Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கறுப்புக் கொடியேந்தி முகநூலில் இந்திய சுதந்திர தினத்தை புறக்கணிக்கும் தமிழர்கள்.  

இந்தியாவில் உள்ள  தேசிய இனங்கள் இந்திய சுதந்திர தினத்தை உண்மையில் தாங்கள் சுதந்திரம் பெற்றதாக நினைத்து கொண்டாடினாலும், ஒடுக்கப்பட்ட பல தேசிய இன மக்கள் சுதந்திர தினத்தை கொண்டாடுவதில்லை. அதில் குறிப்பாக தமிழ் தேசிய மக்கள் இம்முறை இந்திய சுதந்திர தினத்தை கருப்பு தினமாகவே அனுசரிக்கின்றனர். அதற்கான பல காரணங்களை இணையத்தில் தமிழர்கள் எழுதி உள்ளனர். இந்திய அரசால் கடந்த 60 ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்ட தமிழர்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படையாக   யாருக்கும் அஞ்சாமல் எழுதி வருகின்றனர். சிலர் ஒருபடி மேலே சென்று இந்திய தேசிய கொடியை எரிக்கும் படத்தையும் இணைத்துள்ளனர். சிலர் தமிழ்த் தேசிய கொடியை முகநூலில் ஏந்துகின்றனர். இந்தியத்தின் மீது தமிழர்களுக்கு பெரும் அவமதிப்பும், வெறுப்பும் ஏற்பட காரணமாக இருந்தது ஈழத்தில் நடந்த இனப்படுகொலை தான் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதன் பின்பு தான் தமிழகத்தில் தமிழ்த் தேசிய எழுச்சி ஏற்பட்டது. தமிழர்கள் பலரும் விழிப்புணர்வு பெற தொடங்கினர் . அதை தொடர்ந்து இந்திய அரசு தமிழர்களை பல வழிகளில் வஞ்சித்தது தமிழ்ர்களை மேலும் கொதிப்படைய வைத்துள்ளது. இதன் உச்சகட்டம் தான் தமிழர்கள் இப்போது இந்திய சுதந்திர தினத்தை புறக்கணிப்பதாகும். தனித் தமிழ்நாடு என்னும் கோரிக்கையும் இப்போது வலுத்துவருகிறது. இதை பற்றியெல்லாம் பெரிய ஊடகங்கள் எழுதுவதில்லை. உண்மையை பெரிய ஊடகங்கள் துணிவாக எழுத முடியாதே . எனினும் உண்மையை யாரும் மறைக்க முடியாது. சமூக வலைத் தளங்கள் மக்களின் உணர்வுகளை வெளிக்காட்டும் . அந்த வகையில் இன்று முகநூல் முழுவதும் இந்திய சுதந்திர தினத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதை யாரும் மறுக்க முடியாது. 

ஏன் ஆகத்து 15 கருப்பு தினம் . சில காரணங்கலை முன்வைத்து உள்ளனர் தமிழர்கள் . 


* 1965இல் இந்தித் திணிப்பை எதிர்த்த தமிழர்களை, 300 பேருக்கும் 
மேலானோரை தமிழக மண்ணிலேயே சுட்டுக் கொன்றது இந்தியா!

* காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு ஆற்றுநீர் உரிமைகளை இழந்து 
வறட்சியில் நாம் தவிப்பதற்கு, முதற்காரணம் இந்தியா!

* தமிழர்களுக்கேச் சொந்தமான கச்சத்தீவு நிலப்பரப்பை, இன எதிரி
சிங்களனுக்கு தானம் அளித்து மகிழ்ந்தது இந்தியா!

* இந்திய அமைதிப் படை அனுப்பி, தமிழீழ மக்களை துடிக்கத் துடிக்க 
வேட்டையாடிக் கொன்ற இரத்தவெறி பிடித்த மிருகம், இந்தியா! 

* 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதை
படை கொண்டு தடுக்காமல், வேடிக்கை பார்த்து இரசித்தது இந்தியா!

* காவிரிப்படுகை - பெட்ரோல், குத்தாலம் - எரிவளி, சேலம் - இரும்பு, 
நெய்வேலி - நிலக்கரி என தமிழக வளங்களை கொள்ளையடிப்பது 
இந்தியா!

* வருமானவரி, நிறுவன வரி, சுங்க வரிகளில் மட்டும் 1 இலட்சம் கோடி 
தமிழ்நாட்டு மக்கள் பணத்தை வாரிச்சுருட்டிச் செல்லும் இந்தியா! 

* உலகமயப் பொருளியல் கொள்கையின் மூலம், தமிழகத்தை 
பன்னாட்டு - வடநாட்டு நிறுவனங்களுக்கு திறந்துவிட்டது இந்தியா! 

* சாதி இழிவு ஒடுக்குமுறையின் வேராய் நிற்கும் ஆரியப் 
பார்ப்பனியத்தின் அரச வடிவமாய் இன்றும் ஆணவத்துடன் நிற்பது 
இந்தியா! 

* தமிழை நடுவண் ஆட்சி மொழியாக்க, கல்வி மொழியாக்க, வழக்கு 
மொழியாக்க முடியதென்று இறுமாப்போடு அறிவிக்கிறது, இந்தியா!

