Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

எங்கும் இந்தி எதிலும் இந்தி. தொடரும் இந்தியாவின் மொழித் தீண்டாமை கொள்கை ! 

இந்திய நாட்டில் பல்வேறு மொழிகள் பேசும் பல தேசிய இனங்கள் இருந்தாலும் இந்தியா எப்போதும் இந்திக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பது நாம் அறிந்ததே. நான்கு மாநிலங்களில் வாழும் மக்களுக்கு மட்டுமே இந்தி தாய் மொழியாகும். மற்ற மாநிலங்களில் இந்தி அல்லாத பல தொன்மைமிக்க  மொழிகள் தாய் மொழிகளாக இருந்தாலும் இந்தி மொழியை இந்தியா திட்டமிட்டு அம்மாநிலங்களில் திணித்து வருகிறது. இந்திய அரசின் ஆட்சி மொழியாக இந்தியை தேர்வு செய்த இந்தியா, இந்தியை தவிர வேறு எந்த மொழிக்கும் இடம் கொடுப்பது இல்லை. வங்கிகள், இராணுவம், விமானப் படை, கப்பல் படை, அஞ்சல் துறை, வருமான வரித் துறை, விண்வெளித் துறை, நாணயங்கள்  என எதிலும் இந்தியை மட்டுமே நிலைநாட்டுகிறது . எல்லா மொழி பேசும் மக்களும் இந்தியாவிற்கு வரி செலுத்துகிறார்கள். இருந்தும் அவர்கள் மொழிகளுக்கு இந்தியாவின் செயல்பாடுகளில் இடமில்லை என்பது இந்திய அரசின் மொழித் தீண்டாமை மற்றும் மொழி வெறியை காட்டுகிறது. 

இந்தப் படத்தில் காண்பது இந்திய விண்வெளித்துறை அனுப்ப இருக்கும் செயற்கைக் கோள். இதில் பி எஸ் எல் வி என  இந்தி எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளது. ப்ரித்வி என்ற சமஸ்க்ரித்த பெயரைத் தான் இந்திய அரசு சூட்டி உள்ளது. ஏன் ஒரே ஒரு முறை தமிழ் சொற்களான  கதிர், கனல், ஞாயிறு, விண்மீன், மின்னல் போன்ற பெயர்களை சூட்டலாமே ? ஆனால் இந்திய அரசு தமிழ்ப் பெயர்களையோ வேறு எந்தப் பெயர்களையோ ஏற்கத் தயாராக இல்லை. இந்திய அரசை பொறுத்தவரை சமஸ்க்ரிதம் மற்றும் இந்தியை சார்ந்த எழுத்துக்களும் பெயர்களுமே எங்கும் எதிலும் இருத்தல் வேண்டும். 

உலகில் மாபெரும் கடற்படையை கட்டி எழுப்பிய தமிழ் இனத்தால் இன்று  ஒரு கப்பலில் கூட தமிழ் பெயர்களை சூட்ட முடியவில்லை. போர்க்கப்பல் , நீர்மூழ்கிப் கப்பல்கள், பயணிகள் கப்பல்கள் என்ற எதிலும் சமஸ்க்ரித்த பெயர்களும் இந்தி எழுத்துருக்களும் காணலாம். விண்வெளித் துறையில் கேட்கவே வேண்டாம், நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் உட்பட அக்னி ஏவுகணை வரை சமஸ்க்ரித்த பெயர்களே. இப்படியான மொழித் தீண்டாமையை தட்டிக்  கேட்டாலும் இந்திய அரசு செவி சாய்ப்பதில்லை. இந்திய கண்டத்தில்  முதன் முதலில் நாணயம் வெளியிட்டது தமிழ் மன்னர்கள் தான். ஆனால் இன்றோ இதுவரை தமிழுக்கு இந்தியாவின் நாணயத்தில்  இடமில்லை. ஏன் ஒரே ஒருமுறையேனும் தமிழ் எழுத்துக்களை நாணயத்தில் பொரித்தால் குறைந்து போய் விடுவார்களா இந்தியர்கள். ஒரு ஜனநாயக நாட்டில் அனைத்து சமூகத்தினரும் சம உரிமைகளுடன் வாழ்தல் வேண்டும். ஆனால் இந்தியா போன்ற போலி ஜனநாயக நாட்டில் அடிப்படை உரிமைகளான மொழி உரிமையே மறுக்கப்படுகிறது என்பது வேதனையான விடயம். ஐ.நா சபையின் விதி  மொழிகளுக்கான  உரிமைகள் மக்களுக்கு கொடுக்கப் படவேண்டும் என்று சொல்கிறது. ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் ஒரு மொழியை பேசுகிறார்கள் என்றால் அந்த மொழிக்கு முழுமையான அரசு அங்கீகாரம் கொடுத்தல் வேண்டும் என ஐ.நா வின் சட்ட விதி கூறுகிறது. இருந்தும் இந்தியாவில் பல தேசிய இன  மக்களுக்கு தங்கள் மொழி உரிமை மறுக்கப்படுகிறது. 

இந்த நிலை மாற வேண்டும் . இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டம் எட்டாம் அட்டவணையில் வரையறை செய்யப்பட்டுள்ள  முக்கியமான 22 மொழிகளும் இந்தியாவின் ஆட்சி மொழியாக வேண்டும். ஐ.நா கூறுவது போல் இந்த மொழிகளுக்கு அரசு உரிய அங்கீகாரம் கொடுத்து சம உரிமைகள் வழங்கப் படுதல் வேண்டும் . எங்கும் இந்தி எதிலும் இந்தி என்ற நிலை மாறி எல்லா  தேசிய இனங்களின் மொழிகளும் இந்தியாவின் அலுவல் மொழிகளாக ஆட்சி மொழியாக அங்கீகரிக்கப் படுதல் வேண்டும். நம் வரும் தலைமுறை இதை போராடி பெறும்வரை காத்திருக்க வேண்டாம். நாமே இந்த உரிமையை போராடி பெற்று நம் தலைமுறை சுயமரியாதையுடன் வாழ வழி செய்குவோம். வாழ்க தமிழ் 

- தமிழர் பண்பாட்டு நடுவம் 
[vuukle-powerbar-top]

Recent Post