Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

என்றும் வாழும் தமிழர் கண்ட மெய்யியல்!   

பன்னெடும் காலம் தொட்டு தமிழர்கள் ஏதாவது வகையில் கடவுளை வணங்கியே வந்துள்ளனர். அது  எல்லை காவல் தெய்வமாக இருக்கலாம் அல்லது உருவமற்ற ஒளி வழிபாடாக இருக்கலாம் . தமிழ் புலவர்கள் இறைவனுக்கு காப்பு வைத்தே பாடல்களை இயற்றி உள்ளனர். தமிழ் தந்த சித்தர்கள் கடவுளை பற்றியும் இயற்கையின் ரகசியங்களை பற்றியும் நீண்ட நெடிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அந்த ஆய்வுகளின் போதே பல அறிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு கொடுத்தனர். 

உடலை கட்டிக் காக்க ஓகக் கலை, மனதை கட்டுப்படுத்தும் ஆழ்நிலை தியானக் கலை, உள்ளுறுப்புகளை செயல்பட வைக்கும்  வர்மக் கலை, மூச்சுப் பயிற்சி, நோய்களை குணப்படுத்தும் மருத்துவக் கலை, உலோகங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவரும் ரசவாதக் கலை, மொழியை செம்மைப் படுத்தும் இலக்கியங்கள், உலகம் வியக்கும் கட்டடக் கலை, இசைக் கலை, தற்காப்புக் கலை  போன்ற பல்வேறு கலைகளை  தமிழ் கூறும் நல்லுகத்திற்கு கொடுத்துள்ளனர் சித்தர்கள். இவர்கள் யாரும் கடவுள் மறுப்பாளர்கள் அல்ல. மாறாக இயற்கையோடு இசைந்து வாழ்ந்து இயற்கையின் ரகசியங்களை, உயிருக்கும் உடலுக்கும் உள்ள தொடர்புகளை பற்றியும் அண்டத்தில் உள்ள விண்மீன்கள் முதல் கோள்கள் வரையிலான  தொடர்புகளை குறித்தும் நமக்கு கூறி உள்ளனர். அதற்கான சான்றுகள் சித்தர் இலக்கியங்களின் கொட்டிக் கிடக்கின்றது.  

கடவுள் என்பது இல்லை என்று ஏற்றுக் கொண்டால் அதற்கான தேடல் முற்றுபெற்று விடும் . மெய்யியல் என்பதும் இத்தோடு முற்றுபெற்று விடும். தேடலில் தான் பல அரிய கண்டுபிடிப்புகள் பிறக்கிறது. இன்று உள்ள பல மெய்யியல் கருத்துக்களும் இந்த தேடலில் இருந்து தான் பிறந்தது. அது பௌத்தம், சமணம், ஆசிவகம், ஜென் தத்துவம் உட்பட அனைத்தும் தேடலில் இருந்தே பிறந்தன. இவைகளில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் எந்த அளவிற்கு இவற்றில் உண்மைகள் இருக்கிறது என்பதில் தான் வேறுபாடுகள் உள்ளது. 

இதை கடந்து மதங்கள் மனிதர்களை மூடத்திற்கு இழுத்து செல்லாமலும் இல்லை. இன்று உலகையே ஆட்டிப் படைக்கும் முன்னணி மதங்கள் உச்ச கட்ட மூடத்தை மக்களிடம் பரப்பி உள்ளதையும் நாம் மறுப்பதற்கு இல்லை. ஆனால் இதையே காரணமாக கொண்டு கடவுள் என்ற தேடலையே நாம் ஒதுக்குவது அறிவுடைமை ஆகாது. இங்கு கடவுள் என்று குறிப்பிடுவது ஏதோ வானத்தில் ஒரு சக்தி தனியே நின்று நம்மை இயக்குகிறது என்பது அல்ல. மாறாக எக்காலத்திலும் இருக்கும்  இயற்கையின் தன்மையை மனிதன் அறிய முற்படுதலே மெய்யியல் என்று கொள்ளுதல் வேண்டும். இத்தகைய ஆய்விற்கு தன்னை உட்படுத்தும் மனிதன் எந்த மதத்தையும், மார்கத்தையும் சார்ந்து இருக்க வேண்டியது இல்லை. அவனுக்கு சாதியோ, மதமோ, மொழியோ, இனமோ தடை இல்லை . இந்த தடைகள் அனைத்தையும் கடந்தே அவன் மெய்யியல் தேடல் தொடர்க்கிறது.  இந்த தேடலில் மிக உயர்ந்த நிலையை அடைந்து, உலகிற்கு தற்காலத்தில் தேவையான அரும்பெரும் சிந்தனைகள் கொடுத்தவர்களே சித்தர்கள் ஆவர். இப்படியாக சித்தர் வழியை கடைபிடிக்கும் மக்களும் வெகு சிலர் தான் உள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்த கருத்துகளை பெருவாரியாக மக்களிடம் கொண்டு சேர்க்காதது சித்தர்கள் தவறு அல்ல , நம்முடைய தவறே ஆகும் . இந்த இடைவெளியில் மதத்தையும் மூடத்தையும் தமிழக மக்களிடம் பரப்பியவர்கள் தான் மதவாதிகள் (எல்லா மதத்தினரும் அடங்குவர் ) . சாதியையும் மதத்தையும் மூடங்களையும் கடுமையாக சாடி உள்ளனர் தமிழ்ச் சித்தர்கள்.  

இப்போது நாம் களைந்தெறிய வேண்டியது பயனடையா மூட மதங்களே தவிர சித்தர்கள் அருளிய மெய்யியல் நெறிகளை அல்ல. தமிழர் நாட்டில் இருந்து உலகிற்கு வெளிப்பட்ட அற்புதமான படைப்புகள் தான் திருக்குறள், திருமந்திரம், திருவருட்பா, பராபரக்கண்ணிகள், கொன்றை வேந்தன், நாலடியார், திருவாசகம், சித்தர் இலக்கியங்கள் போன்றவை. 

ஆதலால் தமிழர் வாழ்வியலில் இறை மற்றும் மெய்யியல் தேடல் என்பது பிரிக்க முடியாதது. எது தமிழ்ச் சமூகத்தில் என்றும் வாழும் தன்மையுடையது. ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழையடி வாழையாக இந்த மெய்யியலை கற்றுணர்ந்தவர்கள் தோன்றிய வண்ணமே இருப்பார்கள். இந்த மண், இந்த மொழி அத்தகைய சான்றோர்கள் தோன்றி சிறக்க என்றும் ஏதுவானதாகவே இருந்து வருகிறது என்பது நமக்கெலாம் பெருமை தான். 

இப்படிப் பெருமை நிறைந்த தமிழினம்  இன்று சாதியாலும் மதத்தாலும் சண்டையிட்டு பெரும் பின்னடைவை நோக்கி பயணிக்கிறது என்பது வேதனையிலும் வேதனை. தமிழர்கள் பண்பாட்டில் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் இந்த ஒப்பற்ற மெய்யியலை நம் வாழ்வோடு இணைத்தாலே போதுமானது. தமிழர்கள் சாதி மத சழக்கை விட்டு உடலையும், மனதையும், அறிவையும் செழுமைப் படுத்தி இவ்வையகத்தில் வாழ்வாங்கு வாழ்வார்கள். உலகமே தமிழர்களை பார்த்து வியப்படையும் என்பதில் ஐயமில்லை. 

[vuukle-powerbar-top]

Recent Post