* மூவாயிரம் ஆண்டுத் தமிழர் அடையாளத்தை, சட்டப்படி அங்கீகரிக்க 
மறுத்து, இல்லாத இந்திய அடையாளத்தை நம் மேல் திணிக்கும் 
இந்தியா!

* முள்ளிவாய்க்காலில் தமிழீழ மக்களைத் துடிக்கத் துடிக்க 
கொன்றொழித்த கொலைகாரர்களுக்கு ஆயுதம் அளித்து, நட்பாய் 
நிற்பது இந்தியா!

* கூடங்குளம் - கல்பாக்கம் அணுஉலைகளை வன்மையாகத் திணித்து 
நின்று, ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் சவக்குழி செய்தது இந்தியா!

* தமிழகத்தில் சமூகநீதி அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள 
இடஒதுக்கீட்டை முழுமையாக ஒழித்துக் கட்ட சதி செய்து 
காத்திருப்பது இந்தியா!

* பேரறிவாளன், சாந்தன், முருகன் - அப்பாவி மூன்றுத் தமிழரை 
தூக்கிலிட்டுக் கொல்லத்துடிக்கும் 'அகிம்சாமூர்த்தி” தான் இந்தியா!

* காஷ்மீர், அசாம், மணிப்பூர் என தேசிய இனத் தாயகங்களை, 
ஆயுதங்கொண்டு, ஆக்கிரமித்து வைத்துள்ள 'சனநாயக'வாதி தான் 
இந்தியா!


இன்னும் சிலர் கீழ்க்கண்ட கருத்தை முன்வைத்து உள்ளனர் 


இந்திய சுதந்திர தினத்தை புறக்கணித்து இந்திய தமிழக அரசின் அடக்குமுறைக்கு உட்படுத்தப் படும் கூடங்குளம் அணு உலை போராளிகளுக்கு துணை நிற்போம். 

ஈழத்தில் போரை நடத்தி பல ஆயிரம் தமிழ் மக்களை கொன்று குவிப்பதற்கு காரணமாக இருந்த இந்திய நாட்டின் சுதந்திர தினத்தை தமிழர்கள் நாம் புறக்கணிப்போம். போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் இலங்கைக்கு ஆயுதம் கொடுக்க தெரிந்த இந்தியாவால் ஒரு தீர்வை பெற்றுத் தர முடியவில்லை. விடுதலை புலிகளை தீவிரவாதிகளாக காட்டி , தமிழகத்தில் இருக்கும் ஈழத் தமிழர்களை முகாமில் அடைத்து கொடுமைப் படுத்தும் இந்திய சுதந்திர தினத்தை நாம் புறக்கணிப்போம். 

சிங்கள கடற்படைக்கு பயிற்சி கொடுத்தும் தமிழர்களை நடுகடலில் சுட்டு வீழ்ந்தும் சிங்கள கடற்படையை இதுவரை கண்டிக்காத காரணத்தால் தமிழ் மீனவர்கள் சார்பாக இந்திய சுதந்திர தினத்தை புறக்கணிப்போம். 

பிரிட்டிஷ் ஆட்சியாளரிடம் இருந்து ஆட்சியை பெற்றுக் கொண்டு பல் வேறு தேசிய இனங்களை சிறைபிடித்து வைத்துக் கொண்டு ஹிந்தி அல்லாதவர்களின் மொழியை அழித்து தேசிய இனங்களில் மொழி உரிமையை பறிக்கும் ஹிந்திய நாட்டின் சுதந்திர தினத்தை புறக்கணிப்போம். 

எல்லா தேசிய இனங்களின் வாழ்வாதாரத்தையும், இயற்கை வளங்ககளும், பண்பாடுகளையும் அழித்து வரும் இந்திய நாட்டின் சுதந்திர தினத்தை நாம் புறக்கணிப்போம். 

ஹிந்தியை தவிர வேறு எந்த மொழிக்கும் ஆட்சி மொழி அதிகாரம் வழங்காமல், மாநிலங்களுக்கு சுயாட்சி அதிகாரமும் வழங்காமல் எல்லா இனங்களுக்கும் அநீதி இழைக்கும் இந்திய சுதந்திர தினத்தை புறக்கணிப்போம் . 

பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து , அவர்கள் நிலங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் இந்திய நாட்டின் சுதந்திரதினத்தை ஒவ்வொரு குடிமகனும் புறக்கணிப்போம்.

சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாகும் பல கோடி மக்களின் சார்பாக ஆதிக்க சாதி வெறி பிடித்த இந்திய அலட்சிய அரசின் சுதந்திர தினத்தை மனித இனத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் புறக்கணிப்போம்.

விவசாயிகளின் வாழ்வை அழிக்கும் மீதேன் எரிவாயுத் திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தும் இந்தியாவின் சுதந்திர தினத்தை நாம் புறக்கணிப்போம். 

இன்னும் ஏராளமான விடயங்களில் தமிழினத்திற்கும் மற்ற தேசிய இனங்களுக்கும் எதிராகவே செயல்படும் இந்திய சுதந்திர தினத்தை நாம் புறக்கணிப்போம் . 
[vuukle-powerbar-top]

Recent Post