிகளில் சேர்த்து, தனியார் பள்ளி கொள்ளையரிடம் கொடுக்கும் பணத்தில் சிறிது அரசு பள்ளி வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கு கொடுத்தால் நம் பிள்ளைகளோடு நம் ஏழை தமிழ் சகோதர, சகோதரிகளின் பிள்ளைகளும் படித்து நம் தமிழ் சமூகம் வளர்ச்சி பெரும் அல்லவா. ..

அன்பு தோழர் சே குவேரா இறக்கும் நேரத்தில் அவர் அடைக்க பட்டு இருந்த பள்ளியை பார்த்து அங்கு இருந்த ஆசிரியையையிடம் இந்த பள்ளி கூடம் ஏன் இப்படி குப்பையாக இருக்கிறது. இதில் எப்படி குழந்தைகள் படிப்பார்கள்.. இதை சுத்தமாக பராமரிக்க கூடாதா? என்று கேட்ட நினைவுகளோடு.. என் சமூக கடமையை இப்போதுதான் ஒழுங்காக தொடங்கியுள்ள மன நிம்மதியில் தொடர்கிறேன் தோழர்களே!. 


இவ்வாறு ஜெயதேவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார். நாமும் வருங்காலத்தில் நமது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்து  தனியார் கட்டண கொள்ளை பள்ளிகளுக்கு முடிவு கட்டலாமே !! 


[vuukle-powerbar-top]

Recent Post