Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com


பர்மாவிலிருந்து தாயகம் திரும்பிய இந்தியத் (தமிழகம்) தமிழர்களின் வரலாற்றுச் சுருக்கம். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தமிழகத்தின் வறட்சி பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் வாழ்ந்து வந்த தமிழர்கள், வளமான வாழ்வைத்தேடி பர்மா சென்று அங்கே அவர்களது கடின உழைப்பின் பயனாக தங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்தியதோடு பர்மிய பொருளாதாரத்தையும் முன்னேற்றமடையச் செய்து சாதி, மத வேறுபாடின்றி தமிழர்கள் என்ற உணர்வில் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். பர்மா சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியக் குடிமக்களை பர்மிய அரசாங்கம் இரண்டாம்தர குடி மக்களாக நடத்தத் தொடங்கியது. இந்த நிலை நீடித்துக் கொண்டே சென்ற சூழ்நிலையில் அன்றைய இந்திய பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களது முயற்சியின் காரணமாக இந்திய குடிமக்களாகிய தமிழர்கள் மீண்டும் தங்களது சொந்த நாட்டிற்கு வர இந்திய அரசாங்கம் வழிவகை செய்தது. அதன்படி 1964 முதல் பர்மா தமிழர்களின் வருகை தொடங்கியது. இரண்டு தலைமுறைகள் கடந்த நிலையில் மீண்டும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது என்பது பெரும் பிரச்சனையாக இருந்ததால், வாழ வழிதேடி சென்னை மற்றும் சுற்று வட்டார இடங்களில் குடியேற முயன்றனர். பெரும்பாலனோர் தற்காலிக நிலையில் கூலி வேலை செய்தும், பர்மாவில் இருந்து கொண்டுவந்த பொருட்களை இன்றைய பர்மா பஜார் இயங்கி வரும் நடைமேடையில் வைத்து விற்று அன்றாட அரை வயிற்றுப் பசியை தீர்த்துக்கொண்ட அந்த சூழ்நிலையில் தான் இவர்களுக்கு விடிவெள்ளியாகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் தோன்றினார் அருட்தந்தை மன்தொவாணி அடிகளார் அவர்கள். அருட்தந்தை மன்தொவாணி பர்மா தமிழர்களின் கலங்கரை விளக்கு!! நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பல் பயணிகளுக்கு கலங்கரை விளக்கு நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்வது போல, பர்மா தமிழர்களுக்கு கலங்கரை விளக்காகத் திகழ்ந்தவர் அருட்தந்தை மன்தொவாணி அடிகளார். இத்தாலிய நாட்டில் பிறந்து சலேசிய குருவானவராகிய இவர் வியாசர்பாடி புனித ஆறுதல் மாதா கோவில் வளாகத்தில் இயங்கி வந்த திருவருள் சமுக நல நிலைய இயக்குநர் என்கின்ற வகையில் ஏழை எளிய மக்களுக்கு அரும்பணியாற்றி வந்தார். இவரது பரிவுள்ளதை அறிந்த பர்மா தமிழர்களுள் ஒரு சிலர் 1965 இல் அவரது உதவியை நாடினர். பர்மா தமிழர் என்கின்ற இன உணர்வோடு வாழ்ந்து வந்த மக்கள் அனைவரும் ஒன்றாக ஓரிடத்தில் குடியேற வசதியாக அருட்தந்தையின் வழிக்காட்டுதலின்படி, வறண்ட எரியாகக்கிடந்த இப்பகுதியில் இரவோடு இரவாக 1500 குடுசை வீடுகள் அமைக்க பொருளுதவி அளித்து அவர்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கித்தந்தார். அருட்தந்தை மன்தொவாணி அவர்கள் இருக்க எடம் மட்டும் போதாது என்று உணர்ந்து அவர், சாதி மத வேறுபாடின்றி அனைவருக்கும் பால் மற்றும் உணவு அளித்து பசியையும் போக்க உதவினார். இவரது அரும்பணிகளை பாராட்டி 21-5-1966 தேதியிட்டு ‘மெயில்’ நாளேட்டில் திரு R.K.K. மேனோன் எழுதிய செய்திக் கட்டுரையில் பர்மா தமிழர்கள் மீது அருட்தந்தை மன்தொவாணி அவர்கள் கொண்ட பரிவிரக்கமும், அவர்களுக்கு அளித்த ஊக்கமும், உறுதுணையும் தான் புறம்போக்கு இடத்தில் அவர்களுக்கு குடிசை அமைக்கும் திட்டத்தை நிறைவேற்றிவைத்தன என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று 26-3-1966 அன்று நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் அன்றைய மாநகராட்சி கவுன்சிலராக இருந்த திரு. அன்பிற்கரசன் அவர்கள் பேசிய போது, அருட்தந்தை மன்தொவாணி அடிகள்தான் இந்நகர் அமைவதற்கு மூலக்காரணமாவார் என்று குறிப்பிட்டுள்ளார். முதலில் உருவான நகருக்கு மறைந்த இந்திய பிரதமர் திரு. லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் நினைவாகவும், அடுத்து உருவான நகருக்கு அன்றைய தமிழக முதலவராக இருந்த திரு. பக்தவத்சலம் அவர்கள் நினைவாகவும் பெயர்கள் சூட்டப்பட்டு, இன்று எல்லாவித வசதிகளையும் பெற்று பெருமளவில் வளர்ந்துள்ளது என்றால் அதற்க்கு வித்திட்டவரான அருட்தந்தை மன்தொவாணி அடிகள் அவர்களையே சாரும். தற்போது அவர் நினைவாக நிறுவப்பட்ட அவரது திரு உருவச்சிலை சாஸ்திரி நகர் புனித ஆரோக்கிய அன்னை திருத்தல எதிரில் சரியான பராமரிப்பின்றி குப்பை போடும் இடமாக காட்சியளிப்பது மிகவும் வேதனைக்குரியதாக இருக்கிறது. இதனை சீர்படுத்தி பேணிக்காப்பது நமது கடமைமட்டுமல்ல நாம் அவருக்கு காட்டும் மரியாதையுமாகும். மேலும் அருட்தந்தை அவர்கள் சாதி மத வேறுபாடின்றி அணைத்து பர்மா தமிழர்களையும் அரவணைத்து பல்வேறு உதவிகளையும் செய்து நமது வாழ்வில் ஒளியேற்றிவைத்த அருட்தந்தை மன்தொவாணி அவர்கள் மறைந்தாலும்(19-5-1967) அவரது புகழ் மறையாது. அவரது சேவைகளை இளம் தலைமுறையினரும், அவர்களது வாரிசுகளும் நினைவுக்கூறும் வகையில் அவரது உருவச்சிலை ஓரமாக செல்லும் தற்போது கிளினிக் சாலை என்று அழைக்கப்படும் சாலையை அவரது நினைவாக “அருட்தந்தை மன்தொவாணி” சாலை என்று பெயர் சூட்டுவது மிகவும் பொருத்தமாக இருக்கும்.
[vuukle-powerbar-top]

Recent Post